3/36. விசாரணையில், தண்டனையில் உள்ள அடிப்படை உரிமைகள். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
அளவு கடந்த அடிப்படை உரிமையை கட்டுப்படுத்தி, நியாயத்தை நிலைநாட்டத் தேவையான சட்டங்களை, அரசு இயற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை முன்பாக பார்த்தோம். அப்படி கட்டுப்படுத்தும் போது, அதிலும் சில உரிமைகள் அடிப்படை உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.
அவைகளாவன,
- கோட்பாடு 20/1 படி, என்ன குற்றம் செய்தீர்களோ. அதற்கு சட்டப்படி என்ன தண்டனையோ. அதை மட்டும் தான் விதிக்க வேண்டும்.
- கோட்பாடு 20/2 படி, ஒரு குற்றத்திற்கு, ஒரு தடவைக்கு மேல் தண்டிக்க கூடாது.
- கோட்பாடு 20/3 படி, குற்றம் புரிந்ததாக ஒப்புக் கொள், என குற்றம் சாட்டப்பட்டவரை வற்புறுத்த கூடாது.
குறிப்பு: இக்கோட்பாடு, குறிப்பாக, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கே பொருந்தும் என்றாலும் கூட, எவர் ஒருவரையும் வற்புறுத்த கூடாது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.
- கோட்பாடு 21 படி, சட்டபடியான விசாரணை இல்லாமல் எந்த ஒரு நபரின் உயிரையும், உரிமையையும் பறிக்க கூடாது.
- கோட்பாடு 22/1 படி, எதற்காக கைது செய்யப்பட்டு உள்ளீர்கள் என, எழுத்து மூலம் தெரிந்து கொள்ளவும், நீங்கள் விரும்பிய வழக்கறிஞரை சந்தித்து, ஆலோசனை பெறவும், மற்றும் தற்காத்துக் கொள்ளவும் உரிமை இருக்கிறது.
குறிப்பு; இதில் “வழக்கறிஞர் என்பது”, சட்டப்படிப்பு முடித்தவர்கள் என்பது மட்டுமல்ல. உங்களுக்கு நல்ல ஆலோசனை வழங்கும் மற்றும் நீங்கள் விரும்பும் எந்த நபரும் அடங்குவர்.
மேலும் “குற்ற விசாரணை முறை விதிகள் 1973, விதி 2/17 படியும், மற்றும் உரிமையியல் விசாரணை முறை விதிகள், 1908, விதி 2/15 படியும், நீதி மன்றத்தின் அனுமதியோடு ஆஜராகி, வாதாடுகிறவர் வழக்கறிஞர்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
நமக்கு நாமே வாதாடுவது என்பது, யாரையும் கேட்காமல், நமக்கு நாமே, சுதந்திரமாக எடுத்துக் கொள்ளும் அடிப்படை உரிமை என்பதால், வக்கீல்களை விட நாம் இங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறோம்.
அதாவது உங்களின் பிரச்சினையை, உங்களைத் தவிர வேறு யாராலும் மிகச் சரியாக சொல்ல முடியாது, என்பதுதான், நாமே நீதிமன்றத்தில் வாதாடுவதன் முக்கிய அடிப்படை நோக்கம். உங்களின் பிரச்சினை உங்களுக்கு அடுத்தபடியாக யாருக்குத் தெரியும்? உங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள, உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கோ, அல்லது உற்ற நண்பர்களுக்கோ, அல்லது என்னைப் போன்ற சட்ட வழிகாட்டிகளுக்குத்தானே தெரியும்!
இதன் அடிப்படையில், ஒருவரோடு நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள், அதற்கான காரண காரியங்களை எடுத்துக்கூறி, அவருக்காக வாதாட முடியும் என்றாலும், நீதிமன்றத்தில் அனுமதிப்பார்களா? என்பது சந்தேகமே.
- கோட்பாடு 22/2 படி, கைது செய்யப்பட்ட நபரை, 24 மணி நேரத்திற்குள், நீதிபதியின் முன்பாக ஒப்படைக்க கோரும் உரிமை உண்டு.
- கோட்பாடு 22/4 படி, சட்டப்படியான தடுப்பு காவல், அல்லது தண்டணையின் கீழ், சிறை வைக்கப்பட்டிருந்தாலே ஒழிய, மற்றபடி, விசாரணை கைதியாக 90 நாட்களுக்கு மேல், எவரையும் சிறையில் வைக்க இயலாது என கோரும் உரிமை.
கோட்பாடு 22/5 படி, ஒருவரை தடுப்பு காவலில் வைக்கும் போது, அதற்கான காரணத்தை, கூடிய விரைவில் கோரவும், அந்த தடுப்புக்காவலை எதிர்த்து, தக்க அதிகார மன்றத்தில் முறையீடு செய்யவும் உரிமை உண்டு.