21. சட்டம் சர்வ சாதாரணம்தான்.
சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
பொதுவாக நீங்க யார் என்று கேட்டால், கேட்பவர்களின் கேள்விக்கும், தகுதிக்கும் தக்கவாறு, நான் என்று நமது பெயரைச் சொல்லுவோம், அல்லது இனத்தைச் சொல்லுவோம், அல்லது மதத்தைச் சொல்லுவோம். இவை எல்லாவற்றையும் விட, ஒட்டு மொத்தத்தில் இந்தியக் குடிமகன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவோம். இந்தியக் குடிமகன் என்ற வார்த்தையை யாரும் பயன்படுத்தாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
நாமெல்லாம் இந்திய குடிமக்கள் என்று எந்த சட்டத்தின், எந்தக் கோட்பாடு அங்கீகரிக்கிறது? என்று அவர்களைத் திருப்பிக் கேட்டால், திருத்திருவென விழுக்கத்தான் தெரியுமே ஒழிய பதில் சொல்லத் தெரியாது.
இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும், குறைந்தபட்சமாக, இந்த ஒன்றாவது தெரிந்திருக்க வேண்டும். அப்படி தெரிந்து வைத்திருந்தால்தான் நாம் இந்தியக் குடிமக்கள் என்று சொல்லிக் கொள்வதற்கே முதலில் தகுதி உள்ளவர்கள் ஆவோம்.
ஆம்! இந்திய அரசமைப்புக் கோட்பாடு 5 தான் பெரும்பாலும் நம்மை எல்லாம், இந்தியக் குடிமக்கள் என அங்கீகரிக்கிறது.
அதாவது கோட்பாடு 5 இன் வரையறையானது,
அ) இந்திய மண்ணில் பிறந்தவர்கள்,
ஆ) ஒருவருடைய பெற்றோரில் ஒருவர் இந்தியராக இருக்கும்போது,
இ) இந்திய அரசமைப்பு அமலுக்கு வருவதற்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இந்தியாவில் வசித்து வரும் ஒவ்வொருவரும்:
மேலும், யார் யாரெல்லாம் இந்தியக் குடிமக்கள் எனக் கோட்பாடு 6 வரையறையை கூறுகிறது.
கோட்பாடு 6-இன் வரையறையானது,
அ) பாகிஸ்தானில் இருந்து வெளியேறி இந்தியாவில் வசித்து வரும் ஒவ்வொரு நபரும்,
ஆ) இந்திய அரசமைப்புக் கோட்பாடு 395-இன்கீழ், அமலில் இருந்து நீக்கப்பட்டுள்ள இந்திய அரசாங்கச் சட்டம் 1935-இன்படி, இந்தியாவில் பிறந்த நபர், அல்லது அவரின் பெற்றோரில் ஒருவர், அல்லது தாத்தா பாட்டி ஆகியோரில் ஒருவர் பிறந்திருந்தாலும்,
இ) 19-07-1948 க்கு முன்பாக இந்தியாவில் குடியேறி தொடர்ந்து வசித்து வருபவரும்,
ஈ) 19-07-1948 க்கு பின்பாக இந்தியாவில் குடியேறிய ஆறு மாதங்களுக்கு பிறகு, இந்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரிடம், இந்தியக் குடிமகனாக, பதிவு செய்த நபரும், இந்தியக் குடிமக்கனாக கருதப்படுவார்கள்.
ஆனால், ஒரு இந்தியக் குடிமகன், தாமே முன் வந்து வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்றிருந்தால், அவர் கோட்பாடு 9-இன்படி இந்தியக் குடிமகன் ஆகமாட்டார்.
நமது பிறப்புரிமை பற்றி இப்ப நன்றாகவே புரிந்து இருக்கும், இதெல்லாம் அடிப்படைக் கல்வியில் சேர்க்க வேண்டிய அறிவுப்பூர்வமான சங்கதிகள். ஆனால், அடியாள் மாதிரி வளர்ந்தபின்தான் தெரிந்து கொள்கிறோம். சரி இப்பவாவது தெரிந்து கொண்டோமே என சந்தோசப்படுவோம்.
இனி நாம் தெரிந்து கொண்டஒவ்வொரு சங்கதியையும், மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுப்போம். சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று ஆசைதான். ஆனால் எப்படி சொல்லிக் கொடுப்பது? எந்த சமயத்தில் சொல்லிக் கொடுப்பது என்பதுதான் விளங்கவில்லை என்று நினைக்கிறீர்களா?
இதற்காக நீங்கள் எதுவுமே செய்ய வேண்டாம். அதற்கான நேரம் வரும் போது பயன்படுத்தினாலே போதும் கேட்பவர்கள் எக்காலத்திலும் மறக்க மாட்டார்கள், எப்படி என்கிறீர்களா? இப்படித்தான்!
இனிமேல் “நீங்க யார் என்று, யார் கேட்டாலும் இந்தியக் அரசமைப்பு கோட்பாடு 5-இன்படி, இந்திய குடிமகன் என்று சொல்லிப்பாருங்க. உங்கமேல அவங்களுக்கு ஒரு தனி மரியாதையே வந்துவிடும்”.
இப்படியொரு தனி மரியாதையை வரவழைப்பதுதான் உண்மையிலேயே சட்டத்தின் மகிமை.