GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 என்ன சொல்கிறது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 என்ன சொல்கிறது.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ல் உள்ள சட்டப் பிரிவுகள், துணைப் பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் விதிகள், துணை விதிகள், அரசாணைகள் மற்றும் பல்வேறு திட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது ஊராட்சி மன்றத் தலைவர்களின் கடமையாகும்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ன்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தாலோ அல்லது கீழ்க் குறிப்பிட்ட காரணங்களால் முறைகேடுகள் செய்தாலோ தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205 ன்படி கிராம ஊராட்சி தலைவரை பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கலாம்.

1. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ன்படி கிராம ஊராட்சி மன்ற அங்கீகாரம் பெறாமல் செலவு செய்தல்

2. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 110 மற்றும் 111 ல் குறிப்பிட்டுள்ள கடமைகளை செய்ய தவறுதல்

3. தமிழ்நாடு ஊராட்சிகள் கட்டிட விதி 1997 ல் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் கட்டிட அனுமதி வழங்குதல், தன்னிச்சையாக மனைப் பிரிவு (Layout) அனுமதி வழங்குதல்

4. அரசாணை எண் – 92, ஊரக வளர்ச்சித்துறை நாள் – 26.03.1997 மற்றும் அரசாணை எண் – 146, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை (C4), நாள் – 17.08.2007 மற்றும் அரசாணை எண் – 43, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, நாள் – 21 02.2007 ன்படி, ஊராட்சி நிர்வாகம் மற்றும் நிதியினை தவறான முறையில் கையாடல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தல். மேலும் பல்வேறு அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு வரி விதித்தல் மற்றும் கட்டணங்களை நிர்ணயித்தல், வசூல் செய்வதில் முறைகேடு செய்து ஊராட்சிக்கு இழப்பினை ஏற்படுத்துதல்

5. அரசாணை எண் – 203, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, நாள் – 20.12.2007 ன்படி கிராம ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஊராட்சியின் அனுமதி மற்றும் முறையான ஒப்பந்தம் கோரி செய்யாமல் தன்னிச்சையாக பணிமேற்கொண்டு முறைகேடு செய்தல்

6. தமிழ்நாடு அரசு அவ்வப்போது முறைப்படுத்தும் திட்டங்களை நிர்வாக அலுவலர் என்ற முறையில் செயல்படுத்த தவறுதல் அல்லது திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுத்தல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்து லாபம் அடைதல்

7. ஊராட்சிக்கு வர வேண்டிய வரவினங்களை தடுத்து சுயலாபம் அடைய, ஊராட்சிக்கு இழப்பினை ஏற்படுத்துதல் ஆகிய காரணங்களுக்காக கிராம ஊராட்சி தலைவரை பதவியிலிருந்து நீக்கலாம்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205 ல் இதற்கான வழிமுறைகள் குறித்து கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205 ன் உட்பிரிவு 1(a) மற்றும் 1( b) ன்படி மாவட்ட ஆட்சியர் தானாகவோ அல்லது ஊராட்சி மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 3ல் 2 பங்கிற்கு குறையாத உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அளிக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் திருப்தியடையும் பட்சத்தில் குறித்த ஒரு தேதிக்குள் விளக்கம் அளிக்க கோரி ஊராட்சி தலைவரை அறிவிப்பு வாயிலாக கோரலாம்.

உட்பிரிவு 2 ன்படி ஊராட்சி தலைவர் அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் நடவடிக்கையை கைவிடலாம். விளக்கம் திருப்தி இல்லை என்றாலோ அல்லது குறிப்பிட்ட தேதிக்குள் விளக்கம் அளிக்க தவறினாலோ, ஊராட்சி தலைவரை பதவியிலிருந்து நீக்குவது குறித்து கிராம ஊராட்சியின் கருத்தினை பெற சம்மந்தப்பட்ட தாசில்தாரை, மாவட்ட ஆட்சியர் கோருவார்.

உட்பிரிவு 3 ன்படி தாசில்தார் அந்த அறிவிப்பையும், விளக்கத்தையும், கிராம ஊராட்சித் தலைவரை பதவியிலிருந்து நீக்குவதற்கான கருத்துருவையும் கிராம ஊராட்சி அலுவலகத்தில் தாம் நிர்ணயித்த நேரத்தில் கிராம ஊராட்சியின் கூட்டத்தை கூட்ட வேண்டும்.

உட்பிரிவு 4 ன்படி தாசில்தார் இதற்கென கூட்ட அறிவிப்பை தலைவருக்கும், அனைத்து உறுப்பினர்களுக்கும் கூட்ட தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பாக சேர்ப்பிக்க வேண்டும்.

உட்பிரிவு 5 ன்படி இந்த கூட்டத்திற்கு தாசில்தாரை தவிர வேறு யாரும் தலைமை வகிக்கக்கூடாது. தாசில்தார் கூட்ட நேரத்திற்கு அரை மணி நேரத்திற்குள் வரவில்லை என்றால் வேறு ஒரு தேதிக்கு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும்.

உட்பிரிவு 6 ன்படி தாசில்தார் வேறு காரணங்களுக்காக கூட்டத்திற்கு தலைமை வகிக்க வரவில்லை என்றால் அதற்கான காரணத்தை எழுத்து மூலமாக பதிவு செய்து வேறு ஒரு தேதியில் கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும். அடுத்த கூட்டம் 30 நாட்களுக்குள் இருக்க வேண்டும். அக்கூட்டத்திற்கான அறிவிப்பையும் 7 முழு நாட்களுக்கு முன் தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் சேர்ப்பிக்க வேண்டும்.

உட்பிரிவு 7 ன்படி மேலே கூறப்பட்டுள்ள உட்பிரிவுகளான 5 மற்றும் 6 ல் கூறப்பட்டுள்ள காரணங்களை தவிர வேறு காரணங்களுக்காக கூட்டத்தை தள்ளி வைக்கக்கூடாது.

உட்பிரிவு 8 ன்படி தாசில்தார் தலைமையிலான கூட்டம் துவங்கிய உடன் பதவி நீக்கம் குறித்த முடிவுகளை கூட்டத்தில் பரிசீலனை செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பிய அறிவிப்பையும், கிராம ஊராட்சித் தலைவர் விளக்கம் கொடுத்திருந்தால் அதனையும் தாசில்தார் படித்து காட்ட வேண்டும்.

உட்பிரிவு 9 ன்படி தாசில்தார் கூட்டத்தில் எந்தவிதமான விவாதமும் செய்யக்கூடாது.

உட்பிரிவு 10 ன்படி மாவட்ட ஆட்சியர் அனுப்பிய யோசனையை ஏற்றுக் கொண்டாலோ அல்லது நிராகரித்தாலோ கிராம ஊராட்சி செய்த முடிவைக் கூட்டத்தின் நடவடிக்கை குறிப்பில் பதிவு செய்து கொண்டு அந்த நடவடிக்கை குறிப்பின் நகலை கூட்டம் முடிந்ததும் மாவட்ட ஆட்சியருக்கு தாசில்தார் அனுப்பி வைக்க வேண்டும்.

உட்பிரிவு 11 ன்படி மாவட்ட ஆட்சியர், ஊராட்சியின் கருத்தினை பரிசீலனை செய்த பிறகு அவருடைய உளத்தேர்வின்படி அறிவிக்கை வாயிலாக ஊராட்சித் தலைவரை பதவியிலிருந்து நீக்கவோ அல்லது மேல் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கவோ செய்யலாம். பதவியிலிருந்து நீக்க மாவட்ட ஆட்சியர் முடிவு செய்தால் தமிழ்நாடு அரசிதழில் பதவி நீக்க அறிவிப்பு செய்ய வேண்டும். அந்த நாளிலிருந்து பதவி நீக்கம் அமலுக்கு வரும்.

உட்பிரிவு 12 ன்படி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்யும் அல்லது நிறுத்தி வைக்கும் அதிகாரம் அரசுக்கு உண்டு.

உட்பிரிவு 13 ன்படி மாவட்ட ஆட்சியருடைய அறிவிக்கை வெளியான தேதி அல்லது மேல்முறையீட்டின் மீது இறுதி ஆணை வெளியிடப்பட்ட தேதி, இந்தத் தேதிகளிலிருந்து 3 ஆண்டுகள் முடிவடைவதற்குள் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட தலைவர் மீண்டும் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட தகுதியில்லை.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

நீர்நிலையில் ஆக்கிரமிப்பு செய்து அரசே கட்டிடம் கட்டினால் கூட நடவடிக்கை எடுப்பது எப்படி?நீர்நிலையில் ஆக்கிரமிப்பு செய்து அரசே கட்டிடம் கட்டினால் கூட நடவடிக்கை எடுப்பது எப்படி?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு

Application for obtaining Encumbrance certificate in Puducherry | புதுச்சேரி பதிவுத்துறையில் வில்லங்க சான்று பெறுவதற்கான விண்ணப்பம்.Application for obtaining Encumbrance certificate in Puducherry | புதுச்சேரி பதிவுத்துறையில் வில்லங்க சான்று பெறுவதற்கான விண்ணப்பம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)