இந்திய அரசமைப்பு உருவானது எப்படி?
நம்நாடு குடியரசாகி 60 ஆண்டுகள் ஆகியும்கூட, நமது இந்திய அரசமைப்புபற்றி சட்ட அறிவு உள்ளவர்களே தெரியாமல் இருப்பது ஒரு புறம், செய்யப்படும் விவாதம் மற்றொருபுறம், மக்கள் எவ்வளவு தூரம் சட்ட அறியாமையில், சிந்தனைத் திறன் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை பறைச்சாற்றுகிறது.
நமது இந்திய அரசமைப்பை குறிப்பிட்ட ஒருவர் மாத்திரமே எழுதினார் என்றும், எனவே அவர் இஷ்டத்திற்கு எழுதிக் கொண்டார் என்பதும் ஒரு தரப்பாரின் விதண்டாவாதம். இல்லையில்லை, எழுதியதுதான் அவரே தவிர, ஒரு குறிப்பிட்ட சிலருக்கு தேவையானவாறு, வலுக்கட்டாயமாக அவர் எழுத வைக்கப்பட்டார், என்பது மற்றொரு தரப்பினரின் விதண்டாவாதம். இப்படி, இந்திய அரசமைப்பு உருவான அடிப்படையே தெரியாமல் பல்வேறு சங்கதிகள் பொய்யாக பரப்பப்பட்டுள்ளன.
இவைகள்தான் உண்மை என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது உண்மையல்ல என்பது என் ஆணித்தரமான கருத்து. அப்படியானால், உண்மை என்ன என்பதை சற்று விரிவாக பார்த்தால்தானே புரியும்!
முன்பாக, இந்திய அரசமைப்பு வரைவுக்குழுவில் ஆறு பேர் இடம் பெற்று இருந்தனர் என்பதையும், அதற்கான தலைமை பொறுபபை மட்டுமே அம்பேத்கார் ஏற்றிருந்தார் என்பதையும், மீண்டும் இங்கு நினைவில் கொள்வோம். இந்த ஆறு பேரும் சேர்ந்து எழுதியதுதான் நமது இந்திய அரசமைப்பா? என்றாலும் இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.
ஆம்! நீங்கள் உடுத்தியிருக்கும் உடையை யார் தயார் செய்தது நீங்களா? இல்லைதானே! உங்கள் உடை தயாரானது எப்படி?
பருத்தி விதையை விற்றவர், அதை தனது நிலத்தில் விதைத்தவர், விதைத்ததை பயிராக பராமரித்து பஞ்சாக பறித்தவர், அப்பஞ்சை மொத்தமாக கொள்முதல் செய்தவர், அதை நூலாக திரித்தவர், நூலுக்கு சாயம் இட்டவர், சாயம் இட்ட நூலை துணியாக நெய்தவர், அதை தைத்தவர், பின் விற்றவர், அதை வாங்கியவர் என்று ஒரு உடையை தயார் செய்வதில் எத்தனையோ பேரின் பங்கு இருக்கிறது.
இதில் அதிகபட்சமாக வாங்கியது மட்டுமே நீங்களாக இருக்கலாம். ஒரு சிலர் விதிவிலக்காக மற்ற ஏதாவதொரு ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபட்டு இருக்கலாமே ஒழிய, அனைத்தையும் ஒருவரே செய்திருப்பது என்பது இயலாத காரியம். இதற்கான காரணம் அதற்கான வாய்ப்பின்மையும், வசதியின்மையும், திறமையின்மையுமே!
இதில் சிறப்பாக கவனிக்கத்தக்க அம்சம் என்னவெனில், சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒரே இடத்தில் நடக்காமல் வெவ்வேறு இடத்தில், வெவ்வேறு நபர்களால் நடந்து உள்ளதுதான்.
இதே போலத்தான் நமது இந்திய அரசமைப்பும்.
“எந்தெந்த சுதந்திர நாட்டு அரசமைப்புகளில், என்னென்ன விசயங்கள் சிறப்பாக உள்ளன, அது நமக்கு எப்படிப் பயன்படும் அல்லது தேவையானதாக இருக்கும் என்பதை ஆராய்ந்து, பல நாடுகளின் அரசமைப்புகளில் இருந்து கருத்துக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு தொகுப்புதான்” நமது இந்திய அரசமைப்பு ஆகும்.
இந்திய அரசமைப்பின் சிறப்பு அம்சங்களும், அதற்கு முன் மாதிரியாக அமைந்த நாடுகளும்:-
அடிப்படை உரிமைகள் – அமெரிக்கா.
அடிப்படைக் கடமைகள் – அயர்லாந்து.
அரசமைப்புத் திருத்தம் – தென்னாப்பிரிக்கா.
மத்திய மாநில அரசுகளின் அதிகார பாகுபாடு -கனடா.
அவசர நிலை பிரகடனம் – ஜெர்மன்.
குடியரசுத் தலைவரின் அதிகாரம் – இங்கிலாந்து.
பாராளுமன்ற அமைப்பு – இங்கிலாந்து.
பிரதமர் அதிகாரம் – இங்கிலாந்து.
அரசமைப்பு மட்டுமல்லாது, நம் நாட்டில் இருக்கும் பல்வேறு சட்டங்களும் கூட, மற்ற நாட்டு சட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டதுதான்.
எடுத்துக்காட்டாக,
இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறை விதிகள், சிறைச்சாலைகள் மற்றும் விதிகள் என பலவற்றைச் சொல்லலாம். 1947-க்கு முன்பாக இயற்றப்பட்டு நம் நாட்டில் அமலில் இருக்கும் சட்டங்கள் எல்லாம் இங்கிலாந்து நம்மை ஆண்ட போது கொண்டு வரப்பட்ட சட்டங்களே என்பதால் அவைகள் அனைத்தும் அந்நாட்டின் முன் மாதிரி சட்டங்களே ஆகும்.
அப்படியானால், 1947-க்கு பிறகு நமது ஆட்சியாளர்களால் இயற்றப்பட்ட சட்டங்கள் எல்லாம், நமது சுய சிந்தனையில் உருவாகியதா? என்றால் அதுவும் இல்லை. மாறாக, பல்வேறு நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட முன் மாதிரியான சட்டங்களே ஆகும்.
இதற்கு தக்க எடுத்துக்காட்டாக தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்களைச் சொல்லலாம். தொழிலாளர் நலன் குறித்த சட்டங்கள் அனைத்தும் சோவியத் ரஷ்யாவை முன்மாதிரியாகக் கொண்டதாகும். சோவியத் ரஷ்யாவில் தொழிலாளர் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1923. நமக்கு இயற்றப்பட்ட ஆண்டு 1947 ஆகும்.