6. நியாயம்தான் சட்டம். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
சட்டம் என்பது சதுரம் மாதிரி ஒரே சமமாகத்தான் இருக்கிறது என்பதை நன்றாகவே புரிந்து கொண்டோம். இதிலும் எங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது என்று ஏதோ கேட்கத் தோன்றுகிறதே தவிர எப்படி கேட்கவேண்டும் என்பது புரியவில்லை. அப்படித்தானே?
அதாவது சட்டம் சதுரம் போல சமமானதாய் இருக்கிறது என்றால் நல்லா இருக்கிறவங்களுக்கு மட்டும்தான் சட்டமா? கொஞ்சம் நஞ்சம் ஏதாவது ஒரு விதத்துல சரியில்லாத வங்களுக்கும் சட்டம்… என்பதுதானே?
மற்ற நாடுகளில் எப்படி இருக்கிறதோ, இல்லையோ! ”நம் நாட்டில் உள்ள சட்டத்தோட நோக்கமே எல்லோருமே நல்லா இருக்கணும், எல்லா செயலுமே நல்லா நடக்கணும் என்பதுதான்”. அதனால் சமுதாயத்தில் உள்ள எத்தகைய மனிதருக்கும் அவர்களுக்கு ஏற்ற வகையிலே சட்டம் உரிமையையும், பாதுகாப்பையும் தருகிறது என்பது யாராலும் மறுக்க இயலாத உண்மை.
ஆம்! நம் நாட்டில் “நியாயம்தான் சட்டம்” இதனை கருத்தில் கொண்டுதான் நாம் வடிவமைத்துள்ள நீதி தேவதையின் தலைக்கு மேலே “நியாயம்தான் சட்டம்” என்ற வாசகத்தை கொடுத்துள்ளேன். இது எப்படி சாத்தியம்? என்பதை பின்னால் தக்க சமயத்தில் பார்க்கலாம்.
ஆனால், மற்ற நாடுகளில் பெரும்பாலும் “நியாயம்தான் சட்டம்” என்று இருக்க அதிகபட்சமாக வாய்ப்பே இல்லை. ஏன்? எப்படி? என்பது குறித்து தற்போது விரிவாக பார்ப்போம்.