25. உரிமைகளின் விளக்கங்கள்.
- அ. பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துக்கூறும் உரிமை, மற்றும் கருத்து கோரும் உரிமை.
இந்த உரிமையின் அடிப்படையில்தான் நாமெல்லாம் பேசுகிறோம். எழுதுகிறோம், கருத்தைக் கூறுகிறோம். இதிலேயே தகவல்கோரும் உரிமையும் அடங்கி இருக்கிறது என்றாலும், மேற்படி உரிமையில் அது சேர்க்கப்படவில்லை என்பதால்தான் அதை பிரித்துக்காட்டும் விதமாக அடிக்கோடு இட்டுள்ளேன்,
சட்டத்தில் இல்லாத ஒன்றை இருக்கிறது என்று நீங்கள் சொல்வது எப்படி சரியாகும்? என நினைக்கலாம். இது போன்ற நிலையை உங்களுக்கு இப்படித்தான் விளக்க முடியும்.
ஆம்! இக்களஞ்சியத்தில் எனது எழுத்து உரிமை மூலம் நான் சொல்ல நினைப்பதை எழுத்தால் எழுதி உள்ளதோடு, பேச நினைத்ததை பேசி, எனது சட்டக்கருத்துக்களை பதிவு செய்து உள்ளேன் அல்லவா? இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் என்ன செய்வீர்கள்? என்னிடம் கேட்பீர்கள் அல்லவா! அப்படி கேட்பதற்கு சட்டப்படியான பெயர்தான் தகவல் கோருதல். இப்படி கோரும் தகவல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? நான் மேற்சொன்னது போல யாராலும் மறுக்க இயலாத நியாயமான ஆணித்தரமான கருத்தாக. அதுவும் எழுத்துப் பூர்வமாகத்தானே இருக்க வேண்டும்?
ஆனால், இந்த சிறு விசயங்கள் கூட புரியாமல்தான நமது இந்திய அரசு 2005 ஆண்டில், தகவல் பெறும் உரிமை சட்டம் என்றதொரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இதில் இன்னொரு முக்கிய செய்தியையும் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
இந்திய சாட்சிய சட்டம் 1872-இன் உறுபு 74-இன் கீழான அனைத்து பொது ஆவணங்களையும், உறுபு 76-இல் நமக்கு வேண்டிய தகவலை சான்று நகலாகவும் பெறும் உரிமை உள்ளது.
சான்று நகலுக்கும், தகவலுக்கும் அப்படியென்ன வித்தியாசம் இருக்கிறது? தகவல் என்றால் உறுதி இல்லாதது. தகவல் என்பது நம்பிக்கை இல்லாத, உறுதிப்படுத்தப்படாத செய்தியாகும் இது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது பொய்யாகவும் இருக்கலாம் என்பதால், எந்த இடத்திலும் தக்க ஆதாரமாக பயன்படுத்த இயலாது.
சான்று நகல் என்றால், “உண்மையான செய்தியை அதை வழங்குபவர் ஒப்புக் கொண்டு, அதைச் சான்று செய்து வழங்குவதாகும். இப்படி வழங்கப்படும் சான்று நகலை அச்சட்டத்தின் உறுபு 77-இன் கீழ், தக்க சான்று ஆதாரமாக எந்த நீதிமன்றத்திலும் கூட தாக்கல் செய்ய முடியும்”.
132 வருடங்களாக இந்திய சாட்சியச் சட்டம் இருப்பது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை இயற்றிய அரசுக்கு தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. பின் ஏன் தகவல் பெறும் உரிமை சட்டத்தைக் கொண்டு வந்தார்கள் என்றால், ஊழல் செய்யும் அவர்களை காப்பாற்றிக் கொள்வதற்காகத்தானே அன்றி கண்டிப்பாக உங்களின் நலனுக்காக அல்லவே அல்ல.
இந்த இந்திய சாட்சிய சட்டம் 1872-இன் கீழ் தகவல் பெறுவது எப்படி? எல்லா வித தகவலையும் பெற என்ன உரிமை? என்பது உட்பட பல்வேறு விசயங்களை தொடர்புள்ள இடத்தில் பார்க்கலாம்.
- ஆ. ஆயுதங்கள் இன்றி அமைதியாக கூடும் உரிமை.
இந்த உரிமையின் அடிப்படையில்தான் அமைதியான முறையில், எந்த காரணத்துக்காகவும் கூட்டங்கள் கூடுவதற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள் என்றால் கல், கத்தி, அரிவாள், பாட்டில், சைக்கிள் செயின், துப்பாக்கி போன்றவைகள் மட்டுமல்ல. அடிக்க உதவும் பிரம்பு, மரக்கிளையின் சிறு பாகமான கம்பு, நமது கையில் வளரக்கூடிய நகம் ஆகியவையும் கூட ஆயுதம்தான். இவைகள் எல்லாம் சாதாரண ஆயுதங்கள், முன்னர் சொன்னவைகள் எல்லாம் பயங்கர ஆயுதங்கள்.
நம்ம பல விசயங்களை யோசிப்பதில்லை. அதில் ஒன்றுதான் தீவிரவாதி என்ற சங்கதி. பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துவர்களை பயங்கரவாதிகள் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, தீவிரவாதி என்று சொல்லக்கூடாது. ஏன் தெரியுமா? “தீவிரவாதி என்றால், தான் எடுக்கும் ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெற தேவையான தீவிர முயற்சிகளை மேற்கொள்பவர்கள் என்பதுதான் நேரடியான அர்த்தம்”.
அந்த வகையில் நான் ஒரு சட்டத் தீவிரவாதியே!
- இ. சங்கங்களையும், அமைப்புகளையும் ஏற்படுத்துவதற்கான உரிமை.
இந்த உரிமையின் அடிப்படையில்தான் மன்றங்கள், இயக்கங்கள், அமைப்புகள், ரசிகர் மன்றங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என எந்த விதமான இயக்கத்தையும் ஏற்படுத்த முடிகிறது.
ஆனால், அதற்கான சட்டதிட்டங்களின்படி, வழி நடத்தப்பட வேண்டியவர்கள்தான் அப்படி செய்யப்படுவதில்லை.
- ஈ. இந்தியாவில் தங்குத் தடையின்றி நடமாடும் உரிமை.
இந்த உரிமையின் கீழ்தான், நாம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்குக் தடை இல்லாமல் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறோம்.
பல அரசியல்வாதிகள் மக்களின் கவனத்தை ஈர்க்க, நடை பயணம் மேற்கொள்கின்றனர். நடை பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள், ரதயாத்திரை மேற்கொள்கின்றனர்.
மக்கள் மனநிம்மதிக்காக புனிதத் தலங்களுக்கு பாத யாத்திரை மற்றும் மகிழ்ச்சிக்காக இன்பச் சுற்றுலா மேற்கொள்கின்றனர்
- உ. இந்தியாவில் விரும்பிய இடத்தில் வசிக்க, தங்க உரிமை.
இந்த உரிமையின் அடிப்படையில்தான் நாம் எங்கோ பிறந்திருந்தாலும், நமது வசதிகளுக்கும், சூழ்நிலைகளுக்கும் ஏற்ப, நாம் விரும்பிய இடத்தில் நிரந்தரமாகவோ, அல்லது தற்காலிகமாகவோ, வசிக்கவும் தங்கவும் முடிகிறது.
- ஊ. இந்தியாவில் சொத்தை வாங்கவும், வைத்திருக்கவும், விற்கவும் உரிமை.
இந்த உரிமையின் அடிப்படையில்தான், சொத்துக்களை வாங்குகிறோம், தேவையான வரை வைத்திருக்கிறோம், தேவை இல்லாதபோது விற்கிறோம்.
சொத்து என்றால் வீடு, மனை, நிலம் மட்டுமல்ல. நமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானது எனக்கருதி வாங்கும் ஒவ்வொரு பொருளும் அடங்கும்.
- எ. எந்தத் தொழிலையும் செய்ய, விரும்பிய பணியை தேர்ந்தெடுக்க உரிமை.
இந்த உரிமையின் அடிப்படையில்தான், நமக்கு விருப்பமான பணியை அல்லது தொழிலை, நிரந்தரமாகவோ, அல்லது தற்காலிகமாகவோ செய்து வருகிறோம். தேவையான போது அதிலிருந்து மாறிக் கொள்கிறோம்.
இந்த அடிப்படை உரிமைகள் உலகில் உள்ள நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒரே மாதிரியாக இல்லாமல், மாறுபட்டு இருக்கும். கூடவோ குறைவாகவோ இருக்கும். ஆனால், எந்த உரிமை இருக்கிறதோ இல்லையோ, பேச்சுரிமை, எழுத்துரிமை என்ற உரிமை மட்டும் நிச்சயமாக இருக்கும். ஏனெனில், எந்த நாட்டிலும் பேசாமல், எழுதாமல் எதுவும் செய்ய முடியாது.