17. நமது அரசமைப்பின் நெகிழும், நெகிழாத் தன்மைகள்!
இருபத்தி இரண்டு பாகங்களைக் கொண்ட, நமது இந்திய அரசமைப்பில், ஏழாம் பாகமும், ஒன்பதாம் பாகமும் நீக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள ஒவ்வொரு பாகமும் முக்கியமானதுதான் என்றாலும், மிக மிக முக்கியமான பாகங்கள் மூன்றும், நான்கும்தான்.
பொதுவாக நமது இந்திய அரசமைப்பைப் பற்றி தெரிந்தவர்கள் பேசும்போது, அரசமைப்பு நெகிழும் மற்றும் நெகிழாத தன்மை உடையது என்பார்கள். நெகிழும் தன்மை என்றால், வளைந்து கொடுக்கக் கூடியது, அல்லது மாற்றக்கூடியது என்று பொருளாகும். நெகிழாத் தன்மை உடையது என்றால் வளைந்து கொடுக்காதது, அல்லது மாற்ற இயலாதது என்று பொருள்படும்.
ஆம்! இந்திய அரசமைப்பில் மாற்ற இயலாத சங்கதிகள், மற்றும் மாற்றத்துக்கு உரிய சங்கதிகள், என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த மாற்றங்களை யார் வேண்டுமானாலும் உச்சநீதிமன்றத்தின் துணையுடன் செய்திட முடியும்.
இந்திய அரசமைப்பின் பாகம் மூன்றானது, அடிப்படை உரிமைகளைக் குறித்து விளக்குவதாகும். இந்த அடிப்படை உரிமைகள் குறித்த பாகத்தை, யாரும், எந்த காலத்திலும், மாற்ற இயலாது என்று கோட்பாடு 368 / 3 இன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது கோட்பாடு 12 முதல் 35 வரையிலான அடிப்படை உரிமைகளில், யாரும் எந்த விதத்திலும் திருத்தம் செய்ய முடியாது. இது தவிர்த்து, மற்ற கோட்பாடுகள் எதிலும் திருத்தம் செய்ய முடியும். இவைகள்தான் நெகிழும், நெகிழாத தன்மைகள் என்கிறோம்.
திருத்தம் செய்ய முடியாத அடிப்படை உரிமைகளில், தொலைநோக்குப் பார்வையில்லாத, முற்போக்குச் சிந்தனை இல்லாத, முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்ற, பொது நோக்கம் இல்லாத ஒரு சங்கதியும், இச்சங்கதியின் பின் விளைவுகளை ஆராயாமலும், ஆராய்ந்து உணர முயற்சிக்காலும், தேவையில்லாது சேர்க்கப்பட்ட ஒரு சங்கதி, நாட்டில் இன்று பல்வேறு பிரச்சினைகளை, குழப்பங்களை ஏற்படுத்த, எப்படி எல்லாம் காரணமாய் இருக்கிறது என்பதையும், தக்க சமயத்தில இக்களஞ்சியத்தில் பார்ப்போம்.