
1/29. அதிகபட்ச தண்டனை விதிக்கும் அதிகாரம் எவ்வளவு?
-
by admin.service-public.in
- 20
”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.
29. அதிகபட்ச தண்டனை விதிக்கும் அதிகாரம் எவ்வளவு?
சமீபகாலங்களில் நீதிபதிகள் பரபரப்பான தீர்ப்புகளை வழங்குவதாக நினைத்து கொண்டு குண்டக்க மண்டக்க தீர்ப்பு என்று எதையாவது எழுதி வருகிறார்கள்.
இதை பற்றி எல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் பத்திரிகைகளும், “அப்படியே ஜெராக்ஸ் மெசின் போல செய்திகளை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கி விற்பனையை பெருக்கிக் கொள்கின்றன”.
இவைகளைப் படிக்கும் மக்கள் பீதிக்கும், பேதிக்கும் உள்ளாகின்றனர், பல சந்தேகங்களுக்கும் ஆளாகின்றனர்.
சமீபத்தில், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி விரைவு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு 98- ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு என, பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி இருந்தது.
ஒரு நடுவருக்கோ அல்லது நீதிபதிக்கோ தண்டனை வழங்கும் கால அளவு தகுதி என்ன என்பதை பற்றி விரிவாக பார்த்தோம் அல்லவா? அந்த தண்டனையை மட்டும் தான் கொடுக்க முடியும் என்பதில்லை.
எவ்வளவு தண்டனை கொடுக்க அதிகாரம் இருக்கிறதோ அதை விட கூடுதலாக ஒரு மடங்குக்கு குறைவாக தண்டனை வழங்கும் அதிகாரத்தை மட்டுமே கு.வி.மு.வி31(2)(ஆ) வழங்குகிறது.
இப்படி வழங்கும் தண்டனையும் எந்த சமயத்தில் வழங்க வேண்டும் எனில் பல குற்றங்கள் குறித்து ஒரே விசாரணை நடத்தும் போது மட்டும் தான். மொத்தத்தில் நீதிபதிக்கு மூன்று வருடம் தண்டனை வழங்கலாம் என அதிகாரம் இருக்கும் போது அவர் ஆறு வருடத்திற்கு குறைவாகத் தண்டனை வழங்கும் அதிகாரம் உண்டு.
இது எதற்காக என்றால் ஒரு செய்கையின் விளைவாக சில குற்றங்கள் நிகழும் போது அதை விசாரணை செய்யும் நீதிபதிக்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் வழங்கத்தான். ஒரு திருட்டு நடக்கிறது. கண்டுபிடித்து விட்டீர்கள். இதன் காரணத்தால் திருடிய நபர் உங்களை ஆபாசமாக திட்டுகிறார் என்பதாக வழக்கு. திருட்டுக்கு தண்டனை மூன்று ஆண்டுகள். அபாசமாக திட்டியதற்கு மூன்று ஆண்டுகள் தண்டனை என்றால் தண்டனை வழங்கும் அதிகாரத்தின் படி யார் விசாரணை செய்ய வேண்டும்?
ஒரு முதன்மைப் பெருநகர் குற்றவியல் நடுவர் தானே? எல்லா வழக்கும் இது போல் நடந்தால் முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு குற்றவியல் நடுவர்களின் பணிதான் என்ன? சும்மா தெண்ட சம்பளம் வாங்குவதா? இதைப் போன்ற குறைகளைத் தவிர்த்து கூடுதல் அதிகாரத்தை வழங்குவது தான் இவ்விதியின் சிறப்பான நோக்கம்.
எது எப்படி இருப்பினும், ‘கு.வி.மு.வி 31(2) (அ)-இன் படி எந்த நபரையும் பதினான்கு ஆண்டுகளுக்கு மேலான சிறை காவலுக்கு ஆட்படுத்த கூடாது”.இதற்கும் மேல் அதிகபட்சமாக தண்டனை வழங்க வேண்டும் என்றால், “அது மரண தண்டனை தான்” இதை வழங்குவதற்கும் தக்க குற்றச் சட்ட அதிகாரம் இருக்க வேண்டும். அதாவது சட்டபடி மரண தண்டனை விதிக்கக் தக்க குற்றமாக இருக்க வேண்டும்.
பத்து இடத்துல திருடினதுக்கு ஒரு திருட்டுக்கு மூன்று வருடம் வீதம் மொத்தம் முப்பது வருடம் தண்டனை என்றோ அல்லது பதினான்கு வருடத்திற்கு மேல் தண்டனை விதிக்க இயலாது என்பதால் மரண தண்டனையோ விதிக்கவோ முடியாது. நீதிமன்ற தீர்ப்பு பற்றி செய்தி வெளியிடும் பத்திரிகைகள், தீர்ப்பை அப்படியே வெளியிடாமல், அது சட்டத்திற்கு உட்பட்ட வகையில் தான் இருக்கிறதா என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்து செய்தி வெளியிட்டால் சமுதாயத்தில் சிறப்பானதொரு சட்ட மறுமலர்ச்சியை உண்டாக்க இயலும்.

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 29. அதிகபட்ச தண்டனை விதிக்கும் அதிகாரம் எவ்வளவு? சமீபகாலங்களில் நீதிபதிகள் பரபரப்பான தீர்ப்புகளை வழங்குவதாக நினைத்து கொண்டு குண்டக்க மண்டக்க தீர்ப்பு என்று எதையாவது எழுதி வருகிறார்கள். இதை பற்றி எல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் பத்திரிகைகளும், “அப்படியே ஜெராக்ஸ் மெசின் போல செய்திகளை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கி…