
1/33. காவல் துறை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
-
by admin.service-public.in
- 39
”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.
33. காவல் துறை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
நாட்டில் அமைதியான சூழல் உருவாவதற்கு அடிப்படைத் தளமே காவல் துறைதான் என்றாலும், பொதுவாகக் காவல் துறையைப் பற்றி மக்களிடையே நல்ல அபிப்பிராயம் கிடையாது. இதற்கு காரணம் அவர்களின் செயல்பாடுகளில் உள்ள சட்டத்துக்கு புறம்பான, வேண்டியவர் வேண்டாதவர் என வேறுபடுத்திப் பார்க்கிற மற்றும் முரட்டுத்தனமான அணுகு முறை தான்.
“நாட்டில் குற்றங்கள் நடை பெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் ஊதியம் இல்லாத கடமையாக இருக்கிறது. ஆனால் காவல் துறையினருக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய கடமையாக இருக்கிறது”
ஒவ்வொரு காவல் அலுவலரும் குற்றம் நிகழாமல் தடுக்கும் பொருட்டு தமது திறமைகள் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும் என கு.வி.மு.வி. 149 காவலர்களுக்கு அறிவுறுத்துகிறது.
அதே போல் உயர்மட்டக் காவலர்களும் அதாவது ஆய்வாளர் தகுதிக்கு மேல் உள்ளவர்களும் செயல்பட வேண்டும் என கு.வி.மு.வி 36 பணிக்கிறது. இதன் படி, ஆயிரத்தில் ஒரு காவலர் செய்கிறாரா ஏன்றால் சந்தேகமே!
காவல் நிலையம் இருபத்தி நாலு மணி நேரமும் இயக்கும் பாதுகாப்புத் துறையின் ஒரு அங்கமாகும். ஒரு காவல் நிலையத்தில் கட்டாயம் இரண்டு விதமான பிரிவுகள் இருக்கும். அதில், ஒன்று குற்றப் புலனாய்வுத் துறை மற்றொன்று சட்டம் மற்றும் ஒழுங்கு துறை. மேலும், தற்போது, நகரங்களில் நிர்வாக வசதிக்கென போக்குவரத்துக் காவல் துறையையும் சேர்த்து அமைத்து உள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் துறை என்பது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், கூட்டுக் கொள்ளை, கொள்ளை, திருட்டு,பாலியல் பலாத்காரம், நம்பிக்கை மோசடி, கள்ள நோட்டுகள், போலியான ஆவணங்கள்…. போன்ற இதர கடுமையான குற்றம் குறித்து புலனாய்வு செய்யும் துறையாகும் இது போன்ற புகார்கள் வரும் போது அதை முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்வார்கள்.
சட்டம் மற்றும் ஒழுங்கு துறை என்பது சண்டை, சச்சரவு, சமுதாய சீர்கேடுகளை உண்டாக்குதல் போன்ற குற்றங்கள் பற்றி புகார் வரும் போது அவற்றை சமுதாய நல பதிவேட்டில் பதிவு செய்து கொண்டு அதற்கான ரசீதை வழங்குவார்கள்.
இதை விட முக்கியமாக உண்ணாவிரத போராட்டம், மறியல் தர்ணா போன்ற பொது மக்களுக்கு தொந்தரவு தரக்கூடிய செய்கைகளை புகார்கள் வரப்பெறாமலே கட்டு படுத்துவதும் ஆகும்.
இதை விட மிக முக்கியமாக குற்றம் மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் பிரபலங்களின் வழி காவலர்களாகவும், பாதுகாவலர்களாகவும், சிறை கைதிகளை சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று திரும்ப ஒப்படைப்பவராகவும் செயல்படுகின்றனர்.
தமிழ் நாட்டில் காவல் துறையினர் அதிவிரைவாகச் சென்று குற்றத்தை தடுக்க உதவும் பொருட்டும், குற்றத்தில் ஈடுபடுவர்களை கண்டு பிடிக்க உதவும் பொருட்டும் செய்து கொடுக்கப்பட்ட வாகனங்களை இந்த காரணத்திற்காக சில சமயங்களில் பயன்படுத்தினாலும், பல சமயங்களில் சாலை ஓரத்தில் நடக்கும் வியாபாரத்தில் சும்மா சர்..சர்…னு சென்று மாமூல் வசூலிப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. மற்ற மாநிலங்களில் இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.
தமிழ் நாட்டில் அனைத்து காவல் நிலையங்களையும் சேர்த்து மொத்தம் 1414 காவல் நிலையங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இது தவிர, புதிதாக தேசிய நேடுஞ்சாலையில் 20 காவல் நிலையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன மற்றும் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க 20 இடங்களில் கேமராக்கள் அமைக்கும் திட்டம் உள்ளது என்ற தகவல் 03-02-2007 அன்றைய நாளிதழ்களில் வெளியாகி உள்ளது.

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 33. காவல் துறை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். நாட்டில் அமைதியான சூழல் உருவாவதற்கு அடிப்படைத் தளமே காவல் துறைதான் என்றாலும், பொதுவாகக் காவல் துறையைப் பற்றி மக்களிடையே நல்ல அபிப்பிராயம் கிடையாது. இதற்கு காரணம் அவர்களின் செயல்பாடுகளில் உள்ள சட்டத்துக்கு புறம்பான, வேண்டியவர் வேண்டாதவர் என வேறுபடுத்திப் பார்க்கிற…