34. சட்டத்தின் மூலம் கிடைக்கும் சம உரிமையும், பாகுபாடும். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
சட்டத்தின் மூலம் சம உரிமை எப்படி பாதுகாக்கப் படுகிறதோ, அதேபோல, தேவையான பாகுபாடும் பாதுகாக்கப் படுகிறது. சமயம், சாதி, இனம், பால் அல்லது வேறு எந்த காரணத்துக்காகவும், அரசாங்கம் எந்த விதத்திலும் பாகுபாடு காட்டக் கூடாது என, கோட்பாடு 15 வலியுறுத்தும். அதே சமயம், சமுதாயத்திலும், கல்வியிலும் பின் தங்கியுள்ள மக்களின் முன்னேற்றத்திற்காக, சிறப்பான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்வதைத் தடைச் செய்வதாகக் கருதக் கூடாது, என கோட்பாடு 15/3 விதிவிலக்கு அளிக்கிறது.
இது போன்ற விதி விலக்குகள் எல்லாம், “விளக்காக எரிவதற்காகத்தான் இருக்க வேண்டுமே தவிர, எந்த காரணத்தைக் கொண்டும் விலக்கி வைப்பதற்காக இருக்க கூடாது”
உங்களின் குழந்தைகளில் ஒன்று மட்டும் சரியாக படிக்காத போது, அதனையும் மற்ற குழந்தைகளை போலவே, நன்றாக படிக்க வைக்க வேண்டியது, பெற்றோர்களின் கடமை என்பதால், கடமையை நிறைவேற்றும் பொருட்டு, அதற்கு டியூசன் போன்ற சிறப்பான வகுப்புகளை ஏற்பாடு செய்வது, எந்த விதத்திலும் மற்ற குழந்தைகளின் உரிமையைப் பறிக்கும் செயல் எனச் சொல்ல முடியாது.
ஏனெனில், நன்றாக படிக்கும் ஒரு குழந்தை, உடல் அளவில் வலிமை இல்லாமல் இருக்கலாம். அதற்கு தேவையான வலிமையை சேர்க்கத் தேவையான சிறப்பான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதும், உங்களின் கடமையே என்பதை உணர்ந்து, அதற்கான ஊட்ட சத்துள்ள உணவைத் தருவது, மற்ற குழந்தைகளின் உரிமையைப் பறிப்பது ஆகாது.
ஆனால், “இவையெல்லாம் அடிப்படையில் செய்யப் வேண்டிய ஒன்றே தவிர, ஆயுள் முழுவதும் செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல”.
ஏன் தெரியுமா? ”ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதாலும், இதற்காக கூடவே ஆயுள் முழுவதும் இருக்க முடியாது என்பதாலும்தான்”.