4. சட்டத்தில் ஓட்டையா? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
“நாட்டில் நடக்கும் அத்தணை செயல்களும் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக, எழுத்து மூலம் உருவாக்கப்பட்ட வரையறைதான் சட்டம்” என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் பலரும் சட்டத்தில் ஓட்டை இருக்கிறது. அதன்வழியாக குற்றவாளிகளும் சமூக விரோதிகளும் தப்பித்துக் கொள்கின்றனர் என்று, சொல்லிக் கொண்டு உள்ளனரே என்ற கேள்வி, நிச்சயம் உங்களுக்கு எழாமல் இருக்க வாய்ப்பில்லை.
நீங்கள் ஒரு பாத்திரம் வாங்க நினைக்கிறீர்கள். அதற்காக பாத்திரக்கடைக்கும் செல்கிறீர்கள். கடையில் ஓட்டை உள்ள பாத்திரத்தைத் தயார் செய்கிறார்களா? அல்லது தயாரித்ததை விற்கத்தான் செய்வார்களா? அல்லது அப்படி விற்றால் நீங்கள்தான் அதை வாங்கி வருவீர்களா?
களிமண்ணைக் கொண்டே, ஓட்டையில்லாத பாத்திரங்களைச் செய்ய முடியும் எனும் போது, உலோகத்தைக் கொண்டு ஓட்டை.யில்லாமல் செய்ய முடியவில்லை என்று பாத்திரம் தயாரிப்பவர் சொன்னால் அது நிச்சயமாக அவரின் திறமையின்மைதானே தவிர உலோகத்தின் தன்மை அல்ல.
களிமண்ணைக் கொண்டு செய்யப்படும் பொருட்கள் எந்தநிலையிலும் பயன்படுத்துவதற்கு வசதியாக, எப்படி தீயில் வைத்துப் பக்குவப்படுத்தப்படுகிறதோ, அதேபோல்தான் சட்டத்தை புரிந்துக்கொள்வதிலும் ஒவ்வொருவரும் பக்குவப்பட வேண்டும்.
அப்படியென்றால், சட்டத்தில் ஓட்டையே இல்லை என்கிறீர்களா? என நீங்கள் கேட்கலாம்…
ஒரு சதுரம் செய்யும்போது எப்படி ஒரே நீளம், அகலம், உயரத்தை கருத்தில் கொண்டு செய்யப்படுகிறதோ, அதே போல்தான் சட்டமும் இயற்றப்படுகிறது என்பதை முதலில் நாம் மறந்து விடக்கூடாது.
எது எப்படி இருப்பினும், சில சமயங்களில் சதுரத்துக்கான பக்கங்களில் ஒன்று கூடினாலோ, அல்லது குறைந்தாலோ அதற்கு தக்கவாறு எப்படி மற்ற பக்கங்கள் சரி செய்யப்பட்டு, சதுரம் உருவாக்கப்படுகிறதோ அதே போல்தான் சட்டமும் சரி செய்யப்பட வேண்டிய ஒன்றே!
ஆனால், அப்படிச்செய்யாமல் சட்டத்தில் ஓட்டை இருக்கிறது என்று புலம்பிக் கொண்டு இருந்தால் அதனால் சட்டம் சரியாகிவிடுமா என்ன?
அப்படியானால் சட்டத்தில் ஓட்டை இருக்கிறது என்பதை மறைமுகமாக ஒத்துக் கொள்கிறீர்கள்தானே? என்று நீங்கள் நினைக்கலாம். ஒப்புக் கொள்வது என்றால் பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டு விடலாமே! இதில் எதற்கு எனக்கு மறைமுகம் தேவை?
ஒரு காரியத்தை எவர் ஒருவர் செய்ய முன் வரும்போதும், அதை எந்த அளவிற்கு சிறப்பாக செய்ய முடியுமோ அந்த அளவிற்கு சிறப்பாக செய்ய வேண்டும், என்றுதான்
நினைக்கிறார்கள். இப்படித்தான் இக்களஞ்சியத்தை சிறப்பாக படைக்க முனைந்துள்ளேன். இப்படி முனைப்புடன் செயல்படும் போது அதில் பிழைகள் ஏற்பட வாய்ப்பில்லை.
அதையும்மீறி சில குறைபாடுகள் இருந்தால் அது என்னை அறியாமல், எனக்கு தெரியாமல் வந்ததே தவிர, தெரிந்து வந்தது அல்ல. எது எப்படி இருப்பினும், அறியாமல், தெரியாமல் வந்த பிழைகள் என்னாலோ அல்லது மற்றவர்களாலோ ஏதோ ஒருவிதத்தில் சரி செய்யப்படக் கூடியவையே.
அதேபோலத்தான் சட்டமும். சட்டம் இயற்றப்படும் போது மிகுந்த கவனத்துடன் தரமானதாகவே இயற்றப் படுகிறது. இதில் சிறு சிறு குறைகள் இருக்க வாய்ப்பு உண்டு என்பதை நான் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.
ஆனால், இது எக்காரணம் கொண்டும் சட்டத்தின் ஓட்டை கிடையாது. ஓட்டையாக இருக்கவும் முடியாது. அப்படியே இருந்தாலும் அதை நான் மட்டுமல்ல, நீங்கள் யாராக
இருந்தாலும் சரி செய்ய முடியும்.