மக்களாட்சி என்றால் என்ன?
மக்களாட்சி என்பதற்கு, உருப்படியான அர்த்தத்தை யாரும் உருவாக்கவில்லை. சட்டத்திலும் இதற்கு தக்க விளக்கம் இல்லை. சட்டத்தில் விளக்கம் இருக்கும் பல சங்கதிகளே சங்கடத்தில் இருக்கும் போது விளக்கமே இல்லாத “மக்களாட்சி” என்ன பாடுபடுகிறது என்பதை அனுதினமும் கண்டுவருகிறோம்.
மக்களாட்சி என்பதற்கு, பல்வேறு தரப்புகளில் இருந்து பல்வேறு விதமான விளக்கங்கள் தரப்பட்டாலும், அதிகபட்சமாக எல்லோருக்கும் தெரிந்தது அல்லது கேள்விப்பட்டது என்று சொல்லப்போனால், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கள்தான் மக்களை ஆட்சி செய்கிறார்கள்” என்பதுதான்
ஆகா! என்னே கண்டுபிடிப்பு மக்களால் தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள்தான் மக்களை ஆட்சி செய்கிறார்களாம். ஆகவே இது மக்களாட்சியாம்! நான் தெரியாமத்தான் கேட்கிறேன்! மற்ற நாடுகளில் எல்லாம் ஆட்சி செய்பவர்களை மக்கள் தேர்ந்தெடுக்காமல் ஆடு, மாடு போன்ற விலங்குகளா தேர்ந்தெடுக்கிறன?
பொதுவாக கருத்து சொல்லுபவர்கள் எதையும் சிந்தித்து சொல்லுவதில்லை. வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி விட வேண்டியது. அது சரியாக இருந்தால் என்ன? அல்லது தவறாக இருந்தால் என்ன? யாருக்கு தெரியப்போகிறது என்ற அசட்டு தைரியம்தான்.
இப்படி எதையாவது ஏடாகூடமாக சொல்லியே காலத்தை ஓட்டிக் கொண்டும் மக்களை மாக்களாக்கி கொண்டும் இருக்கிறார்கள் பலர்.
சரி, நாம விசயத்துக்கு வருவோம்.
நமது நாடான இந்தியாதான் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிறார்கள்.
“சட்டப்படிதான் எல்லா விசயங்களும் நடக்கின்றன என்ற அடிப்படையில், நம் நாடுதான் மிகப்பெரிய மக்களாட்சி நாடு என்பது சட்டப்படி எப்படி சரியாகும்?” என்ற சிந்தனை சில வருடங்கள் என் மண்டையை குடைந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில்தான் எதார்த்தமாக ஒரு நாள், திருமணம் தொடர்பான சட்ட நூலைப் படிக்க நேர்ந்தது. அப்போதுதான் மக்களாட்சி என்றால் என்ன? என்பதற்கான ஆணிவேர்
தெரிந்தது. ஆணிவேரைக் கண்டுபிடித்து விட்டபின், அதன் கிளைகள் எங்கெங்கு செல்கின்றன என்பதை எல்லாம் ஆராய்ந்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தேன்,
இந்தத் தீர்வைக் கொண்டு பல்வேறு இடங்களில் பாடம் நடத்திய போது ஆச்சரியப்படாதவர்களே இல்லை.
ஆம்! நான் கண்ட இந்த தீர்வு சட்டப்படியானதுதானே தவிர சம்பிரதாயப்படியன்று.
உலகில் பல நாடுகள் இருக்கின்றன. அந்தந்த நாடுகளுக்கென்று தனித்தனியான அரசமைப்புகளும் இருக்கின்றன. அந்தந்த நாட்டு அரசமைப்புகளில் அந்தந்த நாட்டு மக்களின் சாதி, மத, மொழி, ஒழுக்கம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கான உரிமைகளை மட்டுமே வரையறை செய்திருப்பார்கள்.
ஆனால், “நம் நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது, உலகத்தில் வசிக்கும் எந்த மதத்தவருக்கும், இனத்தவருக்கும், அவர்கள் நாட்டு கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்கள் நாட்டில் அவர்களுக்கு என்னென்ன உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளனவோ, அத்தனை உரிமை களையும் உலகத்திலேயே அடிப்படை உரிமையாக வழங்கியுள்ள ஒரே நாடு நமது இந்தியாதான்”
ஆம்! இந்தியாவில் வசிக்கும் ஒரு கிறித்துவர், எந்த விதத்தில் கிறித்துவராக இருந்தாலும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் உலக அளவில் கிறித்துவர்கள்
திருமணம் செய்வதற்கு என்று இங்கிலாந்து திருச்சபையால் உருவாக்கப் பெற்ற சட்ட திட்டங்களேதான் இந்தியாவிலும் சட்டமாக இருக்கிறது.
அதேபோல, ஒரு முகமதியர், எந்த விதத்தில் முகமதியராக இருந்தாலும், திருமணம் செய்து கொள்வதற்கென்று அரபு நாடுகளில் என்ன சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதோ அதே சட்ட திட்டங்கள்தான் நம் நாட்டிலும் வகுக்கப்பட்டுள்ளன.
காதலுக்கு சாதி, மதம், இன, மொழி, பேதம் ஆகியன கிடையாது என்பார்கள். இப்படி யாராவது திருமணம் செய்து கொள்ள மற்ற நாடுகளில் சட்டம் ஏதும் இருக்கிறதா? என்பது தெரியவில்லை. ஆனால் நம் நாட்டில் அதற்கு சிறப்பான ஒரு மரியாதையைக் கொடுக்கும் விதமாக, “சிறப்பு திருமண சட்டம் 1954” என்ற சட்டத்தையும் உருவாக்கி நடைமுறைப் படுத்தி இருக்கிறார்கள்.
மொத்தத்தில், “எப்படி பார்த்தாலும் யாருடைய உரிமைகளும் பறிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில், நமது நாடு தெளிவாகவே இருக்கிறது என்பதை நாம் தற்போது தெரிந்து கொண்டிருப்பதன் மூலம், இந்தியாவில் பிறந்தவர்கள் மட்டுமல்லாது குடியேறி வசிப்பவர்களும் கூட பெருமைப்பட வேண்டும்”.