அடமானக் கடன்கள் சட்டம் என்ன சொல்கிறது?
சொத்துக்களை அடமானமாகக் கொடுத்து, கடன் பெறுவது அடமானக் கடன் எனப்படும்.
பணம் கொடுப்பவரிடமே சொத்தை ஒப்படைத்து விட, பணம் கொடுத்தவர் சொத்தை அனுபவித்து வருவார்.
கடன் வாங்கியவர் எப்போது பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறாரோ, அன்று அவர் சொத்தை திரும்ப பெற முடியும்; அதுவரை கடன் கொடுத்தவரே சொத்தின் சொந்தக்காரர் போல சொத்தை அனுபவிப்பார். ஒருவேளை கடன் வாங்கியவர், கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போய்விட்டால், கடன் கொடுத்தவருக்கே சொத்து சொந்தமாகிவிடும். கடன் வாங்கியவர் சொத்தை இழந்துவிட வேண்டியதுதான்.
இப்படித்தான் பழங்காலத்தில் கடன் வாங்கி, சொத்தை அடமானம் வைத்திருக்கிறார்கள். அந்த வகை அடமானத்தை “மார்ட்கேஜ்” Mortgage என்பர். மார்ட் என்றால் இறந்த என்று பொருள் கேஜ் என்றால் பிணை என்று பொருள்.
மார்ட்கேஜ் என்பது பிரென்ச் வார்த்தை, இதைத்தான் இங்கிலாந்து சட்டம் Morguam vadium (or Dead Pledge) என்று சொல்கிறது. அப்படி அடமானம் வைக்காமல் சொத்தை ஒப்படைத்து, அதில் வரும் வருமானங்களை மட்டும், கடன் கொடுத்தவர் அனுபவித்து வந்து, ஒரு காலக்கட்டத்தில் சொத்தை திரும்ப ஒப்படைப்பது என்பது ஒரு வகை அடமானம். இதில் சொத்து பறிபோகாது. இதை இங்கிலாந்து சட்டம் Vivium Vadiam (or Living Pledge) என்கிறது;
இப்படித்தான் பழங்காலங்களில் அடமானங்கள் இருந்திருக்கின்றன. அடமானக் கடன் வாங்குவது என்பது கிட்டத்தட்ட சொத்தை விற்பதற்குச் சமம். கடனை திரும்பிக் கொடுத்தால் மட்டுமே சொத்து திரும்பக் கிடைக்கும். இல்லையென்றால் கடன் கொடுத்தவரின் சொத்தாகிவிடும்.
இந்தியாவில் இப்படிப்பட்ட அடமான முறைதான் வழக்கத்தில் இருந்திருக்கிறது. கடன் கொடுத்தவருக்கு சொத்தை கிரயமாகக் கொடுத்து விடுவது, கடன் வாங்கியவர் பணத்தை திரும்பிக் கொடுக்கும்போது, கடன் கொடுத்தவர் சொத்தை மறுகிரயம் எழுதிக் கொடுப்பார். இதை சென்னை மாகாணத்தில், “அவதி விக்கிரயம்” என்ற பெயரில் நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர். இது ரோமன் சட்டத்தில் உள்ள பிடுசியா Fiducia அடமான முறை ஆகும். அதாவது ஆங்கிலத்தில் Fiducia என்பதாகும். கடன் வாங்குபவர் அவரின் சொத்தை, முழு உரிமையுடன் கிரயமாக, கடன் கொடுத்தவருக்கு எழுதிக் கொடுத்துவிடுவதாகும்.
மற்றொரு அடமான கடன் முறைப்படி, சொத்தின் உரிமையாளர், கடன் வாங்கும்போது, அவரின் சொத்தை, கடன் கொடுத்தவருக்கே கொடுத்து விடுவார். ஆனால் கடன் கொடுத்தவர், அந்த சொத்தை வட்டிக்காக, அல்லது அசலுக்காக, அந்தச் சொத்தில் வரும் வருமானங்களை அனுபவித்துக் கொள்வார். ஒரு குறிப்பிட்ட கால முடிவில், அந்த சொத்தை கடன் வாங்கியவருக்கே அதாவது அந்த சொத்தின் உரிமையாளருக்கே திரும்ப ஒப்படைத்து விடுவார். இதில் அந்த அடமானச் சொத்து திரும்ப கிடைத்து விடும். சொத்து பறிபோகாது. இந்த முறைக்கு ரோமன் சட்டத்தில் பிக்னஸ் அடமானம் அதாவது ஆங்கிலத்தில் Pignus என்று பெயர். இங்கிலாந்தில் இதை யூசுபிரக்சுரி அடமானம் அதாவது ஆங்கிலத்தில் Usufructuary mortgage என்று பெயர். அதாவது ஆங்கிலத்தில் Use the Fruits, பலனை அனுபவித்துக் கொள் என்பதாகப் பொருள்.
இந்த வகை அடமானமுறை தென் இந்தியாவிலும் இருந்திருக்கிறது. இதையே “போக்கிய அடமானம்” அல்லது “சுவாதீன அடமானம்” என்று சொல்வர். மலபார் பகுதியில் இதையே “கனம்” அல்லது “ஒத்தி” என்று சொல்வர்;
முகமதிய சட்டத்திலும், அவதி விக்கிரயம் என்ற வகை அடமானம் போன்றே அடமான முறை இருந்திருக்கிறது. அதற்குப் பெயர் “பை-பில்-வாபா” அதாவது ஆங்கிலத்தில் “Bye-bil-wafa” என்று பெயர். இதில் வட்டிப் பிரச்சனை இல்லை. குரான் கட்டளைப்படி முகமதியர் எவரும் வட்டி வசூல் செய்யக் கூடாது. எனவே கடன் வாங்கியவர் சொத்தை, கடன் கொடுத்தவருக்கு கிரயமாகவே கொடுத்துவிட வேண்டும். அந்த தொகையுடன் மேலும் ஒரு தொகை சேர்த்து திரும்பக் கொடுக்கும் காலத்தில், மறு கிரயம் எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்.