15. சட்டம் தெரியாமல் செய்தாலும் குற்றமே!
நாம் செய்யும் ஒரு செயல், சட்டப்படி குற்றம் என்னும் போது, ”அச்செயல் சட்டப்படி குற்றம் என்பதை தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் குற்றம் குற்றமே என்று, எழுதப்படாத ஒரு அநியாய சட்டத்தை இன்றும் நம் நாட்டில் நடைமுறையில் வைத்து இருக்கிறார்கள்”.
இந்த ஒரு அநியாய நடைமுறையை மேற்கோள்காட்டியே, சட்டக் கருத்தாளர்கள் வாய்க் கிழிய பேசி, இதுவரையிலும் காலத்தை ஓட்டி வந்திருக்கிறார்களே ஒழிய, இந்நடைமுறை நம் நாட்டில் எப்படி வந்தது? யாரால் கொண்டு வரப்பட்டது? ஏன் கொண்டு வரப்பட்டது? அப்படிக் கொண்டு வரப்பட்டதால் யாருக்கு என்னென்ன நன்மைகள் ஏற்பட்டன? என்பதை எல்லாம் சிந்தித்து விளக்கியதாக தெரியவில்லை, தமக்கு விளங்கினால்தானே, மற்றவர்களுக்கு விளக்குவதற்கு.
இதையே நாமும் செய்ய முடியுமா? முடியும். ஆனால், அப்படிச் செய்ய மாட்டோம் என்பதை பறைச்சாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டதுதானே இக்களஞ்சியம்.
ஆங்கிலேயர் தமது ஆட்சிப் பீடத்தை நிரந்தரமாக தக்க வைத்துக்கொள்ள, உயர் கல்வியில் மட்டும் சட்டப்படிப்பை கொண்டு வந்து, வக்கீல்களையும், வக்கீல்களில் இருந்து நீதிபதிகயும் உருவாக்கினார்கள் என்பது பற்றி முன்பாக பார்த்தோம்.
இதே போல, தங்களின் சுய நலத்திற்காகவும், லாபத்திற்காகவும் மட்டுமே கொண்டு வரப்பட்ட எழுதப்படாத சட்டம் தான், “சட்டத்தை தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் குற்றம் குற்றமே!’ என்பதாகும்.’
சரி, ஆங்கிலேயர்கள்தான் தங்களின் ஆதிக்கத்திற்காகவும், நம்மை அடக்க வேண்டும் என்பதற்காகவும், இது போன்று எந்த விதத்திலும் நியாயமில்லாத, ஒரு வெற்றுச் சடங்கான நடை முறையை வைத்திருந்தார்கள் என்றால், “நெற்றிக்கண் திறப்பினும், குற்றம் குற்றமே என்று நீதிநெறி பிறழாது வந்த நமக்கு இது தேவையா?”
இப்படி ஒரு விசயம் இல்லை என்றால், எல்லோரும் துணிந்தும், தெரிந்தும் தவறு செய்ய ஆரம்பித்து விடுவார்களே எனக் கருதலாம். அடிப்படைக் கல்வியில் சட்டக்கல்வியை கொண்டு வந்தால் மட்டுமே, இது போன்ற சட்டப்பிரச்சினைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
எனவே, பாலியல் கல்வியும், பலாத்கார கல்வியும் தேவை என்பது முதல் கல்விக்காக போராடும் அனைவரும், “நாம் கருவாக உருவாவது முதல் கரியாக உறுமாரும் வரை, நம்மோடு பின்னிப்பிணைந்திருக்கும் சட்டக்கல்விக்கு முதலில் குரல் கொடுத்தால் மட்டுமே, நாட்டில் நிலவும் ஒட்டு மொத்த குந்தகங்களையும் களைய முடியும்”.