24. சுதந்திர உரிமைகள்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற மூலாதாரத்தின் கீழ், நமக்கு உள்ள மற்ற சுதந்திர உரிமைகள் குறித்துப் பார்ப்போம்.
இந்தியாவில் பிறந்த நாம் ஒவ்வொருவருமே அதிர்ஷ்ட சாலிகள். ஏனெனில், உலக நாடுகள் எவற்றிலும் வழங்கப்படாத. அனைத்து உரிமைகளும், அடிப்படை உரிமைகளாக வழங்கப்பட்ட நாடு நமது இந்தியா தான் என்பதையும் முன்பே பார்த்தோம். அதிலும் குறிப்பாக இந்த உரிமைகள் நமக்கு மட்டுமல்லாது, உலகமக்கள் யாவருக்கும் பொருந்தும் என்பதையும் முன்பே பார்த்தோம், என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
ஆனால், இப்படி வழங்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் ஒவ்வொருவரும் தவறாக பயன்படுத்தியதன் விளைவாக, நாட்டின் முன்னேற்றம் தடைப்படுதல், லஞ்சம் வளர்ந்து, மனித நேயமற்ற செயல்கள் போன்ற சட்ட விரோத செயல்களால், எப்போதும் எல்லோரும் ஏதாவதொரு பிரச்சனையில் சிக்கித்தவித்து கொண்டு இருக்கிறோம்.
இந்த சிக்கலுக்கு முக்கிய காரணம் யார்? என எத்தனை நியாயமன்றம் வைத்து வாதாடினாலும் அதுவும் கூட தீர்க்க முடியாத பிரச்சனையாகத்தான் இருக்கும்.
ஏனெனில், தற்போதைய நியாயமன்றங்கள் ஆன நீதிமன்றங்கள் எல்லாம் பிரச்சனைகளை தீர்க்காமல். கூடுதலாக பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றன.
என்னைப் பொருத்தவரை “நாட்டில் நடக்கும் அத்தனை குற்றங்களுக்கும் தலையாய பொறுப்பு நீதிமன்றங்கள்தான்”
எது எப்படி இருப்பினும், “அரசு ஊழியர்கள் தங்கள் கடமையை சரியாக ஆற்றினால், நாட்டில் 90% பிரச்சனைகள் இருக்காது”. 10% பிரச்சினைகள், பொது ஊழியர்கள் தங்களின் கடமையை சரியாக செய்யும் போது, பிரச்சினைகள் இல்லாத நாடாக நம்நாடு திகழும்.
இப்படி ஒவ்வொருவரும் தமது கடமைகளைச் செவ்வனே ஆற்றாததற்குக் காரணம், நாடு முழுவதும் அரசு சட்டக் கல்வியை அடிப்படைக் கல்வியாக அமல்படுத்தாததும், அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப் படுகிறவர்களுக்கு, சிறப்பான சட்டப் பயிற்சிகளை அளிக்காததும், குடிமக்கள் யாரோ ஒரு சிலர் கேட்கும் சட்டப்படியான கேள்விகளைக் கூட, கண்டும் காணாமல் இருப்பதும்தான். இது போன்ற எண்ணற்ற குறைகளை, களையத் தேவையான சட்ட சங்கதிகளை அறியவே இக்களஞ்சியத்தை முன்னெடுத்துள்ளேன்.
- உங்களின் சுதந்திர உரிமைகள் ஆவன,
இந்திய அரசமைப்பு கோட்பாடு 19 / 1 ஆனது, கீழ்காணும் சுதந்திர உரிமைகளை வழங்கி உள்ளது.
- (அ) பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துக் கூறும் உரிமை.
- (ஆ) ஆயுதங்கள் இன்றி அமைதியாகக் கூடும் உரிமை.
- (இ) சங்கங்களையும், அமைப்புகளையும் ஏற்படுத்துவதற்கான உரிமை.
- (ஈ) இந்தியாவில் தங்குதடையின்றி நடமாடும் உரிமை.
- (உ) இந்தியாவில் விரும்பிய இடத்தில் வசிக்க, தங்க உரிமை.
- (ஊ) இந்தியாவில் சொத்தை வாங்கவும், வைத்திருக்கவும், விற்கவும் உரிமை.
- (எ) எந்த தொழிலையும் செய்வதற்கும், விரும்புகிற பணியைத் தேர்ந்தெடுப்பதற்கும் உரிமை உள்ளது.
இவைகளைப்பற்றி தற்போது விரிவாக பார்ப்பது நமது அடிப்படைப் புரிதலுக்கு ஆணித்தரமானதாக இருக்கும்.
மொத்தத்தில், ”உலகிலேயே அதிகபட்சமாக நம் நாட்டில் தான் ஏழு சுதந்திர உரிமைகள், அடிப்படை உரிமைகளாக வழங்கப் பட்டுள்ளன”.