33. சட்டம் யாருக்கு சாதகமானது? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
இந்திய அரசமைப்பு கோட்பாடு 13/3-படி, “சட்டம் என்பதில் ஆணை, பிரகடனம், அறிவிப்பு, உத்தரவு, விதி, ஒழுங்கு முறை, கிளைச் சட்டம், மரபு, மற்றும் பழக்க வழக்கம், என்ற அனைத்தும் அடங்கும்”.
பொதுவாக நாட்டில், நமக்கு எது சாதகமாக இருக்கிறது என்று பார்ப்பதில்தான், ஒவ்வொருவரும் குறியா இருக்கிறார்கள். பிரச்சினை தோன்ற இதுதான் முதல் காரணம். அதாவது, “தனக்கு இருக்கும் உரிமை, அடுத்தவருக்கும் இருக்கிறது என்பதை எவருமே உணர்வதில்லை”
தனக்கு இருக்கும் உரிமை, அடுத்தவருக்கும் உண்டு என்ற மிகச்சரியான கோட்பாட்டை, எவர் மிகச்சரியாக கடைப் பிடிக்கிறாரோ, அவர் தான் பிரச்சினை இல்லாத நபராக இருக்க முடியும்.
சட்டம் என்பதில் எதுவெல்லாம் அடங்கும் என்று பார்த்தோம். இதில், “ஆணை, பிரகடனம், அறிவிப்பு, உத்தரவு, விதி, ஒழுங்கு முறை, கிளைச் சட்டம்” என்பன, அதற்கான சட்டப்பூர்வமான அதிகாரம் உள்ளவரால் பிறப்பிக்கப்படுவதாகும்.
ஆனால், “மரபு மற்றும் பழக்க வழக்கம் அப்படி அல்ல. எவர் எதை செய்கிறாறோ, அதுதான் சரி எனவும், அதை நியாயப்படுத்தவும், அப்படிச் செய்ப விரும்பும் நபர்களால் பயன்படுத்தப்படுவதாகும்”
இப்படி ஒவ்வொருவரும் தாம் செய்த செயலுக்கு, நியாயம் கற்பிக்க முற்பட்டால் என்ன ஆகும்? இறுதியில் நாடு, இடு காடாகவும், சுடுகாடாகவும்தான் இருக்கும்.
எடுத்துக்காட்டாக, வற்புறுத்தி வரதட்சனை வாங்கிக் கொண்டு, திருமணம்.செய்ய கூடாது, என்பது மணக்கொடைத் தடுப்புச் சட்டம் 1961. அதை மீறி நீங்கள் மணக்கொடை வாங்குகிறீர்கள். இதற்கான புகாரின் பேரில் காவலர் உங்களை கைது செய்ய முயல்கிறார்.
நீங்களோ, காவலரிடம் மணக்கொடை வாங்க கூடாது என்று, உங்களுக்குத் தெரிந்த மணக்கொடைத் தடுப்புச் சட்டம் சொல்கிறது.
ஆனால், எனக்கு தெரிய மணக்கொடை என்பது, இன்றைக்கு நேற்றைக்கு நடைமுறைக்கு வந்தது அல்ல. ஆதிகாலம் தொட்டே இருந்து வரும் நடைமுறைதான்.
மேலும், எனக்குத் தெரிய, எங்க சாதியில், முப்பாட்டன் காலத்திலிருந்தே மணக்கொடை வாங்கிக் கொண்டுதான், திருமணம் செய்து இருக்கிறார்கள். இது எங்களின் சாதி மரபு.
எனவே நான் வாங்கிய மணக்கொடை, இந்திய அரசமைப்புக் கோட்பாடு 13/3 படி மரபு அல்லது பழக்க வழக்கம்தான் எனவும், அதுவும் சட்டம்தான் எனவும், தங்களிடம் உள்ள சட்ட விழிப்புணர்வை கொண்டு, தான் செய்து விட்ட தவற்றில் இருந்து தப்பிக்க நினைத்து வாதம் செய்கிறீர்கள்.
உடனே காவலர் “நீங்க சொல்றது எல்லாம் சரிதாங்க! இருந்தாலும், உங்க மேல புகார் வந்ததால், குற்ற விசாரணை முறை விதிகள் 1973-ன் விதி 154/1) படி, உடனே முதல் தகவல் அறிக்கை, பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது, எனனுடைய சட்டக் கடமையாகி விட்டது”. அதைத்தான் நான் செய்யிறேன் என்று கூறுகிறார்.
மேலும், நீங்கள், உங்களின் சட்ட வாதத்தை நீதிமன்றத்தில் நிலைநாட்டி, தண்டனை அடையுங்கள் அல்லது விடுதலை பெற்றுக் கொள்ளுங்கள் அதைப்பற்றி எனக்கென்ன கவலை..ஒரு வேலை நீங்கள் விடுதலை ஆகி விட்டால், என்மீது வழக்கு.வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறார்
இதற்கு மேல் அவரிடம் வாதம் செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்பதால், வேறு வழியில்லாமல் கைதுக்கு சம்மதித்து அவரோடு செல்கிறீர்கள்.
காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றவுடன், காலவர்கள் தங்களின் வீரத்தைக் காட்டுவார்கள். அதேபோல, உங்களுக்குத் தக்கப்பாடம் கற்பிக்க வேண்டும் என நினைத்து, நீங்கள் அணிந்திருக்கும் அத்தியாவசியமான ஆடைகளைக் களையக் கூறி, எடுத்த எடுப்பிலேயே அடித்து துன்புறுத்துவார்கள்.
நீங்கதான் சட்டத்தில் விழிப்புணர்வு புலியாச்சே! சும்மா இருப்பிங்களா? எந்த சட்டத்தின் கீழ் என்ன அடிச்சே? என்று கேட்பிங்கதானே! அப்ப அவர் என்ன சொல்லுவார்? “கைது உத்தரவுக்கு கட்டுப்படுகிற கைதியின் மீது, எந்த வகையிலும் பலாத்காரத்தை பயன்படுத்த, எந்த சட்டமும் உரிமை வழங்கவில்லை. மாறாக, குற்ற விசாரணை முறை விதிகள் 46 [படி, தடைதான் விதிக்கிறது.
எது எப்படி இருந்தாலும், காவல் துறையைப் பொறுத்தமட்டில், காலம் காலமாக, கைது என்றாலே அடித்து உதைப்பது, பழக்க வழக்கம் மற்றும் மரபுதான். இதுவும் கூடசட்டம்தான். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டின்படி, நீங்க பயன்படுத்துகிற பழக்க வழக்கச்சட்டத்தை, நானும் பயன்படுத்த அடிப்படை உரிமையுண்டு என்கிறார்”.
இப்போ நீங்க என்ன செய்ய முடியும்? இரு, இரு நீதிமன்ற விசாரணையில் உன்னை ஒரு கை பார்க்கிறேன், என்று அடங்குவதைத் தவிர வேறு வழியில்லை.
நீதிமன்ற விசாரணையின் போது, காவலர் உங்களைக் காவலில் வைத்திருந்த போது, அடித்தது தொடர்பாக காவலர் மீது குற்றம் சொல்றீர்கள். உடனே நீதிபதி காவலரை விசாரிக்கிறார். காவலரோ, உலக அதிசயமாக அன்று மட்டும் நடந்ததை அப்படியே சொல்கிறார். அதையெல்லாம் கேட்ட நீதிபதி, யோசித்து தனது முடிவை வெளிப்படையாக அறிவிக்காமல், மனதளவில் இப்படி நியாயம் கற்பித்துக் கொள்கிறார்.
”யார் குற்றம் புரிந்தாலும், அதனால் யார் பாதிக்கப் பட்டாலும், அதைப்பற்றியோ, அதற்கு சட்டம் என்ன தீர்வு சொல்கிறது என்பது பற்றியோ, நீதிமன்றங்களுக்கு கவலையில்லை. என் முன்னோர்களான மூத்த நீதிபதிகள், அன்று மட்டுமல்ல. இன்றும் கூட இதைத்தான் செய்து வருகிறார்கள். இது நீதித்துறையில் பல்லாண்டுகளாக இருந்து வரும் மரபு என்பதால், இதுவும் சட்டம்தான் என்கிறார்.”
இப்படியே போனால், உங்களால் யாரை என்ன செய்ய முடியும்? சட்ட விழிப்புணர்வு இருந்தும் கூட ஒன்றும் செய்ய முடியாமல், சாதாரண நபராகத்தான் இருக்க முடியும்.
காலம் காலமாக கையாளப்பட்டு வரும் மரபுக்கே, இந்த நிலை என்றால், சூழ்நிலைக்குத் தக்கவாறு, அவ்வப்போது மாற்றிக் கொள்ளப்படும் பழக்க வழக்கம் எம்மாத்திரம்?
எனவே நமக்கு மட்டும் சாதகமாக, எந்த சட்டம் இருக்கிறது ன்று பார்க்காமல், சம நோக்கோடு இருக்கக் கூடிய சட்டத்தைக் கண்டு பிடித்து, அதை கடைப்பிடிக்க வேண்டியதும், உங்கள் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.