10.உரிமையில் சரிசமமும், தண்டனையில் வேறுபாடும்.
ஆம்! கடமையை மறந்து உரிமையை மீறும் போது, ஏற்படும் குற்றத்துக்கான தண்டனை குறித்து விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டியதும் மிக முக்கியமல்லவா? உரிமைகளும், கடமைகளும் சரிசமமானது போலவே அல்லாமல், உரிமையில் சரிசமமும், தண்டனையில் வேறுபாடும் உண்டு என்பதும் சிறப்பு அம்சம்.
உரிமையில் சரிசமம் என்பதற்கு உதாரணமாக பல விசயங்களைப் பார்க்கலாம் என்றாலும் இங்கு மிக முக்கியமான ஒரு உரிமையை பற்றி பார்க்கலாம்.
இந்திய குடிமகனாக உள்ள ஒருவர், தனது கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் போது முறையான விவாகரத்து பெறாமல், மறு திருமணம் செய்துக் கொள்ள கூடாது எனவும்,. அப்படி செய்வது குற்றம் எனவும், அதற்கு ஏழு வருடம் சிறைக்காவல் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும் எனவும், இந்திய தண்டனை சட்டம் 1860-இன் பிரிவு 494 அறிவுறுத்துகிறது.
இந்த அறிவுறுத்தல் இந்திய குடிமகனாக வசிக்கும் ஒரு ஆண் முகமதியருக்கு பொருந்தாது. ஆனால், பெண் முகமதியருக்கு பொருந்தும். ஏனெனில், ஒரு ஆண் முகமதியர் அவர்களுக்கான சட்ட திட்டங்களின்படி, சாதாரணமாக நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களோடு குடும்பம் நடத்த முடியும்.
ஆனால், ஒரு முகமதியப்பெண், ஒரு ஆணை மட்டும்தான் திருமணம் செய்துகொள்ள முடியும். மேலும், முறையான விவாகரத்து பெற்ற பின்தான் வேறு ஆணை அப்பெண் முகமதியர் திருமணம் செய்து கொள்ள முடியும்.
அதுவும், முகமதியராக உள்ள ஒருவர் முகமதியர் அல்லாத வேறு மதத்தை சார்ந்தவரை திருமணம் செய்து கொண்டால், முகமதியர் சட்டப்படி அவருக்கு உள்ள உரிமைகளைக்கோர முடியாது என்பன போன்ற சங்கதிகள் அரபு நாடுகளில் அவர்களுக்கு என்று இருக்கும் சட்ட திட்டங்களாகும்.
சட்ட திட்டங்கள் என்று சொல்லுவதை விட, “சமயக் கோட்பாடுகள்” என்று சொல்லுவது சாலப் பொருத்தமாக இருக்கும்.
ஆம்! இதற்கு என்று தனியாக சட்ட திட்டங்கள் எதையும் வகுக்கவில்லை. மாறாக அவர்களின் சமய நூலான திருக்குரானில் கொள்கையாகவே கொஞ்சம் கொஞ்சம் வைத்திருக்கிறார்கள்.
எனவே, நமது அரசும் முகமதியர் திருமணம் தொடர்பான விசயங்களுக்கு சட்டம் எதையும் இயற்றவில்லை என்பதால்தான் நான்கு திருமணம் செய்து கொள்ளலாம் என்பதற்கு உரிமை வழங்கும் சட்டப் பிரிவை என்னால் குறிப்பிட முடியவில்லை.
இதே போன்றுதான், கிறித்துவர்களுக்கான திருமண விவகாரங்களும் பைபிளில் வரையறுக்கப்பட்டு உள்ளது என்றாலும், இந்தியாவை பொறுத்த மட்டில் இந்திய கிறித்துவ திருமண சட்டம் 1872 ஆனது, நடைமுறையில் இருந்து வருகிறது இவைகள் எல்லாம் உரிமைகள் தொடர்பானவைகள்.
பொதுவாக உலக அளவில் தண்டனைக்கான சட்டங்களை எடுத்துக்கொண்டால், அரேபிய சட்டங்கள் தான் மிக கடுமையானதாக இருக்கின்றன.
“அந்நாட்டு தண்டனைக்கான சட்டங்களில், அதிகபட்சமாக ஒருவர் என்ன குற்றம் செய்கிறாரோ, அதே குற்றம் அவருக்கு தண்டனையாக நிறை வேற்றப்படும். அதாவது, கண்ணுக்கு கண்; கைக்கு கை என்ற கொடூரமான வகையில், உச்சகட்டதண்டனையாக மரண தண்டனையை நிறைவேற்றுவது வரை தற்போதும் நடைமுறையில் நடந்து வருகிறது”.
ஆனால், நம் நாட்டிற்குள் குற்றம் புரியும் எந்த மதத்தை, இனத்தை சேர்ந்த நபராக இருந்தாலும் அவர்களுக்கான தண்டனை மனிதாபிமானத்துடன் கூடியதே! கூடவே சரி
சமமானதே! மாறாக, அந்நாட்டின் உரிமையைக் கொடுப்பது போன்று தண்டனையைக் கொடுப்பது அல்ல.
இவைகள் எல்லாம் நம் நாட்டைத் தவிர, உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத, எந்த நாடும் பெருமையோடு மார்தட்டிக் கொள்ள முடியாத மிகச் சிறப்பான விசயங்களாகும்.