28. அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.
நமக்கு எவ்வளவு அடிப்படை உரிமைகளை வழங்க முடியுமோ, அவ்வளவையும் இந்திய அரசமைப்பு வழங்கி விட்டது என்பதற்காக
- யாரைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம், கருத்து சொல்லலாம் என்றோ,
- அமைதியான முறையில் சாலையில், அல்லது பொது இடத்தில் கூட்டமாக கூடி, ஏதாவது செய்யலாம் என்றோ,
- சங்கம், அமைப்பு, இயக்கம், அறக்கட்டளை, அரசியல் கட்சி மூலம், அதன் மூலம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றோ,
- யார் வீட்டிற்குள்ளும், அல்லது தடை செய்யப்பட்ட, அல்லது பாதுகாக்கப்பட்ட, ஒரு அலுவலகத்தின் எப்பகுதிக்கும் செல்லலாம் என்றோ,
- அடுத்தவருக்குச் சொந்தமான இடத்தில் முறையான அனுமதி இல்லாமல் தங்கலாம், வசிக்கலாம் என்றோ,
- விற்பனைக்கு கிடைக்கும் எப்பொருளையும், வாங்கலாம். வைத்திருக்கலாம், விற்கலாம் என்றோ,
- எந்த தொழிலையும், எந்த வேலையையும், எந்தப் பணியையும் செய்யலாம் என்றோ, நினைத்தால் கண்டிப்பாக இயலாது.
ஆம்! உங்களுக்கு வழங்கப்பட்ட அந்த உரிமைகளை, நீங்கள் எப்படி உங்கள் விருப்பபடி பயன்படுத்த நினைக்கிறீர்களோ, அது போல மற்றவர்களும் பயன்படுத்த நினைத்தால், நாடு என்ன ஆகுமென கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
“உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள், அடுத்த நபர்களின் உரிமையை பறிக்கக் கூடாது. இதன் மூலம் குற்றம் ஏதும் நடைபெறக் கூடாது. குற்றத்தின் மூலம் சமுதாயத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடாது”.
மொத்தத்தில் இந்தியாவின் இறையாண்மைக்கு, எந்த விதத்திலும் பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதற்காக, இந்திய அரசமைப்புக் கோட்பாடு “19/1/அ” முதல், “எ” வரை, உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமைகளையும், “நியாயமான” முறையில் கட்டுப்படுத்தி, சட்டங்கள் இயற்றவும், அதன் மூலம் நாட்டின் இறையாண்மையைக் காத்திடவும், அரசுக்கு இந்திய அரசமைப்புக் கோட்பாடு “19/2” முதல், “6” வரையிலானவற்றில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.