16. மக்களைப் பிரித்தாளவே காவல்துறை?
ஆங்கிலேயர் ஆட்சி அடித்தளம் அமைக்க உதவியது நீதிமன்றம் என்றால், நீதிமன்றத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது காவல்துறையே.
மக்களின் ஒற்றுமையைப் பிரித்தால்தான் நாம் அவர்களை ஆள முடியும், நாமும் வாழ முடியும் என்று திட்டம் தீட்டிய ஆங்கிலேயர்கள், நமக்குள் தகராறு ஏதும் எற்பட்டு அது தண்டனை விதிக்கத்தக்க குற்றமாக இருந்தால், “அது அவர்களுக்கே இழைக்கப்பட்ட குற்றம்” என்று உணர்வு பூர்வமாக நாம் நம்பும் விதத்தில், அவ்வழக்கை தாமே பொறுப்பேற்று நடத்துவது என்று முடிவெடுத்துள்ளது.
அதற்கான அச்சாரமாகத்தான், காவல் நிலையத்தில் வழக்கை பதிவு செய்தல், புலனாய்வு செய்தல், வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அரசே வழக்கை வழி நடத்தி தண்டனை வாங்கித் தருதல், என்ற விஷயங்களில், உள்நோக்கத்தோடு பல்வேறு சட்ட திட்டங்களை வகுத்து செயல்பட்டு உள்ளனர்.
மேலும், அரசுக்கு எதிரான உரிமையியல் பிரச்சினையில், தங்களின் ஆதிக்க எல்லையை யாரும் உரிமை கொண்டாடி விடக்கூடாது என்பதற்காகவே, உரிமையியல் தொடர்பாக தொடுக்கப்படும் வழக்கை எதிர்கொள்ள அரசுத்தரப்பு வக்கீலை நியமித்துள்ளது.
குற்றவியலிலும், உரிமையியலிலும் நேர் எதிரான நடவடிக்கைகளுக்காக, அரசே தனது தரப்பில் வக்கீல்களை நியமித்து உள்ளது என்பதன் மூலம், ஆங்கிலேயரின் மறைமுகமான உண்மையான நோக்கமும், திட்டமும் தெளிவாகவே உங்களுக்கு புரிந்து இருக்கும்.
இதே நடைமுறையை இன்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களாட்சி நாட்டில் தொடர்வதற்கு என்ன காரணம் என்று சிந்திக்க வேண்டியுள்ளது. அரசு மக்களை பிரித்தாள நினைக்கிறதா? அல்லது என்ன செய்கிறோம் எதற்காக செய்கிறோம் என்று விளங்காமல் செய்கிற அரசின் சட்ட அறியாமையா?
இந்திய அரசமைப்புக்கு வித்திட்டவர்கள் மட்டுமல்லாது, தற்போது சட்டத்தறையில் ஈடுபாடு உள்ளவர்களும் கூட, இது பற்றி ஏன் சிந்திக்கவில்லை தெரியுமா? உண்மையில்
இவர்களுக்கெல்லாம் ஆராய்ச்சி செய்யும் திறனோ, சிந்திக்கும் திறனோ கிடையாது. மாறாக, காப்பியடிக்கும் திறன் மட்டுமே உண்டு. இது குறித்து பிற்பகுதியில் விரிவாகப் பார்ப்போம்.