- அதிக அதிகாரம் பெற்றவர்கள் யார்?
நாட்டில் அதிகாரப்போட்டி நடந்து வரும் இவ்வேளையில், நாட்டில் அதிக அதிகாரம் படைத்தவர்கள் யார்? என்று உங்களிடம் ஒரு கேள்வி எழுப்பினால்போதும்!
குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள், பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், ஆளுநர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், இந்திய காவற்பணி அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை, அனைத்து வகையான அரசு ஊழியர்கள், பணம் படைத்தவர்கள், பொறுக்கி என உங்களால் முடிந்த அளவிற்கு நீண்டதொரு பட்டியல் இடுவீர்கள் அல்லவா?
இவர்கள் எல்லாம் உண்மையில் அதிக அதிகாரம் உள்ளவர்களா? என்றால், இல்லை என்பதுதான் உண்மை.
உண்மையில் இவர்கள் எல்லாம் அவரவர்களின் பதவிக்குத் தக்கவாறு அதிகாரம் கொடுக்கப்பட்டவர்களே! இவர்களுக்கு எல்லாம் யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது?
“சட்டமே!”
அதாவது, இவர்களில் யாருக்கு, யார் கட்டுப்பட வேண்டிய அவசியம் இருக்கிறதோ இல்லையோ… இவர்கள் அனைவரும் கட்டாயம் ஒரு விசயத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்றால், “அது சட்டத்திற்கு மட்டும்தான்”. இவர்களில் எவர் ஒருவரும் சட்டத்துக்கு விரோதமாக நடக்கும்போது, சட்ட சிக்கலில் சிக்கித் தமது பதவியை இழக்க நேரிடும்.
அப்படி நேரிட்ட பல்வேறு சம்பவங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்பதால் இதுபற்றிய விபரங்களை இங்கு நான் தரவில்லை.
இப்படிப்பட்ட மேலான அதிகாரம் கொண்ட சட்டத்தை இந்திய அரசு, அடிப்படைக் கல்வியில் சட்டக் கல்வியை கொண்டு வராததும், கொண்டு வருவதற்கான எந்த முயற்சி யையும் எடுக்காததும், இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் துரதிருஷ்டம் என்று சொல்லுவதைத் தவிர்; எனக்கு வேறு வழி தெரியல்லை.