35. இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையா? அரசின் கடமையா? உங்களுக்கு என்ன பயன்? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
நமது இந்திய அரசமைப்பில், அடிப்படை உரிமைகளாக அசைக்க முடியாத கட்டமைப்பு செய்த விசயங்களில் ஒன்றுதான், இட ஒதுக்கீடு பிரச்சினை. இப்பிரச்சினை இதற்கு மேலும் நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து, முடிவெடுக்க வேண்டியது உங்களின் கடமையே.
இந்திய சாசனமாம் இந்திய அரசமைப்புக் கோட்பாடு 15 ன் கீழான அறிவுறுத்தலில், எந்தக் காரணத்துக்காகவும், எந்த விசயத்திலும், சம உரிமையைப் பறிக்கக் கூடாது என வலியுறுத்தும் அதே சமயம், அதன் உட்கோட்பாடான 15/3ல், “சமுதாயத்திலும், கல்வியிலும் பின் தங்கிய வகுப்பினரராக உள்ள, தாழ்த்தப்பட்ட, மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்துக்காக, சிறப்பான ஏற்பாடுகளை அரசு செய்வதை, சம உரிமையைப் பாதிப்பதாகக் கருதக்கூடாது” என அறிவுறுத்துகிறது.
அடுத்ததாக, கோட்பாடு 16ன் கீழான அறிவுறுத்தலில், அரசின் கீழான வேலை வாய்ப்பில் எந்த காரணத்துக்காகவும், யாருக்கும் சம வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என வலியுறுத்தும் அதேசமயம், அதன் உட்கோட்பாடான 16/4ல், ”அரசுப் பணிகளில், பின் தங்கிய வகுப்பினருக்கு, போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி. அத்தகையோருக்கு சில பணியிடங்களை, அரசு ஒதுக்கீடு செய்வதை சம உரிமையை பாதிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது” என அறிவுறுத்துகிறது.
இதில் இருந்து நாம் உரத்த சிந்தனைக்கு உரிய பல விசயங்களைத் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்.
அ) இட ஒதுக்கீடு என்பது எவர் ஒருவரின் அடிப்படை உரிமையும் கிடையாது. மாறாக, குறிப்பிட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, அரசே முன் வந்து கொடுக்கும் ஒரு நல்வாய்ப்பு சலுகைதான் என்பதால், அதை எனக்கு கொடுக்க வேண்டும் என யாரும் உரிமையோடு உரிமை கோர முடியாது.
ஆ) சமுதாயத்திலும், கல்வியிலும், ஒரு குறிப்பிட்ட வகுப்பினர்தான் பின் தங்கியுள்ளனர் என்பதில்லை. மாறாக, அனைத்து தரப்பிலும் உள்ளனர். அப்படிப்பட்ட அனைவரின் முன்னேற்றத்திற்கும் தேவையான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ய அரசை வலியுறுத்துவதுதான் சிறப்பான மற்றும் நியாயமான சங்கதியாக இருக்க முடியுமே தவிர, ஒரு சில குறிப்பிட்ட வகுப்பினரை மட்டும் குறிப்பிடுவது அல்ல.
இ) ஆனால், அப்படிச் செய்யாமல் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர்களின் பெயர்களைச் சுட்டிக் காட்டியதன் மூலம், சம உரிமையைப் பறிக்கும் செயலைச் செய்துள்ளதோடு, அதனால் அக்குறிப்பிட்ட அச்சமுதாயத்தை சீரழிவிற்கு இழுத்துச் சென்றாகி விட்டது என்பதே நன்கு ஆராய்ந்தால் கிடைக்கும் உண்மை.
ஈ) எப்படியெனில், கல்வியில் போதிய சலுகை அளித்திருந்தும், அதில் முறையாகப் படித்து முன்னேற முடியாத ஒருவரால், அடிப்படையில் அவருக்கே பலன் இல்லாத போது, அவரை பணியில் அமர்த்தி சலுகை காட்டியது போலவே, சம்பளத்தில் சலுகை குறைப்பு செய்து சம்பளம் வழங்காமல், சராசரியான கூலி கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன?.அதனால் நாட்டிற்கு என்ன பலன்?
இதை எல்லாம் உன்னிப்பாக கவனிக்கும் போது, ஆறு பேர் கொண்ட அரசமைப்பு வரைவுக்குழு, சாதி, மத பேதங்களை கடந்து, திறமையின் அடிப்படையில் அறிவை வளர்த்துக் கொள்ளவும், அதன் மூலம் விரும்பும் பணியைத் தேர்ந்தெடுத்து, தமது வளர்ச்சியோடு, நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் வகையில், மற்றவர்களுக்கு சவால் விடும் வகையில், அடிப்படை உரிமைகளில் விதி விலக்கு அளிக்காமல், தீப விளக்காகப் பிரகாசிப்பதற்கான வழி வகையை கண்டிருக்கலாம்.
“தேடல் இல்லாமல் விடியல் இல்லை: முயற்சி இல்லாமல் முன்னேற்றமில்லை” என்ற பழமொழிகளை உணராமல் கொடுத்த சலுகைகள், மேலும், அக்குறிப்பிட்ட சமுதாயத்தினரின் திறமையை குறைத்துள்ளதே தவிர, எந்த விதத்திலும் கூட்டியுள்ளதாக ஆதாரப்பூர்வமாக யாராலும் சொல்ல முடியாது என்பதை, சலுகையை எதிர் பார்க்காமல் தனது திறமையை வளர்த்துக் கொண்ட அச்சமுதாய மக்கள் மட்டுமல்லாது, வேறு எந்த மக்களை ஆய்வு செய்தாலும் இந்த உண்மையை உணர முடியும்.
இதன் மூலம், அக்குறிப்பிட்ட சமுதாயத்தினரின், திறமையை குறைக்க வேண்டும், சுலுகையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டுமே தவிர, தாங்களே முன்னேறி விடக் கூடாது என்று நன்றாகத் திட்டம் போட்டுத்தான், பணியிலும் இட ஒதுக்கீடுக்கு வழி வகை செய்துள்ளார்கள் என்பது, இதன் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது.
மேலும், அச்சமுதாய மக்களுக்காகப் போராடும், அச்சமுதாயத் தலைவர்களை ஆராய்ந்தால், அவர்களின் . நெருங்கிய சொந்தங்கள் யாரும் சலுகை அடிப்படையில், பணியில் சேர்ந்திருக்க மாட்டார்கள். மாறாக, தங்களின் திறமையை வளர்த்துக் கொண்டு அதிகாரங்களை, பதவிகளை நிலை நிறுத்திக் கொள்ளும் திறமை பெற்றவர்களாக.இருப்பார்கள்.
உண்மையில் யாருக்கும் எந்த தீங்கும் இல்லாமல், அச்சமுதாயத்தினரை மட்டுமல்லாது, கல்வியில் பின் தங்கியுள்ள அனைத்து சமுதாயத்தினரையும், முன்னேற்ற வேண்டும் என.அரசு விரும்பினால், கல்வியில் வேண்டுமானால் சலுகை அளிக்கலாம். அதுவும், அதிகபட்சமாக மேல் நிலைக்கல்வி வரைதான் அளிக்க வேண்டும். ஏனெனில், அதற்கு மேலான கல்விகள் எல்லாமே தொழில் சார்ந்த கல்விகள்.
தொழில் சார்ந்த கல்விகளில், மருத்துவம், தகவல் தொழில் நுட்பம், பொறியியல், ஆராய்ச்சி, போன்ற படிப்புகளே ஆகும். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்றாலும் கூட, பார்ப்பதற்கு அச்சிட்டு அழகாக பட்டய சான்றிதழ் இருக்கும் இல்லையா? அதுபோல மேற்சொன்ன பட்டப்படிப்புகளில்தான், நாட்டின் தன்மானமும், சுய மரியாதையும், வளர்ச்சியும் இருக்கிறது.
ஆனாலும் கூட, ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல, இத்துறை படிப்பில் தங்கப்பட்டயம் வாங்கி தேறியவர்களால் செய்யப்பட்ட,
- அறுவை சிகிச்சை உயிரைக் காக்காமல் பறிக்கிறது.
- தகவல் தொழில் நுட்பம் தள்ளாடி, பல நுட்பமான விசயங்களை அற்பமானதாக்கி இருக்கிறது.
- பொறியியல் துறையால் போடப்பட்ட சாலைகள், கட்டப்பட்ட கட்டிடங்கன் பொல பொல எனக் கொட்டிப்போய் இருக்கிறது.
- ஆராய்சிகள் கூட அல்வா கொடுத்துள்ளது.
ஆக்கப்பூர்வமாக படித்து, பட்டம் பெற்று, பணியில் உள்ளவர்களின் செயல்பாடுகளே மேற்கண்டவாறு சின்னாபின்னமாகி விடும் போது, அடிப்படை படிப்பில் சலுகை காட்டியும், முன்னேற முடியாதவர்களுக்கு இது போன்ற தொழில் நுட்ப துறைகளில் சலுகை காட்டி, பணியில் அமர்த்தப்படுவதால், நாட்டிற்கு எல்லா விதத்திலும் பாதகம்தானே தவிர எந்த விதத்திலும் சாதகம் இல்லை.
அதே சமயம், திறமையின் அடிப்படையில் உயர்ந்த பலர், சோதனைகளை சாதனைகளாகவும், வீழ்ச்சிகளை வெற்றிகளாகவும், மாற்றி, என்றென்றும் தம்மை யாரும் மறக்காதபடி, வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொண்டு, நமது திறமையின் அடிப்படையில் அல்லாது, சலுகையின் அடிப்படையில் எது ஒன்றையும் ஏற்றுக்கொண்டு எதற்கும் அடிமையாகி விடக்கூடாது. ஏன் தெரியுமா?
நமது அறுவை சிகிச்சைக்கு தகுதி இல்லாத மருத்துவரையோ, அல்லது தரமான கட்டிடத்தை கட்ட தகுதி இல்லாத பொறியாளரையோ நாடுவோமா? அதுபோலத்தானே நம் நலனை விட நாட்டு நலனைப் பேணிக்காப்பதில், நமது கடமை இருக்க வேண்டும்.
மொத்தத்தில், “சலுகை என்பது எவர் ஒருவரையும் அடிமைப்படுத்தி வைக்கத்தானே ஒழிய, அவரை ஆக்கப்பூர்வமாக ஊக்கப்படுத்துவதற்காக அல்லவே அல்ல”.
மொத்தத்தில் இந்திய அரசமைப்பு வரைவுக் குழு, இரண்டு வித கோணத்தில் சிந்தித்து, ஏதோ ஒரு விதத்தில் தனது ஆதிக்கத்தை, முழுக்க முழுக்க சுயநலத்தோடு செலுத்தி உள்ளது, என்று இதுவரை யாரும் சிந்திக்காத கோணத்தில்தான், இட ஒதுக்கீடு விசயத்தில் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
எது எப்படியோ, மொத்தத்தில் வரைவுக்குழு, எதில் கோட்டை விட்டதோ இல்லையோ, இட ஒதுக்கீடு என்ற விசயததில் நிச்சயம் கோட்டை விட்டு விட்டது, என்பது எனது ஆணித்தரமான கருத்து.