நடப்பது எல்லாம் நன்மைக்கே !
இன்பங்களும் துன்பங்களும் நிறைந்ததே வாழ்க்கை. இது இயற்கையின் நீதி! இதனை யாரும் போட்டி போட்டு வெல்ல முடியாது. ஆனால், தமது திறமையால் எவர் ஒருவரும் மிக எளிதாக மாற்றியமைக்கலாம். ஆம்! நமது வாழ்க்கையில் எது நடந்தாலும், அதைப்பற்றிக் கவலைப்படாமல், நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று முற்போக்கான எண்ணத்தில் எடுத்துக் கொண்டால், உண்மை யிலேயே அதன் பலனை அனுபவிக்கலாம்.
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற முற்போக்கு சிந்தனையை வளர்த்துக் கொண்டதால்தான், சாதாரண தொழிலாளியாக இருந்த எனக்கு இன்று நாட்டு மக்களுக்கு கடமையாற்றும் வகையில், இது போன்ற கருத்தாழமுள்ள விசயங்களைக் கூட அக்கு வேறு ஆணிவேறாக அலச முடிந்தது.
“தேடல் இல்லை எனில் விடியல் இல்லை” என்பது முழுக்க முழுக்க உண்மை என்பதால்தான், இக்களஞ்சியத்தை படிக்கும் நல்லதொரு வாய்ப்பை உங்களின் தேடல் மூலமாகவே பெற்று இருக்கிறீர்கள்.
உங்களின் தேடலுக்கு அடிப்படைக் காரணம் என்ன? என்று ஆராய்ந்தால், உங்களுக்கு நடக்க கூடாத ஒன்று நடந்தும் கூட, அதை நீங்கள் “நடப்பதெல்லாம் நன்மைக்கே!” என்று எடுத்துக் கொண்டதுதானே தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.
நாட்டில் நடக்கும் குளறுபடிகள்தான் இப்படியொரு சட்ட அறிவுக்களஞ்சியம் வெளிவருவதற்கும், நாம் தெளிவாவதற்கும் அடிப்படை காரணமாக இருந்துள்ளது என்பதால் “நடப்ப தெல்லாம் நன்மைக்கே!” என்பது சாலப் பொருத்தமே!
இக்களஞ்சியத்தில், இந்திய அரசியல் சாசனத்தின் அருமைகளையும், அவற்றிற்கு புறம்பான செயல்களால் எந்த அளவிற்கு முன்னேற்றத்தில் இருக்க வேண்டிய நாடு, அதற்கு எதிர்மாறாக, எப்படியெல்லாம் முன்னேற்றமில்லாமல் இருக்கிறது என்பதை விளக்கியுள்ளேன். முன்னேற்றத்திற்கான தடைகளைத் தடுத்து நிறுத்த உதவும் நெம்பு கோலாக அமையும் என உறுதியாக நம்புகிறேன்.