சட்டம் ஒரு பார்வை
தான பத்திரம் என்றால் என்ன? (Gift Deed)
உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முக்கியமான நாட்களில் பரிசு தருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அவர்கள் எதிர்பாரா விதமாக பெரிய செல்வத்தை பரிசாக வழங்குவதை நினைத்துப் பாருங்கள்.. ஆச்சரியமாக இருக்கிறதா.. பலர் அதிக மதிப்புள்ள பொருட்களை பரிசளிக்க முடியும். இதனை “தான பத்திரம்” என்று கூறுவார்கள். தான பத்திரம் என்றால் என்ன? அவற்றை எப்படி உருவாக்குவது போன்ற விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஒருவர் தன்னுடைய அசையா சொத்துக்கள் அல்லது மிக விலைமதிப்புள்ள பொருட்களை பரிசாக அளிக்கும்போது, தான பத்திரம் (Gift Deed) மூலம் வழங்கலாம்.
தான பத்திரம் என்றால் என்ன?:
பரிசு பத்திரம் என்பது பணப்பரிமாற்றம் இல்லாமல், பரிசு வழங்குபவர் தாமாக முன்வந்து, தங்களுடைய சொத்தை பிறருக்கு வழங்கும் சட்டப்பூர்வ ஆவணமாகும். இது எல்லா சொத்துக்களுக்கும் தேவையில்லை என்றாலும் பரிசின் சட்டபூர்வ நிலையை உறுதிப்படுத்த தான பத்திரம் உதவுகிறது.
தான பத்திரங்களில் பல நன்மைகள் உள்ளன. தான பத்திரங்கள் உடனடியாக செயல்படுத்தப்படக் கூடியது. இதற்கு எந்த நீதிமன்ற உத்தரவும் தேவை இல்லை. உயில் மூலம் நீங்கள் செய்யும் செட்டில்மெண்டை விட, தான பத்திரத்தின் மூலம் வழங்கும்போது நேரம் மிச்சப்படுகிறது. தான பத்திரத்தின் கீழ் சொத்தை வழங்கும் நபர் நன்கொடையாளர் என்று அழைக்கப்படுகிறார்.
தான பத்திரத்தை எவ்வாறு உருவாக்குவது?: தான பத்திரத்தை வழங்குபவர் அதனை மனப்பூர்வமாக செய்ய விரும்புவதாகவும், பிறரின் எந்தவித கட்டாயமும் இல்லாமல் இலவசமாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும் வழங்க வேண்டும். தான பத்திரம் தயாரிக்கப்பட்டதற்குப் பிறகு, தான பத்திரத்தை பெறுபவர் அதனை ஏற்றுக் கொள்ளும் விதமாக அதில் கையெழுத்திட வேண்டும். அவர் கையெழுத்திட்டு வாங்கும் போது பரிசை வழங்குபவர் உயிருடன் இருக்கும் போதே செல்லுபடியாகும் வகையில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தான பத்திரப்பதிவு: நீங்கள் அசையாசொத்தை பரிசாக வழங்கினால் சொத்து பரிமாற்றம் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும். மேலும் சொத்தின் மதிப்பு அடிப்படையில் முத்திரை கட்டணம் செலுத்தி பரிமாற்றத்தை சட்டபூர்வமானதாக மாற்ற வேண்டும்.
அதேபோல தான பத்திரத்தின் மூலம் ஒரு முறை கொடுக்கப்பட்ட பரிசு திரும்ப பெற முடியாது. இதன் பொருள் நீங்கள் ஒரு தான பத்திரத்தில் கையொப்பமிட்டு பதிவு செய்துவிட்டால், அதை உங்களால் திரும்ப பெற முடியாது என்பதுதான். எனவே ஒரு தான பத்திரத்தை வழங்குகிறீர்கள் என்றால் சொத்தில் மீது உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று அர்த்தம். அதை பெறுபவர் முழு உரிமையாளர் ஆகிவிடுவார். சட்டப்படி சொத்துக்களை எப்படி வேண்டுமானாலும் தான பத்திரத்தைப் பெற்றவர் பயன்படுத்தலாம்.
தான பத்திரத்தில் இருக்க வேண்டிய விஷயங்கள்: தான பத்திரத்தை வழங்குபவர், எந்தவித வற்புறுத்தலும் இன்றி தனது சொத்துக்களை வழங்குவதாக வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். தான பத்திரத்தில் நன்கொடையாளரின் அதாவது வழங்குபவரின் பெயர், முகவரி மற்றும் அவரின் உறவினர்களின் பெயரும் இடம் பெற்று இருக்க வேண்டும். சொத்து விவரங்கள் எந்த சொத்தை மாற்ற இருக்கிறார் என்பது போன்ற விவரங்களும் அதில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். தான பத்திரத்தை நிறைவேற்றுவதற்கு சாட்சிகளின் கையெழுத்தும் முக்கியம். எனவே தான பத்திரம் செல்லுபடியாக வேண்டுமானால் இரண்டு சாட்சிகள் அதில் கையெழுத்திட வேண்டும்.
தகவல்
என்றென்றும் சட்ட விழிப்புணர்வு பணியில்
உங்கள்
சா. உமா சங்கர்., M.Com., M.B.A.,M.Phil., LLM.,
சட்ட ஆலோசகர்
8778710779