5. பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்?
பாவம் ஒருபக்கம் பழி ஒருபக்கம் என்று பழமொழி ஒன்று சொல்லுவார்கள். அதாவது தான் ஒரு செயலைத் தவறாக செய்துவிட்டு, அதனால் ஏற்படும் பழியை வேறொன்றின் மீது போட்டுவிடுவார்கள். இதேபோலத்தான் இன்று நாட்டில் சட்டத்தின் நிலையும் உள்ளது.
சட்டத்தின் அதிகாரத்தைக் கொண்டு, அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவருமே அந்த சட்ட அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திவிட்டு, சட்டத்தில் ஓட்டை என்று சட்டத்தின் மீது பழியைப் போட்டுவிடுகிறார்கள்.
உண்மையில் சட்டத்தில் ஓட்டை என்றால்… அதை வைத்துக் கொண்டு தம்மால் சிறப்பாக எந்த காரியத்தையும் செய்ய முடியாது என்று நினைத்தால்,… சட்டத்தின் அதிகாரத்தைக் கொண்டு அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களின் அதிகாரங்களைக் தூக்கி எறிந்து விட வேண்டியதுதானே? அப்படி யாராவது இதுவரை எறிந்திருக்கிறார்களா என்றால் இல்லை.
அப்படியென்றால் என்ன அர்த்தம்? சட்டம் சரியாக இருக்கிறது…அது நமக்கு அதிகாரத்தையும் தந்திருக்கிறது… அந்த அதிகாரம் நமக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறது… அந்த அதிகாரத்தை பயன்படுத்தி முடிந்த அளவுக்கு பொருளீட்டி சுகமாய் வாழ்வோம் என்பதுதானே?
மேலும் தேவைப்பட்டால், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திவிட்டு, அதற்கான பழியை சட்டத்தின் மீது போட்டுவிட்டு ஏகபோகமாய் வாழ்வோம் என்பதுதான்.
நீங்கள் செய்யாத குற்றத்தை உங்கள்மீது ஒருவர் சுமத்துகிறார் என்றால், நீங்கள் வாய்ப்பேச முடிந்தவராக இருந்தால் என்ன செய்வீர்கள்? உங்கள்மீது சுமத்தப்படும் குற்றத்தை மறுத்து பேசுவீர்கள். ஒரு வேலை வாய்ப்பேச இயலாதவராக இருந்தால், வேறு எம்முறையில் முடியுமோ, அம்முறையில் மறுப்பு தெரிவிப்பீர்கள். ஆனால், சட்டத்திற்கு இது போன்று நல்வாய்ப்புகள் எதுவுமே கிடையாது.
ஆம்! நாம் ஏற்கனவே பார்த்தது போல, சட்டம் என்பது “நாட்டில் நடக்கும் அத்தனை செயல்களும் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக எழுத்துமூலம் உருவாக்கப்பட்ட வரையறைதான் சட்டம்”.
இதில் “எழுத்துமூலம் உருவாக்கப்பட்ட வரையறை” என்பதுதான் கூர்ந்து கவனிக்கத்தக்கது.
எழுத்துமூலம் உள்ள ஒரு சங்கதி, வாய்வழியாக சொல்லப் படும் ஒரு சங்கதியை விட அதிக வலிமையானது என்று, நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் 1872 சொன்னாலும் கூட, அதை தவறாக நடைமுறைப்படுத்தும் போது, அதனால் ஒன்றும் செய்ய இயலாததாகவே ஆகி விடுகிறது என்பதே எதார்த்தம்.
இந்த எதார்த்தத்தை நன்றாக புரிந்து கொண்டுதான் “சட்ட அதிகாரம் பெற்றவர்கள் தமக்குச் சாதகமாக பயன் படுத்திக் கொண்டு, வரம் கொடுத்தவன் தலையில் கை வைத்த கதையாக, சட்டத்தில் ஒன்றிரண்டு அல்ல ஆயிரத்தெட்டு ஓட்டை என்ற பழியைப் போட்டு விடுகிறார்கள்” என்பதே உண்மை.