III மதிப்பு மிக்க கருத்துரைகளும், மதிப்புரைகளும்
III-1திரு.ந.ரங்கசாமி புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர்
16-11-2008 அன்று இந்நூலை வெளியிட்டு ஆற்றிய கருத்துரை
நீதியைத்தேடி. நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! என நூலுக்கு தலைப்புக் கொடுத்து உள்ளார்கள். அன்பு, இரக்கம், பாசம், பரிவு இருந்தால் நீதியைத்தேடி. நாம் நிச்சயம் எங்கும் போக வேண்டி இருக்காது. நீதி நிச்சயம் நம்மிடமே இருக்கும்.
மனிதனுக்கு ஆசை அதிகம். அந்த ஆசை மேலும் அதிகமாகும் போது தவறு செய்ய நேரிடுகிறது. அத்தவறால் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் நீதி. இந்த நீதியை கொடுப்பதற்காகவும், சட்டத்தின் மூலம் மனிதன் எப்படி வாழ வேண்டும்? எப்படி அடுத்தவருக்கு துன்பம் விளைவிக்காமல் இருக்க வேண்டும்? என்பதற்காகத்தான் சட்டங்கள் இயற்றப்படுகின்றன.
இந்த சட்டங்களை எல்லாம் முழுமையாக தெரிந்து கொள்வது என்பது இயலாது என்றாலும் கூட, “அதன் அடிப்படையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம். இதை கடமையாக கொள்ள வேண்டும்”. சட்டத்தின் அடிப்படையைத் தெரிந்து: கொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இந்த நூலின் மூலமாக அமையும் என்பது என எண்ணம். இந்த நல்ல எண்ணத்தின்பால் இந்நூல் எழுதப்பட்டு இருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
நீதியைத்தேடி நாம் அலைவதை விட எல்லோரும் சட்டத்தைத் தெரிந்து கொண்டு நியாயமாக வாழ வேண்டும். அதன் மூலம் எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும். நியாயமாக வாழ்ந்தால் பிரச்சினை இருக்காது. நீதியைத்தேட வேண்டிய அவசியமிருக்காது. நியாயமாக வாழ அன்பு, இரக்கம், பாசம், பரிவு மிகவும் அவசியம்.
எல்லோரும் பிரச்சினை இல்லாமல் வாழ வேண்டும் என்பதுதான் நமது எண்ணம். இந்த நல்ல எண்ணத்தோடு இந்நூலை எழுதி வெளியிட்டு இருக்கின்ற, ஆசிரியர் அவர்களுக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
III-2 திரு. பிரசன்ன வேங்கடாச்சாரியார் சதுர்வேதி
ஸ்ரீ.ராமானுஜா மிஷன் டிரஸ்ட், சென்னை
16-11-2008 அன்று நூலை பெற்றுக்கொண்டு ஆற்றிய கருத்துரை.
மாக்கள் என்பதில் இருந்து வேறுபட்டு, பண்பாலே தன்னைக்காத்து, தன்னை இழந்து, தன்னை அண்டியிருக்கின்ற அனைவரையும் காத்து, அவர்களையெல்லாம் கரையேற்றுகின்ற உயர்ந்த ஒழுகலாருடையது, மனிதருடையது. ஆனால், ஒவ்வொரு பொருளிலும் உள்ள வளர்ச்சியிலே நன்மை ஏற்படுவது போல, நலிவும் ஏற்படுகிறது.
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்கிற இந்த நான்கும் இழுக்காறு என வந்து மனித குலத்தை நலிவடையச் செய்யும். இப்படி நலிவடைந்திருக்கின்ற மனித குலத்தை வாழ்விக்கவும், தன்னைத்தானே நெறிப்படுத்திக் கொள்ளவும், ஏனைய குறைபாடுகளை நெறிப்படுத்தவும் உள்ளுணர்வு என்ற முதல் சட்டத்தையும், இறை உணர்வு என்ற இரண்டாவது சட்டத்தையும், அரசினால் இயற்றப்படும் மூன்றாவது சட்டத்தையும் வைத்திருக்கிறார்கள்.
இம்மூன்றையும் ஒருங்கே வைத்திருப்பவர்கள் தாங்களாலேயே திருத்தப்படுவார்கள். நெறிப்பட்டோருக்கு உள்ளுணர்வுதான் சட்டம்.. நெறிப்படாதவர்களுக்கு அரசின் சட்டம்.. இது போக அரசின் சட்டத்தில் இருந்து அகன்று செல்லக் கூடியவர்களுக்கு, ஆண்டவனின் சட்டம் என்று நான்காவது சட்டத்தையும் பெரியோர்கள் வைத்து இருக்கிறார்கள்.
இந்த மூன்று சட்டங்களும், மனிதனுக்கே உரித்தான உடல், உயிர், உடைமை, உறவு, உரிமை என்ற ஐந்தையும் காக்கின்றன. இவைகளைக் காக்கும் உணர்வு உள்ளவர்களைத்தான் விழிப்புணர்வு உள்ளவர்கள் என சொல்வார்கள். இந்த விழிப்புணர்வு என்பது எல்லோருக்கும் வர வேண்டியதாகும்.
ஒருவருக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வானது அனைவரிடத்திலும் விழிப்புணர்வை உண்டாக்கி, சமுதாயத்தில் மறுமலர்ச்சியை உண்டாக்கும் இம்மறுமலர்ச்சியின் நோக்கம்தான் இந்த அறிவார்ந்த அறிவுக்களஞ்சிய நூல் ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடு, தானே செயல்பட்டுக் கொள்ள முடியாது என்பதால்தான் அரசு என்ற ஒரு இயக்கம் அமைந்தது.
அரசு என்பது அறிவுடையவர்களாய், அன்பு உடையவர்களாய், தாயைப் போல, தந்தையைப் போல, தன்னிடத்தில் இருக்கிறவர்களுக்கு எல்லாம், பாலுட்டி, உணவூட்டி, உயிருட்டி, உறவூட்டி, அறிவையும். ஆற்றலையும் வளர்த்து வாழ வைக்கின்ற தனிப்பெரும் இயக்கத்தைக் கொண்டது.
அரசாங்கத்திற்கு இரண்டு தனிப்பெரும் கடமையுண்டு. ஒன்று வாழ்வு. மற்றொன்று வளர்ச்சி. நலிவடைந்தவர்கள் செயல்பட முடியாத போது அவர்களுக்கு வாழ்வு அளிப்பதும், ஆற்றல் உடையவர்களுக்கு ஆற்றல் பெருக்கம் கொடுத்து அவர்களை மேலும் வளர்ச்சியடையச் செய்வதும் தான் அரசினுடைய உயர்ந்த நோக்கு.
அரசுக்கு வன்வடிவம், மென்வடிவம் என்று இரண்டு வடிவம் உண்டு. வன்வடிவம் என்பது தவறு இழைத்தவர்களை ஒறுத்தல், குற்றம் செய்யாது நற்செயல் புரிபவர்களை அணைத்தல் ஆகும். எப்போது அரசினுடைய வன்வடிவமானது உயர்ந்த மட்டத்தில் உள்ளவர்களைத் தாக்குகிறதோ, மென்வடிவமானது கீழ்மட்டத்தில் உள்ளவர்களை காக்கிறதோ, அந்த அரசுதான் தலைச்சிறந்த அரசு.
மொத்தத்தில் அரசின் இரும்பு பிடிகள் மிகவும் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களையும் பிடிக்க வேண்டும், அதேபோல் மிகவும் கீழ் மட்டத்திலே இருப்பவர்களையும் அரவணைக்க வேண்டும். இப்படிப்பட்ட அரசைத்தான் நல்லரசு, சான்றான்மை உடைய அரசு என்பார்கள்.
இவைகளை மாறுதல் இல்லாமல் செயல்படுத்துவதைத்தான் உறுதி என்கிறோம். இந்த உறுதியிலும் எழுத்து உறுதி, சொல் உறுதி, செயல் உறுதி என்று
மூன்று வகை இருக்கிறது.
மனிதனுக்கு என்று பல அடிப்படை உரிமைகள் உண்டு. இவைகளை விளக்குவதுதான் உறுதி மொழி. இதனை வடமொழியிலே சாசனம் என்பார்கள். ஆங்கிலத்திலே constitution என்பார்கள்
இந்த உறுதி மொழிகளை எல்லாம் ஒருவர் தனக்கு தானே செயல்படுத்திக் கொள்ள முடியாது இதற்கு அடிப்படையான காரணங்கள் மூன்று.. ஒன்று தற்பெருமையினாலே நடுநிலைமை தவறி விடக்கூடும். இரண்டு நடுநிலைமை தவறாமல் இருந்தாலும் கூட, மிக வலிமையானவர்களை எதிர்த்து செய்ய முடியாது. மூன்று நடுநிலைமையும், வலிமையும், செயல்படுவதற்கான அறிவும் இருந்தாலும் கூட, எல்லாவற்றிற்கும், எல்லோருக்கும், எப்பொழுதும் நாம் செய்து விட முடியாது. ஆக, இவைகளைச் செய்ய வேண்டியது அரசே. இதன் நோக்கத்திற்காகத்தான் அரசானது மூன்று வடிவங்களாக அமைந்துள்ளது.
மக்களிடம் குடும்பத்தொண்டனாய், மக்களின் நோக்கத்திற்கு எல்லாம் வெளிப்பாடாய் திகழ்கின்ற கூட்டம் ஆளுநர் கூட்டம். நடுநிலைமையைப் பாராட்டி, எவருக்கு நன்மை செய்தல், எவரை ஒறுத்தல் என்று. இருக்கின்ற இருமையை ஒன்றாக இணைத்து ஆராய்ந்து அறியக்கூடிய கூட்டம் நடுவர் கூட்டம். நாட்டின் வளமும், செயலும் பற்றி செயல்படுகின்ற கூட்டம் செயலர் கூட்டம்.
இவைகளைத்தான் சட்டத்துறை, நீதித்துறை, செயல்துறை என சொல்கிறோம். இந்த மூன்றையும் சிறப்பாக செயல்படுத்தும் அரசுதான் நல்ல அரசு தலைச் சிறந்த அரசு.
சட்டத்தில் வாழ்க்கைச் சட்டம், வழக்குச் சட்டம் என இரண்டு சட்டம் இருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு அன்புடன் இனைந்து; வாழ வேண்டும் என்ற கூட்டு விழிப்புணர்வு வர வேண்டும். இந்த விழிப்புணர்வு வந்து விட்டால் சட்ட விழிப்புணர்வின் தேவை குறைந்து விடும்.
போட்டி, பொறாமை, வஞ்சம், பழி போன்ற குற்றங்களில் இருந்து, மனிதனை மேம்படுத்துவது அவனின் வாய்மையும், நல்ல நெறியும், நல்நெறியுடன் கூடிய கல்வியுமே ஆகும். மொத்தத்தில் மனிதனின் நல்வாழ்விற்கு சட்டத்தின் பங்கு கால்வாசிதான்.
வாய்மையும், நல்ல நெறியும், நல்நெறியுடன் கூடிய கல்வியோடு, சட்ட அறிவைப் பெறுபவர்கள்தான் நல்ல வழக்கறிஞர்களாக, நீதி அரசர்களாக இருப்பார்கள். நீதியரசர் என்பது வடமொழிச்சொல். நெறியரசர் என்பதுதான் தமிழ்ச்சொல்.
இவர்கள் இப்படி நெறிப்படும் போதுதான், தங்களின் தொழிலில் சிறந்து நெறியோடு விளங்குவார்கள். அப்போதுதான் சமுதாயமும் சீர்படும். ஆனால், இன்று இந்நெறிகள் பழுதுபட்ட காரணத்தால், இரண்டு அவர்களுக்கு இயல்பாகவே இருக்க வேண்டிய தன்மைகளான உரைத்தல், மறுத்தல், ஆகியன ஆக்கல், அழித்தல், மாற்றல் என மாறிவிட்டது.
இந்த நிலையில் இந்நூல் ஒரு அடிப்படைப் பொருளே. இதனைப் பயன்படுத்தி பலன் அடைவதற்குத் தேவையான பயிற்சியை பெற்றுக் கொள்வது மிகவும் அவசியம்.
நாட்டில் தற்போது இரண்டு வகையான அவலங்கள் நடக்கின்றன ‘வலை வாழ்வு, பயன் மாற்று’ என்றால் நல்லவர்களுக்கு பயனும்; தீயவர்களுக்கு வலையும் விரிக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் இன்று நல்லவர்கள் வலையிலே விழ, தீயவர்கள் பலனை. பெற்றுக் கொள்கிறார்கள்.
நல்லவர்கள் வலைப்படுவதும், தீயவர்கள் நல்வாழ்வு படுவதும் முதல் அவலம். இந்த அவலம் உலகெங்கும் உள்ள அவலமாகவே இருக்கிறது. நீதிமன்றத்துக்குச் சென்று விட்டாலே பொருள், பொழுது, பொறை என்ற இந்த மூன்று பொருளும் போய் விடுகிறது. இது இரண்டாவது அவலம்.
இந்நிலையில் இந்நூல் ஒரு யாக்கை கூடே ! என்பதால் பேச்சுத் திறனை வளர்த்து இந்நூலுக்கு உயிர் கொடுக்க வேண்டியது நமது கடமையே. உடல் நலத்திற்கு எப்படி மருத்துவம் இருக்கிறதோ அதேபோல, ‘சமூக நலத்திற்கு சரியான மருத்துவம்தான் சட்டம்’ என்பதால் அனைவரும் சட்டத்தைக் கடைப்பிடித்து வாழ்வாங்கு வாழ வாழ்த்தி முடிக்கிறேன்.
III-3 தீக்கதிர் நாளிதழ் நாள் 07-12-2008
“நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்” என்கிற அறைக் கூவலுடன் ‘”சட்ட அறிவுக்களஞ்சியமாக” இந்நூலை பட்டறிவுடன் படைத்துள்ளார், வாரண்ட் பாலா.
மத்திய சட்ட அமைச்சகமே நிதி உதவி செய்துள்ளது குறிப்பிடத் தக்கது மேலும், தமிழ்நாடு, பாண்டிச்சேரி நூலகங்கள், சிறைச் சாலைகள் என எங்கும் இலவசமாக வழங்கிட சட்ட அமைச்சகம் நிதி உதவி செய்துள்ளது.
“நமக்காக நாம்தான் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமே அன்றி பிறரை நம்பிப் பலனில்லை” என்று, அனுபவ வெளிச்சத்தில், சாதாரண சட்ட நடைமுறைகளை எளிய தமிழில், உரிய விளக்கங்களோடு சொல்லும் இந்நூலை எல்லோரும் வாங்கிப் படிப்பதும், பாதுகாப்பதும் அவசியம்.
III-4 துக்ளக் வார இதழ் நாள் 04-02-2009
இந்நூலாசிரியரின் நீதியைத்தேடி… வரிசையில் ஏற்கனவே ‘குற்ற விசாரணைகள்’, ‘ஜாமீன் எடுப்பது எப்படி?’, என சட்டம் குறித்த இரண்டு நூல்கள் வெளியாகி, பொதுமக்கள் பலரின் வரவேற்பைப் பெற்றன. தவிர, பொதுமக்கள் சட்ட விழிப்புணர்வு பெற,இது போன்ற தனியார் முயற்சிகளை, மத்திய சட்ட அமைச்சகமும் நிதியுதவி செய்து ஊக்குவிக்கிறது. அந்த வகையில் ‘சட்ட அறிவுக்களஞ்சியம்’ என்ற இந்த மூன்றாவது நூலையும் ஆசிரியர் எழுதி வெளியிட்டுள்ளார்.
இதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் கோர்ட் நடவடிக்கைகள் பற்றி, அனுபவ ரீதியாக, பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் கூறப்பட்டு உள்ளன. சட்டங்கள் எப்படி இயற்றப்படுகின்றன? சட்டத்தில் ஓட்டை என்பது என்ன? வழக்கறிஞர்களின் கடமைகள் என்னென்ன? குறுக்கு விசாரணை, சாட்சியங்களை சேகரிப்பது எப்படி?… இப்படி சுமார் 155 தலைப்புகளில், கட்டுரை வடிவில் சட்ட அறிவுக்களஞ்சியம் தொகுக்கப் பட்டுள்ளது. மக்களுக்கு பயனுள்ள நூல்களில் இதுவும் ஒன்று.
III-5 மதிப்புரையாக்கம் – பரக்கத் – உழைப்பவர் உலகம் ஜனவரி-2009
இந்நூல், ஆசிரியருக்கு 3-வது நூல் ஆகும். மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதி உதவி ரூ 40,000/-ஐப் பெற்று 400 பக்கங்களில் இவ்வரிய நூலை 8000 படிகள் அச்சடித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள எல்லாப் பொது நூலகங்கள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கும், காசின்றி நன்கொடையாக வழங்குவதற்காகவே வெளியிடப்பட்டுள்ளது என அறிய வருகிறது.
ஆசிரியர் தன்னிடம் குவிந்துள்ள சிந்தனைகளை அள்ளி அள்ளி, தெள்ளத் தெளிவாக, உள்ளத் துணிவுடன் தந்திருப்பது வியப்பை விளைவிக்கிறது. சட்டம் பயின்றவர்கள், நீதிபதிகள்,, காவல் துறையினர், அனைவரையும் பொதுவாகக் கடுமையாக விமர்சனம் செய்யும் இவரை முறைத்து ஏற இறங்கப் பார்த்தால், இவரது பதில், மகாத்மா காந்தி தனது 40-ஆவது வயதில் எழுதிய “இந்திய சுயராஜ்யம்” என்ற நூலின் 11-வது அத்தியாயத்தைப்
படித்துப் பார்க்கும்படி கூறுவது இவரது கருத்துக்கு உரமாகி விட்டது. மகாத்மா காந்தியாரின் நூல் கருத்தை இந்நூலின் கடைசி அட்டையில் தந்துள்ளார்.
நூலில் சட்ட நுணுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு 150-க்கு மேற்பட்ட தலைப்புகள், அவற்றைத் துணிவுடன் அலசி ஆராய்ந்து அவருக்கே உரிய பாணியில் கருத்துக்களை நல்லது கெட்டது பார்க்காமல் எல்லாம் நல்லதாகவே நினைத்து படிப்பவர்களின் முடிவுக்கு விட்டு விடுகிறார்.
பக்கம் 270-இல் “தமிழா ‘ழகரம்’ பேசு” என்ற தமிழக மக்களுக்குத் தேவையான ஒரு அருமையான தலைப்பின் கீழ்… தமிழர்கள் தாம் பேசும் பேச்சில் “ழகர ஒலி”– யை மாற்றி விடுவதால், ஆசிரியர்களுக்கு சரியான பயிற்சி மூலம் திருத்திக் கொள்ள வழி காட்டுவது தேவையாகிறது. இவரன்றோ தாய் மொழி மீது உண்மையான பற்றுள்ள தமிழ் எழுத்தாளன்.
மேலும், ‘Tamil Nadu’ டமில் நடு என்பது ஆங்கிலத்தில் தவறான சொல்லொலியில் வரக் கூடியதைத் தமிழில் “தமிழ்நாடு” என்று படிக்கப் பழக்கியது சரியல்ல என்பதைச் சுட்டிக் காட்டி, அது தமிழ் ஒலிப்பு முறைக்கு ஏற்ப THAMIZH NAADU (தமிழ்நாடு) என்று இருக்க வேண்டும் என்று “தமிழ் ழகரப் பணி மன்றத்தின்” வெளிப்பாட்டை சிந்தித்த சிந்தனையாளன் ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’. இங்கர்சாலாக (அமெரிக்க சீர்திருத்தவாதி) வரவேண்டும் என்ற வேட்கையுடன் செயல்படுகிறார். அதற்காக இந்நூல் வாயிலாக மக்களுக்கு ஓர் சந்தர்ப்பத்தை அளித்துள்ளார். சட்டம் ஒரு அறிவுக்களஞ்சியம்தான் என்பதை, நூல் தலைப்பு மூலம் ஆசிரியர் ஒப்புக் கொண்டுள்ளதாக கருதுவோம்.
கவிஞர் கடலூர் அ.தேவநாதன்
III-6 – நன்றி
நீதியைத்தேடி. நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! வரிசையில் வரும் அனைத்து சட்ட விழிப்புணர்வு நூல்கள் குறித்தும், சமுதாயத்தில் ஏதாவதொரு விதத்தில் தனது கடமையாக செய்தியைச் சொல்லும் அனைத்து செய்தியாளர்களுக்கும் நன்றி!
வாரண்ட் பாலா