II வெளியீட்டாளர் உரை
2010-க்குள் அனைவருக்கும் சட்டக்கல்வி என்ற வகையில் வாரண்ட பாலா அவர்கள் சட்ட விழிப்புணர்வுக்கு என திட்டமிட்டுள்ள ஐந்து நூல்களில் இச்சட்ட அறிவுக்களஞ்சியம் மூன்றாவது படைப்பாகும்.
இக்களஞ்சியத்தில் வழக்குக்கு மட்டுமல்லாது அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் பல்வேறு சட்ட விசயங்களை மிக எளிமையாகவும், நகைச்சுவை உணர்வோடும், சிந்திக்கும் படியும் எழுதியுள்ளார். அல்ல அல்ல. எப்போதும் போலவே நம்முடன் பேசியுள்ளார்.
பேசுவதற்கு என்று பல்வேறு தொழில் நுட்ப சாதனங்கள் எல்லாம் உலகெங்கும் உள்ள பட்டித்தொட்டிகள் எல்லாம் பரவி, பேசியவைகள் அனைத்தும் காற்றோடு கரைந்து கொண்டு இருக்க, தமது கருத்துக்கள் கரையாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, எழுத்து மூலமாக பேசுவதை முதல் முதலாக கண்டு பிடித்து அதில் எதிர்பார்த்த வெற்றியையும் பெற்றுள்ளார்.
ஐம்புலன்களில் பார்ப்பதால் உணர்தல் 65%, கேட்பதால் உணர்தல் 20%, மற்ற புலன்களால் உணர்தல் தலா 5% என்று, ஒருவர் உணரும் அறிவியல் தன்மையில், உண்மையில், அவரின் கடமையாக 85% கட்டாயமாக உணரும் நிலைக்கு நம்மை எல்லாம் தள்ள வேண்டும் என்பதற்காகவே, இக்களங்சியத்தில் தனக்கே உரிய பாணியில் முயன்று பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளார்.
பொதுவாக எழுத்தாளர்கள் எத்தனை நூல் எழுதினாலும், அது ஒவ்வொன்றிலும் அவர்களைப் பற்றிய குறிப்பையே தந்து அற்ப மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் இவர், தமது கருத்துக்கு எந்த வகையிலும் வலு சேர்க்கும் ஆதாரங்களை வெளியிடுவதையே கொள்கையாக கொண்டு, “தாயிற் சிறந்த கோயிலும் இல்லை; தந்தைச் சொல் மிக்க மந்திர மில்லை” என்ற பழமொழிக்கு ஏற்றவாறு, நமது நாட்டின் தந்தையான மகாத்மா காந்தி அவர்கள், நம் நாட்டு வக்கீல்கள் மற்றும் நீதிபதிகளைப் பற்றித் தனது இந்திய சுயராஜ்யம் என்ற நூலில் சொல்லியுள்ள கருத்துக்களை கண்டுபிடித்து, அதன் மூலமும் தமது கூற்றுக்கள் 100க்கு 100 சதவீதம் உண்மை என்பதை, வெட்ட வெளிச்சமாக நம்மை உணர வைத்து, “நமக்காக நாம்தான் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டுமே அன்றி பிறரை நம்பிப் பலனில்லை” என்பதை எதார்த்தமாக நம்பிக்கையூட்டி உள்ளார்.
அதேபோல் முன் பக்க அட்டைப்படத்தில், “இதில் உள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையே!” என்ற தமது கொள்கைக்கு ஏற்ப, அதிகபட்சமாக நீதிமன்றத்தில் மட்டுமல்லாது, பல்வேறு இடங்களில் சட்டப்படியும் நியாயப் படியும் நிகழ்த்திக் காட்டிய அம்சங்களையும், ஒருங்கே கொண்டு வந்து உண்மையான நபர்களை வைத்தே வடிவமைத்துள்ளார்.
அதிலும் குறிப்பாக, எந்த வகையான நீதிமன்றமாக இருந்தாலும், அந்தந்த நீதிமன்றங்களுக்கு எனத் தனித்தனியாக சட்டங்கள் இருந்தாலும் கூட நியாயம்தான் சட்டம் என்பதே மிகச் சரியானது என்று, பறைசாற்றும் விதத்தில் முகப்பு அட்டை நீதிமன்றத்தில் “நியாயம்தான் சட்டம்” என்ற வாசகத்தை வடிவமைத்திருப்பது, சட்டத்தில் அவரின் ஆழ்ந்த சிந்தனையை, புலமையை வெளிக்காட்டுவதாகவே உள்ளது.
வாரண்ட் பாலா அவர்கள் இணை ஆசிரியராக எழுதி வந்த நீதியைத்தேடி… என்ற மாத இதழை, நூலகத்திற்கு வழங்கவே 2006 ஆம் ஆண்டு மத்திய அரசு ரூ-15,000 நிதி வழங்கியது. ஒரு மாத இதழை கொடுப்பதன் மூலம் நாம் நினைக்கும் சட்ட விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்தி விட முடியாது. என்றும், நூலாக வழங்குவதுதான் சரியானதாக ஆக்கப் பூர்வமானதாக இருக்கும் எனக் கருதினார்.
கர்ம வீரர் காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த போது, தமிழ்நாட்டு மக்களுக்கு கல்வியறிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, போதுமான பள்ளிக் கூடங்களை திறக்க எண்ணியும், மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தவும், திட்டம் தீட்டிய போது ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க, குழந்தைகளின் கல்விக்காக பிச்சை கூட எடுப்பேன் என்று சொன்னதாக கூறுவது கடந்தகால வரலாறு.
அதேபோல், இந்திய மக்களின் சட்ட விழிப்புணர்வுக்காக பிச்சை எடுத்தாவது நூலாகத்தான் கொடுப்பேன் என்று கூறி நன்கொடை வசூல் செய்ய ஆரம்பித்து, ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்த்த அளவுக்கு, வெற்றிகரமாக சட்ட விழிப்புணர்வு கடமையைச் செய்து வருகிறார் என்பது, எங்களுக்கு மட்டுமே நன்றாகத் தெரிந்த நிகழ்கால வரலாறு.
சாதாரணமாக சட்ட விழிப்புணர்வு இல்லாதவர்கள் கூட, அரசு பணம் கிடைத்தால் அதில் சுருட்டி சொகுசாக வாழ நினைப்போருக்கு மத்தியில், தமக்கு இருக்கும் சட்ட விழிப்புணர்வு நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற ஒரு தீவிரவாதியா? என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தோம். எங்களோடு சேர்ந்து மத்திய அரசும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. அதனால்தான் கடந்த ஆண்டு ரூ-30, 000 நிதியுதவி வழங்கியது. இந்த ஆண்டு ரூ-40,000 வழங்கியுள்ளது.
இது போன்று அதிகளவு தொகையை இந்தியாவில் வேறு யாரும் வாங்கியது இல்லை என்பதும், கடந்த ஆண்டு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு நேரில் சென்ற போது தெரிய வந்தது. ஏனெனில், சட்ட விழிப்புணர்வை வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்வது இல்லை.
தீவிரவாதி என்றால் ஆயுதங்களைத் தூக்கி சமுதாயத்தைப் பாதிக்கும் குற்றச் செயல்களை புரிபவர்கள் தானே? சட்ட விழிப்புணர்வூட்டும் இவரை எப்படித் தீவிரவாதி என்று சொல்ல முடியும்? தீவிரவாதி என்றால், “தான் நிர்ணயித்த இலக்கை அடையும் வரை அதற்காக தீவிரமாக போராடுபவர்கள் அனைவருமே தீவிரவாதிகள்தான்” என்ற அருமையான ஒரு விளக்கத்தை அவரே கொடுத்திருக்கிறார். மற்றபடி, ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள் தீவிரவாதிகள் இல்லையாம் அவர்களுக்கு பெயர் “பயங்கரவாதிகளாம்”. அட ஆமாம்! உண்மைதானே என்று யோசிக்க வேண்டியுள்ளது.
இப்படித் தனது சிந்தனை அறிவால் சட்டத்தை இதுவரை யாரும் பார்க்காத வித்தியாசமான கோணத்தில், அதே நேரம் ஆக்கப் பூர்வமாக, அதிசயம் நடக்கும் விதமாகவே நமக்கெல்லாம் பாடம் நடத்தியுள்ளார். நாட்டு நடப்புகளை நாம் எளிதாக புரிந்து கொள்ள, வீட்டோடு நாட்டை ஒப்பிட்டும், வீட்டில் உள்ள நபர்களின் அதிகாரங்களைப் போல்தான், நாட்டில் உள்ளவர்களின் அதிகாரங்களும் என்றும், “நம் வீடு போன்றது தான் நம்நாடு” என்றும் எதார்த்தமாக புரியவைக்கிறார்.
இப்படி எல்லாவற்றிலும் வித்தியாசமான சிந்தனை. இவரின் சட்ட ஆராய்ச்சியில், “இச்சிந்தனைக் களஞ்சியம் ஒரு மைல் கல் அல்ல. பல மைல் கல்கள் என்பதால் உங்களின் சிந்தனைக்கு நிச்சயம் விருந்தாக அமையும் என்பதில் எங்களுக்கு ஐயம் ஏதுமில்லை”. இக்களஞ்சியத்தை வெளியிடுவதால் பல வகையிலும் பெருமை அடைகிறோம். இந்தப் பெருமை நிதி கொடுத்த மற்றும் பங்கு பெற்றுள்ள உங்களையேச் சாரும்.
எந்நாளும் எங்களின் சட்ட விழிப்புணர்வு ஆக்கத்திற்கு ஊக்கம் தருவீர்கள் என நம்புகிறோம். சாதி, மத, மொழி பேதங்களைக் கடந்து அனைத்து மொழியிலும் சட்ட விழிப்பு உணர்வு ஊட்டிட விருப்பம் உள்ளவர்கள் அனைவரையும் வாரீர்! வாரீர்! என அன்போடு அழைக்கிறோம்.
சட்ட விழிப்புணர்வில் – கேர் சொசைட்டி