14. மநு தர்மம்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாடு மன்னர் ஆட்சியில் இருந்த போது, மநுநீதி தர்மம் என்ற கோட்பாட்டின் படியே தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன. இம்மநு தர்மம் எவ்வளவு காலம் அமலில் இருந்திருக்கும் என்று சரியாகத் தெரியவில்லை. என்றாலும்கூட சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் அமலில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
நமது அண்டை நாடான நேபாளத்தில், இந்த ஆண்டு வரை இருந்து வந்த மன்னர் ஆட்சியில், மநு தர்மத்தின்படிதான் மன்னராட்சி நடந்துள்ளது. தற்போது மட்டுமே நேபாளத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, குடியரசு ஆட்சிக்கான அடித்தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இம்மநு தர்ம நூல்தான் மன்னர்களின் அரசமைப்பு. அதில் உள்ள சங்கதிகளை நிறைவேற்றுவதுதான் மன்னர்களின் கடமை.
மநுதர்மத்தை விட மேலான தாமத்தை கடைப்பிடித்த அரசன்தான். மநுநீதிச் சோழன். மன்னர்களான அரசர்கள் மநு தர்மத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதை மட்டுமே கடைப்பிடித்து, மக்களுக்கு எதிராக மக்களால் புரியப்படும் குற்றங்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கி வந்தனர்.
அத்தகைய மன்னர்களுக்கு மத்தியில், “ஒரு பசுவின் கன்றுக் குட்டியை தன் மகன் கவனக்குறைவாக தேரோட்டிச் சென்று தேரை ஏற்றி கொன்று விட்டான் என்ற உண்மை தெரிந்ததும், அதே தேரை ஓட்டி தன் மகனையும், தானே கொன்றவன்தான் மநுநீதிச் சோழன் என்பது வரலாறு”
இம்மநு தர்மத்தில் மனிதர்கள் மூன்று விதங்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கான தண்டனைகள் பல்வேறு வித்தியாசங்களுடன் வழங்கப்பட்டு வந்தன.
ஒரு சாரார் செய்யும் ஒரு சில குற்றங்கள் குற்றமே அல்ல என்றும், அதே சாரார் செய்யும் குற்றங்கள் மற்ற இரு சாரார்களைக் காட்டிலும், தண்டனை அதிகமாக விதிக்கத்தக்கது எனவும் வரையறுத்து உள்ளனர்.
ஆனால், எப்போதும் பேதம் பேச நினைக்கும் விதண்டாவாத குணம் உள்ளவர்கள், உண்மைகளை மூடி மறைத்து, மநு தர்ம கோட்பாடு ஒரு சிலரின் நல்வாழ்வுக்காகவே இயற்றப்பட்டது என்று முழக்கமிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். மொத்தத்தில் வரலாறுகளை திரித்துக் கூறுவதில் வல்லவர்களாய் இருக்கிறார்களே ஒழிய, நடப்பை அப்படியே சொல்லும் நல்லவர்களாக இருப்பதில்லை.
”ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்திய போது, தமது ஆட்சி பீடத்தை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ளவே முதன் முதலாக நம் நாட்டில் சட்ட திட்டங்களையும், நீதிமன்ற கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி உள்ளனர்”. ஆனால் எந்த ஆண்டில் இவைகளை ஏற்படுத்தினர் என்பது குறித்த வரலாற்று ஆராய்சிக்கு நான் செல்லவில்லை.
அப்படி இருந்தும் கூட பல்வேறு மொழிகளை கொண்டுள்ள நம்மை, நமது மொழிகள் தெரியாமல் எப்படி கட்டுப்படுத்தி ஆள்வது? என்று திக்கு திசை தெரியாமல் திகைத்து, பின்னர் திட்டம் ஒன்றைப் போட்டனர்.
அத்திட்டத்தின் மூலம் கிடைத்த தீர்வுதான், நமது நாடு சுதந்திரம் பெற்ற பின்னும், பல அடிமைத்தனங்களுக்கும், அலங்கோலங்களுக்கும், நியாயத்திற்காக அல்லல்பட வேண்டிய அவலச் சூழ்நிலை உட்பட அனைத்திற்கும், காரணக் கர்த்தாவாக இருக்கும் வக்கீல்களும், நீதிபதிகளும் என்றால், உங்களுக்கு எல்லாம் என்னடா இது புதுக்கதையாக இருக்கிறது என்று எண்ணத் தோன்றும்.
நீங்கள் நினைப்பது போல் இது புதுக்கதையல்ல, பழைய கதைதான். ஆனால் இந்த உண்மை தற்போதுதான் நம்மால் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவ்வெட்ட வெளிச் சத்திற்கு அடித்தளமிட்டவர் யார் தெரியுமா? “மகாத்மா காந்தி தான்’.அவர் எழுதிய இந்திய சுயராஜ்யம் என்ற நூலில்தான் இது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் காந்தியவாதிகள் பலர் இருந்தாலும் கூட, காந்தியின் இக்கருத்தை இதுவரை யாரும் வெளியில் கொண்டு வந்ததாக தெரியவில்லை. காரணம் காந்தியவாதிகள் பலருக்கும் சட்டம் மற்றும் சட்டத்துறை சார்ந்தவர்கள் மீது, இல்லாத, பொறுப்பும் அக்கறை இன்மையுமேதான்.
“காந்திய கொள்கைகள் அனைத்தும் அழியாமல் இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள், நம்நாட்டு வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்தாதது எந்த விதத்திலும் நியாயமல்ல”. மேலும், அவர்கள் முதலில் மேற்கொள்ள வேண்டிய தலையாய கடமை இதுவேயாகும்.
நம்மொழி தெரிந்தவர்களை, ஆதாரங்களாகக் கொண்டுதானே, நம்மை சட்டப்படியான தண்டனைகள் மூலம் கட்டுப்படுத்தி, ஆங்கிலேயர்களால் ஆள முடியும் என்ற அடிப்படைக் காரணத்தால், நம் நாட்டு உயர் கல்வியில் சட்டக் கல்வியை கொண்டு வந்ததோடு, சட்டக்கல்வியை பலரும் விரும்பிப் படிக்க வேண்டும் என்பதற்காகவே, படிப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி ஊக்குவித்து உள்ளனர்.
“நம் நாடு அடிமைத்தனத்தில் நீடிப்பதற்கு நாம்தான் அடிப்படைக் காரணமாகப் போகிறோம் என்ற அறிவு கூட இல்லாமல், வக்கீலுக்கு படித்து, பின் நீதிபதியாகி, தங்களுக்குத் தேவையான நிதியைச் சேர்த்தனரே தவிர, தர்மத்தை, நியாயத்தை, நீதியைக் குழித்தோன்டி புதைத்து விட்டனர்”.
ஆங்கிலேய ஆட்சி அகன்ற பின்னும் கூட, அவர்கள் விட்டுச் சென்ற பல்வேறு பழக்க வழக்கங்களை, நம்மவர்களால் விட்டு விட முடியாமல்தான் இன்றும் சட்டத்துறை மற்றும் நீதித்துறை மட்டுமல்லாது, மறைமுகமாக பல்வேறு விதங்களில் ஆங்கில ஆட்சி முறைகளே, நடைமுறைகளே பின்பற்றப்பட்டு வருகின்றன.