மகள் வாங்கிய கல்விக்கடனுக்காக தந்தை அடகு வைத்த நகையை திருப்பி தர மறுத்த வங்கி மீது வழக்கு
கல்விக்கடன் மகள் வாங்கியதால் தந்தை அடகு வைத்த நகையைத் திரும்பத் தர மறுத்த வங்கி 9 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆறுமுகநேரியை சேர்ந்தவர் பி.பத்மநாபன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: குடும்ப செலவுக்காக எனது நகைகளை ஆறுமுகநேரி கனரா வங்கியில் கடந்த 2015ல் 73 ஆயிரத்திற்கு அடகு வைத்தேன். அதன் பின்னர் வட்டி, முதல் அனைத்தையும் 2016 செப்டம்பரில் செலுத்திவிட்டு நகையை திரும்பக் கேட்டேன். வங்கி மேலாளர் நகைகளைத் திரும்பத் தர மறுத்துவிட்டார்.
எதற்காக நகைகளைத் தர மறுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு உரிய விளக்கம் வங்கி தரப்பிலிருந்து தரப்படவில்லை. இந்நிலையில், அடகு கடனை செலுத்தவில்லை என்றும் நகைகள் ஏலம் விடப்படவுள்ளன என்று 2016 செப்டம்பர் 30ல் எனக்கு வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்தது. பணம் முழுவதும் செலுத்திய எனக்கு நகையை ஏன் தரவில்லை என்று காரணம் கேட்டபோது, தெரியாமல் அனுப்பிவிட்டோம் என்று வங்கி மேலாளர் கூறினார்.
தேவையில்லாமல் எனது நகையை வங்கி நிர்வாகம் வைத்துள்ளது. இதனால், எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, எனக்கு வங்கி நிர்வாகம் 1 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதி ஆர்.நாராயணசாமி, உறுப்பினர் ஏ.சங்கர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கனரா வங்கி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தங்கள் வங்கியில் மனுதாரரின் மகள் 2 லட்சம் கல்விக் கடன் பெற்றுள்ளார். அந்த கல்விக்கடன் தொகையை திருப்பிச் செலுத்தி விட்டு, நகைகளை பெற்றுச் செல்லுமாறு பொதுவான உரிமையின் அடிப்படையில் உத்தரவிடப்பட்டது. இதற்காக மனஉளைச்சல் ஏற்படுத்தியதாகவும், சேவை குறைபாடு உள்ளதாகவும் கூறி இழப்பீடு கோர முடியாது என்று கூறப்பட்டுள்ளது.வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் அளித்த உத்தரவில், “ மனுதாரரின் மகள் வாங்கிய கல்விக்கடனுக்காக, பொதுவான உரிமையின் அடிப்படையில், மனுதாரரின் தங்க நகைளை பிடித்து வைக்க வங்கி மேலாளருக்கு அதிகாரம் இல்லை என்பதை மனுதாரர் தரப்பு நிரூபித்துள்ளது.
எனவே, மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும், சேவை குறைபாடிற்காகவும், வங்கி நிர்வாகத்திடம் இருந்து மனுதாரர் இழப்பீடு பெற உரிமை உள்ளது. அதனால், சேவை குறைப்பாட்டிற்காக 6 ஆயிரமும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 3 ஆயிரமும் மனுதாரருக்கு ஒரு மாதத்துக்குள் வங்கி நிர்வாகம் வழங்கவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
Source: dinakaran