குற்ற விசாரணைகள்

1/27. நடுவர் மற்றும் நீதிபதிகளின்அதிகார விளக்கம்.

”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  பக்கம்- 26

27. நடுவர் மற்றும் நீதிபதிகளின்அதிகார விளக்கம்.

   மாவட்ட அளவில் குற்றவியல்நடுவர்கள் மற்றும் மன்றங்கள்

 • அ) மாவட்டக் குற்றவியல் நீதிமன்றம்

மாவட்டக் குற்றவியல் நீதிமன்றம் என்பது தாலுக்கா அளவில் உள்ள நீதிமன்றங்களை குறிக்கும் இந்த நீதிமன்றங்களின் பெயர் பல இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் என குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த நீதிமன்றத்தில் தமக்கு அதிகார வரம்புள்ள குற்றவியல் வழக்கையும், உரிமையியல் வழக்கையும் ஒரே நீதிபதி காலை மாலை என தனித்தனியாக நேரம் ஒதுக்கி விசாரிப்பார்.

இவர் இரண்டாம் வகுப்புக் குற்றவியல் நடுவர் என்று அழைக்கப்படுவார். இவருக்கு தமக்கு அதிகார வரம்புள்ள இடத்தில் நடக்கும் குற்றம் பற்றி விசாரணை செய்யும் அதிகாரம் உண்டு.

இவர் அதிகபட்சமாக குற்றவியலைப் பொறுத்த வரை ஒரு ஆண்டு சிறை தண்டணையும், ரூபாய் ஆயிரம் அபராதம் அல்லது இரண்டையும் விதிக்கும் அதிகாரம் கு.வி.மு.வி.29(3)-இன் கீழ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் கு.வி.மு.வி.11(3)-இன் கீழ் அமைக்கப்பட்டு அதிகாரம் வழங்கப்பட்டதாகும்.

 •  ஆ) நீதித்துறை நடுவர் மன்றம்

நீதித்துறை நடுவர் மன்றம் என்பதும் தாலுக்கா அளவில் உள்ள நீதிமன்றத்தையே குறிக்கும்.

ஆனால் இந்த நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு விசாரணை மட்டுமே நடை பெரும். இவர் நடுவர் என்றே அழைக்கப்படுவார். அதுவும் இரண்டாம் வகுப்புக் குற்றவியல் நடுவர் என்றே அழைக்கப்படுவார். இவருக்குத் தமக்கு அதிகார வரம்புள்ள இடத்தில் நடக்கும் குற்றம் பற்றி விசாரணை செய்யும் அதிகாரம் உண்டு.

இவர் அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதம் அல்லது இரண்டையும் தண்டனையாக விதிக்கும் அதிகாரம் கு.வி.மு.வி.29(3)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் கு.வி.மு.வி.11(1)-இன் கீழ் அமைக்கப் படுவதாகும்.

 • இ) சிறப்பு நீதித்துறைக் குற்றவியல் நடுவர் மன்றம்

ம்மன்றமானது ஒரு குறிப்பிட்ட வழக்குகளுக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட வழக்குகளின் பிரிவுகளுக்கு அல்லது பொதுவான வழக்குகளுக்கு என்று மாவட்ட அளவில் அமைக்கப்பட வேண்டிய மன்றமாகும். இதில் குற்ற வழக்குகள் மட்டுமே விசாரணை செய்யப்படும். இவர் சிறப்பு நடுவர் என அழைக்கப்படுவார். இவருக்குத் தமக்கு அதிகார வரம்புள்ள இடத்தில் நடக்கும் குற்றம் பற்றி விசாரணை செய்யும் அதிகாரம் உண்டு.

இவருக்கு அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ ஆயிரம் அபராதம் அல்லது  இரண்டையும்  தண்டனையாக விதிக்கும் அதிகாரம் உண்டு. இந்த நீதிமன்றம் கு.வி.மு.வி.13-இன் கீழ் அமைக்கப்படுவதாகும் என்றாலும் இம்மன்றங்கள் பல மாவட்டங்களில் அமைக்கப்பட்டதாகக் தெரியவில்லை.

இம்மன்ற நடுவர்களின் பதவி காலம் ஒராண்டுக்கு மேற்படாமல்தான் இருக்கும். தேவை எனில் சிறப்பான ஆணையின் மூலம் வேறு நபரோ அல்லது மீண்டும் அதே நபரோ நடுவராக நியமிக்கப்படுவர். இம்மன்ற நடுவர், சட்ட அறிவு பெற்ற அரசு ஊழியராக அல்லது ஒய்வு பெற்ற அரசு ஊழியராகக் தான் இருக்க வேண்டும்.

      .முதன்மைக் குற்றவியல் நடுவர்மன்றம்

முதன்மைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் என்பது மாவட்டத் தலை நகரங்களில் செயல்படும் தலைமைக் குற்றவியல் நீதிமன்றமாகும். இதன் அதிகார வரம்பு அந்த மாவட்டம் முழுவதும் இருக்கும்.

மேலும் அம்மாவட்டத்தில் உள்ள குற்றவியல் நடுவர் மன்றங்களை மேலாண்மை செய்வதும் இவரது பணி ஆகும். இவர் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், சட்டபடி விதிக்கத் தக்க அபராதத்தையையும் அல்லது இரண்டையும் விதிக்கும் அதிகாரம் கு.வி.மு.வி.29(1)-இன் கீழ் உண்டு.

இந்த நீதிமன்றம் கு.வி.மு.வி.12(1)-இ ன் கீழ் அமைக்கப்பட்டு அதிகாரம் வழங்கப்பட்டதாகும்.

மாநகர அளவில் குற்றவியல் நடுவர்கள் மன்றம் / மன்றங்கள்

 • அ) மாநகரக் குற்றவியல் நடுவர் மன்றம்

மாநகரக் குற்றவியல் நடுவர்  மன்றம் என்பது  சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை போன்ற மாநகரங்களில் மட்டுமே செயல்படும் குற்றவியல் நீதிமன்றங்களைக் குறிக்கும். இவர்கள் முதல் வகுப்பு குற்றவியல் நடுவர்கள் என்று அழைக்கப் படுவார்கள்.

மாநகரக் குற்றவியல் நடுவர்கள் ஒவ்வொருவரும் அந்த மாநகர் முழுவதும் தமது அதிகார வரம்பை உடையவர்கள் எனகு.வி.மு.வி 16(3) தெளிவாக கூறினாலும், இவர்கள் அதை செயல்படுத்துவதில்லை. அதாவது சென்னையை பொறுத்த மட்டில் எழும்பூர், ஜார்ஜ் டவுன், சைதாப்பேட்டை என மூன்று இடங்களில் குற்றவியல் நீதிமன்றங்கள் உள்ளன.

சென்னை மாநகரத்தில் எந்த இடத்தில் குற்றம் நடந்தாலும் கு.வி.மு.வி 16(3)-ன் படி மேற்படி மூன்று நீதிமன்றத்தில், எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் முறையீடு தாக்கல் செய்தால், விசாரணை செய்ய வேண்டும் என்றாலும், காவல்துறை போலவே,

“இது எனது அதிகார வரம்புக்கு உட்பட்டதில்லை என நடுவர்கள் மனுவைத் திருப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்” என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் ஐந்து ஆயிரம் அபராதம் அல்லது இரண்டையும் தண்டனையாக விதிக்கும் அதிகாரம் கு.வி.மு.வி.29(2)-இன் கீழ் உண்டு. இந்த நீதிமன்றம் கு.வி.மு.வி.12(1)-இன் கீழ் அமைக்கப்பட்டு அதிகாரம் வழங்கப்பட்டதாகும்.

 • ஆ) மாநகர சிறப்புக் குற்றவியல் நடுவர் மன்றம்

ம்மன்றமானது ஒரு குறிப்பிட்ட வழக்குகளுக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட வழக்குகளின் பிரிவுகளுக்கு அல்லது பொதுவான வழக்குகளுக்கு என்று மாநகர அளவில் அமைக்கப்பட வேண்டிய நீதிமன்றமாகும்.

இதில் குற்ற வழக்குகள் மட்டுமே விசாரணை செய்யப்படும். இவர் சிறப்பு நடுவர் என அழைக்கப்படுவார். அதிகபட்சமாக ஒரு ஆண்டு, சிறை தண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதம் அல்லது இரண்டையும் விதிக்கும் அதிகாரம் இவருக்கு உண்டு.

இந்த நீதிமன்றங்கள் அபராதம் மட்டுமேதான் விதிக்கின்றன. இதனைக் கட்ட வில்லை என்றால் அதற்காக சிறை தண்டனை விதிக்கின்றன. இந்தக் காரணத்தால் இந்நீதிமன்றம் அரசின் கஜானாவை நிரப்புவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது உறுதியாகிறது.

இந்த நீதிமன்றம் கு.வி.மு.வி.18-இன் கீழ் அமைக்கப்படுவதாகும். சென்னையை பொறுத்த மட்டில், “இரயில்வே சட்டம் தொடர்பான சில பிரிவு குற்றங்களை விசாரிப்பதற்கு என இரண்டு நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன”

இதில் ஒன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய கட்டிடத்துக்கு வெளியிலும், மற்றொன்று எழும்பூர் இரயில் நிலையத்திற்கு உள்ளேயும் சுமார் ஐம்பதாண்டு காலமாக இயங்கி வருகிறது.

ஒரு குற்றவியல் நீதிமன்றம் கு.வி.மு.வி 327- ன்படி திறந்த நீதிமன்றமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த நீதிமன்றம் இரயில் நிலையம் உள்ளே அமைந்திருப்பதாலும்,

இரயில் நிலையத்தின் உள்ளே போக வேண்டும். என்றால் இரயில்வே சட்டபடி ரூபாய் மூன்று செலவு செய்து நடைமேடை அனுமதி சீட்டு பெற்றே செல்ல வேண்டும் என்பதாலும்,

இந்த நீதிமன்றம் அமர்ந்திருக்கும் இடம் கு.வி.மு.வி. 327-க்கு எதிரானது என கூறி அதை அங்கிருந்து அகற்ற வேண்டும் என அம்மன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஆசிரியரால் மனு கொடுக்கப்பட்டு ஒராண்டு காலமாகியும் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது.

சட்டத்துக்கு புறம்பான இடத்தில் நீதிமன்றம் அமைந்திருக்கிறது என்பதை அந்த நீதிமன்றத்துக்கே சட்டப்படிப்புப் படிக்காத உங்களைப் போன்ற ஒரு நபர் தான் எடுத்துக் கூற வேண்டியிருக்கிறது என்றால்,

“சுமார் ஐம்பதாண்டு காலமாக இம்மன்றத்தில் பணியாற்றிய நடுவர்கள் மற்றும் ஐம்பதாண்டு காலமாக அம்மன்றத்தை மேலாண்மை செய்யும் அதிகாரம் பெற்ற முதன்மை குற்றவியல் நடுவர்கள். முதன்மைக் பெருநகர் குற்றவியல் நடுவர்கள் ஐம்பதாண்டு காலம் கண்காணித்த அமர்வு நீதிபதிகள், இவர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக மேலாண்மை செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சட்ட அறிவு எப்படி இருந்திருக்கிறது என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள இதை விட என்ன சான்று வேண்டியிருக்கிறது?”

நமது இது போன்ற செயல்கள் தான், “நாம் சட்டம் படிக்கிறோம் என்பதற்கான சிறப்பான அடையாளம் ஆகும்”. சட்டத்துக்குப் புறம்பாக நீதிமன்றம் இயங்குவதை கண்டு பிடித்துச் சொன்ன பிறகும் கூட, “செய்து விட்ட தவறை மாற்றி கொள்ளாமல் அந்த இடத்திலேயே தொடரும் சட்டத்திற்கு புறம்பான நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு சட்டபடி செல்லும் என எந்த சட்டம் இந்த நீதிபதிகளுக்குச் சொல்கிறது என தெரியவில்லை”.

இம்மன்ற நடுவர்களின் பதவி காலம் ஒராண்டுக்கு மேற்படாமல்தான் இருக்கும். தேவை எனில் சிறப்பான ஆணையின் மூலம் திரும்பவும் அதே நபரோ அல்லது வேறு நபரோ நடுவராக நியமிக்கப்படுவர்.

இம்மன்ற நடுவர் சட்ட அறிவு பெற்ற அரசு ஊழியராக அல்லது ஓய்வு பெற்ற அரசு ஊழியராகவும் தான் இருக்க வேண்டும் எனகு.வி.மு.வி 18 தெளிவாகச் சொன்னாலும், சட்ட அறிவில்லாத குற்றவியல் நடுவர்கள் தான் இதில்

நியமிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது இவ்விரண்டு மன்றத்திலும் எனக்கு ஏற்பட்ட நேரடி அனுபவமாகும்.

 • இ) பெருநகர முதன்மைக் குற்றவியல்

பெருநகரத் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் என்பது மாநகரத்தின் தலைமையகத்தில் அமைந்திருந்து, அந்த மாநகரம் முழுவதும் தமது அதிகார ஆதிக்கத்தை செலுத்தும் மன்றமாகும் என்பதோடு தமக்கு கீழான நீதிமன்றங்களை மேலாண்மை செய்யவும் அதிகாரம் கொண்டதாகும்.

இம்மன்ற நடுவருக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், சட்டபடி விதிக்கத்தக்க அபராதத்தையும் அல்லது இரண்டையும் விதிக்கும் அதிகாரம் கு.வி.மு.வி.29(2)-இன் கீழ் உண்டு. இந்த நீதிமன்றம் கு.வி.மு.வி.17(1)-இன் கீழ் அமைக்கப்பட்டு அதிகாரம் வழங்கபட்டதாகும்.

 • அ) மாவட்ட அமர்வு நீதிமன்றம்

மாவட்ட அமர்வு நீதிமன்றம் என்பது மாவட்டத்திலும் மற்றும் மாநகரத்திலும் மாவட்ட நீதிமன்றம் என்றே அழைக்கப்படும்.

இந்த நீதிமன்றத்தில் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகள் விசாரிக்கப்படும். இம்மன்றத்தில் எந்த வழக்கை விசாரித்தாலும் விசாரணை செய்பவர் நீதிபதி என்றே அழைக்கபடுவார்.

மாவட்ட அமர்வு நீதிமன்றம் என்பது தமிழ்நாட்டில் உள்ள முப்பது மாவட்டங்களின் தலைமை இடத்தில் செயல்படும் மன்றமாகும்.

“இவர் எந்த குற்ற வழக்கையும் குற்ற விசாரணை முறை விதி 193-இன் படி நேரடியாக விசாரணைக்கு எடுத்து கொள்ள முடியாது” என்றாலும் அரசு தரப்பு வழக்கறிஞரால் கு.வி.மு.வி.199(2)-இன் படி தாக்கல் செய்யப்படும் அவதூறு வழக்குகளை நேரடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியும்.

இந்த நீதிமன்றம் குற்ற விசாரணை முறை விதி 7 – இன் கீழ் அமைக்கப்பட்டதாகும். குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு அதிகாரம் இல்லை என அம்மன்றத்தால்

கு.வி.மு.வி. 209-இன் படி அனுப்பப்படும் வழக்கை மட்டுமே கு.வி.மு.வி 226-இன் படி விசாரணைக்கு எடுத்து கொள்ளும் அதிகாரம் கொண்டது.

இவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனையும், தக்க அபராதமும் விதிக்கும் அதிகாரம் உண்டு என்றாலும், ‘மரண தண்டனை விதிக்க நேர்ந்தால் அதை கு.வி.மு.வி 28(2)-இன் படி உயர்நீதிமன்றம் உறுதி படுத்திய பின் தான் தண்டனையை செயல்படுத்த முடியும்”.

இம்மன்றத்துக்கும் கீழ் கூடுதல் மற்றும் உதவி.நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதால் இம்மன்றத்தின் பெயருக்கு முன்பாக முதன்மை என்று சிறப்பு பெயர் சேர்த்து அழைக்கப்படுகிறது. இப்படி அழைப்பதற்கான அதிகாரம் கு.வி.மு.வி.யில் வழங்கப்பட வில்லை என தெரிகிறது. தலைமை என்பதை குறிக்கும் விதமாகத்தான் முதன்மை

என குறிப்பிடுவதாக அறிகிறேன்.

சில சமயங்களில் மாவட்ட அமர்வு நீதிமன்றங்களே குற்றவியல் நீதிமன்றங்களை போல் வழக்கை நேரடியாக விசாரிக்கும் அதிகாரம் கொண்டதாகும். அது எப்படிப்பட்ட குற்றம் என்றால், சிறப்பான சட்டத்தின் கீழான குற்றமாக இருக்க வேண்டும்.

      எடுத்துக்காட்டு:: ஊழல் தடுப்பு சட்டம்

இச்சட்டத்தின் கீழ் லஞ்சம் வாங்கியவருக்கு அதிகபட்ச தண்டனை ஆறு மாதங்களுக்கு குறையாமலும் ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமலும், அபராதமும் விதிக்கப்படும். இதற்காக அச்சட்டத்தின் படி சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தாலும், நீதிபதி என்றே அழைக்க பட்டாலும் இவர் குற்றவியல் நடுவர் போன்றே செயல்பட வேண்டும். இவ்வாறான சிறப்பு நீதிபதியாக, தகுதி உள்ளவர்கள் அமர்வு அல்லது கூடுதல் அமர்வு அல்லது உதவி அமர்வு நீதிபதியாக இருக்க வேண்டும்.

 • ஆ) கூடுதல் அமர்வு நீதிமன்றம்

மாவட்டத்திலும், மாநகரத்திலும் செயல்படும் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்க இயலாத அளவிற்கு வழக்குகளின் எண்ணிக்கை கூடும் போது அதை விசாரிப்பதற்கென கு.வி.மு.வி 9(3)- இன் அதிகாரத்தோடு இம்மன்றங்கள் அமைக்கப்படுகின்றன.

இவருக்கும் முதன்மை அமர்வு நீதிபதியால் விதிக்கத்தக்க ஏழு ஆண்டுகள் முதல் மரண தண்டனையுடன், அபராதம் விதிக்கும் அதிகாரமும் உண்டு.

எது எப்படி இருந்தாலும், மரண தண்டனை விதிக்க நேர்ந்தால் அதை குற்ற விசாரணை முறை விதி 28 (2)-இன் உயர்நீதிமன்றம் உறுதிபடுத்தியபின் தான் தண்டனையை செயல்படுத்த முடியும்.

 • இ) உதவி அமர்வு நீதிமன்றம்

மாவட்டத்திலும், மாநகரத்திலும் அமர்வு நீதிமன்றத்தால் விசாரணை செய்ய இயலாத அளவிற்கு வழக்குகளின் எண்ணிக்கை கூடும் போது,

  “அம்மன்றத்துக்கு உள்ள சுமையை குறைப்பதற்காக இம்மன்றம் கு.வி.மு.வி 9(3)-இன் அதிகாரத்தை கொண்டு ஏற்படுத்தப்படுகிறது”  

இம்மன்ற நீதிபதிக்கு கு.வி.மு.வி 28(3)-ன் படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பத்தாண்டுகள் சிறை தண்டணையும், சட்டப்படி என்ன அபராதம் விதிக்க இயலுமோ அதையும் அல்லது இந்த இரண்டையும் விதிக்கும் அதிகாரம் உண்டு.

  மாவட்டம் மற்றும் மாநகரத்தில் சில சிறப்பான நீதிமன்றங்கள்

 • அ) இளம் குற்றவாளிகளுக்கான நீதிமன்றம்

ம்மன்றமானது கு.வி.மு.வி 27-இன் படி உருவாக்கப்பட்ட சிறப்பான நீதிமன்றமாகும். அதாவது, குற்றசாட்டுக்கு உள்ளாகியுள்ள நபர் ஆணாக இருக்கும் பட்சத்தில் ஏழு வயதிற்கு மேலும் பதினாறு வயதிற்கு உட்பட்டவராகவும் அல்லது பெண்ணாக இருக்கும் பட்சத்தில் ஏழு வயதிற்கு மேலும் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்கும் சமயத்தில் அவர்களை விசாரிப்பதற்கு என உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றமாகும்.

குற்றம் நடை பெற்ற இடம் எதுவாக இருந்தாலும் அதாவது மாவட்டமாக இருந்தாலும் அல்லது மாநகரமாக இருந்தாலும் இது குறித்த விசாரணையை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அல்லது 1960-ஆம் ஆண்டின் குழந்தைகள் சட்டபடி உருவாக்கப்பட்டுள்ள அல்லது மறு வாழ்வுக்காக வழிவகை செய்யப்பட்டுள்ள நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்பட வேண்டும்.

பொதுவாக பெண்கள், தான் பிறந்தது முதலே ஒவ்வொன்றிலும் அனைத்து வகையிலும் விரைவில் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பது மருத்துவ ஆய்வு சான்றாக இருக்கிறது என்ற நிலையில் குற்றத்தில் ஈடுபடும் பெண்களுக்கு மட்டும் வயது வரம்பை ஆணை விட பெண்ணுக்கு இரண்டு வயதை கால நீட்டிப்பு செய்திருப்பது எந்த விதத்தில் சரியாகும்?

எந்த உண்மையில் மருத்துவ ஆய்வின்படி ஆண்களுக்கு தானே இந்த கூடுதல் கால அவகாசத்தை தந்திருக்க வேண்டும். ஒரு வேளை மறந்து மாற்றி எழுதி விட்டாங்களோ?

 • ஆ) மகளிர் நீதிமன்றம்

இம்மன்றமானது மகளிருக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து விசாரணை செய்வதற்காக சிறப்பாக அமைக்கப்பட்டதாகும். இம்மன்றத்தின் சிறப்பு அம்சம் என்று சொல்லப் போனால்,

இம்மன்றத்தில் பணியாற்றும் நீதிபதி உட்பட பணியாளர்கள் அனைவரும் மகளிராக தான் ஆரம்பத்தில் இருந்தார்கள். தற்போது ஆண் நீதிபதிகளும்  நியமிக்கப்படுகிறார்கள்.

இம்மன்றமானது தமிழ்நாட்டை பொறுத்த அளவில் மாநகரங்களில் மட்டும் அல்லாமல் மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மன்றத்திற்கு அமர்த்தபடும் நீதிபதி அமர்வு அல்லது கூடுதல் அமர்வு நீதிபதியாக தகுதி உள்ளவர்களாக

இருப்பார்கள்.

இவருக்கு அமர்வு அல்லது கூடுதல் நீதிபதிக்கு உள்ள அதிகாரம் போல் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் உண்டு.

 • இ ) போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம்

ம்மன்றமானது போதைப் பொருள் தொடர்பான குற்றம் புரிந்தவர்களை விசாரிப்பதற்கு என சிறப்பாக போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நீதிமன்றமாகும்.

இம்மன்றத்திற்கு அமர்த்தப்படும் நீதிபதி அமர்வு அல்லது கூடுதல் அமர்வு அல்லது உதவி அமர்வு நீதிபதியாக தகுதி உள்ளவர்களாக இருப்பார்கள் இவருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டணையும், அபராதமும் அல்லது இரண்டும் விதித்து தண்டிக்கும் அதிகாரம் உண்டு.

 • ஈ) மத்தியக் குற்றப் புலனாய்வு நீதிமன்றம்

ம்மன்றமானது மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் குற்றம் குறித்த புகார்களை பதிவு செய்யும் மத்திய குற்ற புலனாய்வு துறை சமர்ப்பிக்கும் குற்றங்களை விசாரணை செய்வதற்காகவும்,

மாநிலக் காவல் துறையால் ஒரு வழக்கை சிறப்பாக விசாரணை செய்ய இயலாது என்ற காரணத்துக்காக மாநில அரசாங்கத்தாலோ அல்லது உயர்நீதி மன்றத்தாலோ,

மத்தியக் குற்றப் புலனாய்வு துறை விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும் வழக்குகளை தாக்கல் செய்து விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட நீதிமன்றமாகும்.

இது ஒவ்வொரு மாநில தலைநகரத்திலும் தலா ஒன்று வீதம் இருப்பதாக தெரிகிறது.

உ) பொருளாதார சிறப்பு நீதிமன்றம்

ம்மன்றமானது.தமிழ்நாடு நிதி நிறுவன.வைப்பீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டம் 1997- இன் கீழான குற்றங்களை விசாரணை செய்வதற்கென உருவாக்கப்பட்ட நீதிமன்றமாகும். இம்மன்றம் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே இயங்கி வருகிறது.

இம்மன்றத்திற்கு பத்து வருடம் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கும் அதிகாரம் உண்டு.

இந்த சட்டத்தையும், நீதிமன்றத்தையும் ஏற்படுத்தும் அதிகாரம் இந்திய அரசமைப்பின் படி மாநில அரசுக்கு இருக்கிறதா? என்ற சட்ட பிரச்சனை சென்னை உயர்நீதிமன்றத்தில் எழுப்பபட்டு கிடப்பில் சுமார் இரண்டு வருடங்களாக தீர்வு காணப்படாமல் இருப்பதாக தெரிகிறது.

 • ஊ) விரைவு நீதிமன்றம்

ம்மன்றமானது அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்கத்தக்க வழக்குகளை விரைவாக விசாரணை செய்து முடிப்பதற்கு என அனைத்து மாநகராட்சிகளிலும், மாவட்டங்களிலும் தேவையான அளவில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றமாகும்.

இம்மன்றம் பல வருடங்களாக கிடப்பில்  இருக்கும் வழக்குகளை விரைவில் விசாரித்து தீர்க்கும் நோக்கிற்காக மத்திய அரசின் சிறப்பான உத்தரவின் பேரில் குறிப்பிட்ட கால அளவிற்கு மட்டும் இயங்கும் வகையில் ஏற்படுத்தப் பட்டவையாகும். இம்மன்ற நீதிபதிக்கு அமர்வு நீதிபதிக்குள்ள அதிகாரத்தை போலவே மரணதண்டனையும் அபராதமும் விதிக்கும் அதிகாரம் உண்டு.

இம்மன்றத்திற்கு வழக்கு மாற்றப்படுகிறது என்றாலே தண்டனை நிச்சயம் என்ற அளவிற்கு இம்மன்றம் பெயர் எடுத்துள்ளது. ஆயினும், இம்மன்றத்தின் தீர்ப்புகள் சிலவற்றை ஆராய்ந்த போது சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு எனத் தெரிய வந்தது.

இம்மன்ற நீதிபதிகள், இம்மன்றம் ஏற்படுத்த பட்டதன் நோக்கம் விரைவான நீதி என்பதற்கு பதிலாக விரைவான தண்டனை கொடுப்பதுதான் என இம்மன்றத்தின் நீதிபதிகள் தவறாக நினைத்து கொண்டு, நான் தண்டனை கொடுத்து விடுகிறேன். “நீ அப்பீல் போய்க்கோ” என்ற வகையிலேயே தண்டனையை வழங்கி வருகிறார்கள்.

 • எ) மனித உரிமை நீதிமன்றம்

ந்த நீதிமன்றமானது மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993-இன் பிரிவு 30-இன் படி ஏற்படுத்தப்பட்ட சிறப்பான நீதிமன்றமாகும்.

இம்மன்றம் மற்ற சிறப்பு நீதிமன்றங்களைப் போல் சிறப்பு நீதிமன்றமாக தனியாக அமைக்கப்பட்டது அல்ல. மாவட்ட அமர்வு நீதிமன்றத்தையே அரசு சிறப்பான. அரசாணை மூலம் அறிவிக்கை செய்த நீதிமன்றமாகும்.

இம்மன்றத்தில் மனித உரிமை மீறல் குறித்து தாக்கல் செய்யப்படும் வழக்குகள் குற்ற விசாரணை முறை விதிகளின் படிதான் விசாரணை செய்யப்படுகிறது. இது போன்ற ஒரு நீதிமன்றம் இருப்பது வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்ற ஊழியர்களுக்கும் கூட தெரியவில்லை. இதன் காரணத்தால் இம்மன்றத்தில் ஒரு வருடத்திற்கு மனித உரிமை மீறல் வழக்கு மட்டும் சுமார் ஐந்துக்கு மேல் தாக்கலாவது இல்லை.

 • ஏ) தனி நீதிமன்றம்

ந்த நீதிமன்றத்தைப் பற்றி உங்களுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும். இது ஆளும்கட்சியினர் அல்லது அவர்களின் கூட்டணி கட்சியினர் இல்லாத எதிர் கட்சிகள் மீது அரசியல் காரணங்களுக்காக வழக்கை கொண்டு வந்து அதனை விசாரணை செய்வதற்காக சிறப்பான ஆணையை பிறப்பித்து ஏற்படுத்தப்படும் மன்றமாகும்.

இது போன்ற வழக்குகளில் இம்மன்றத்தை கொண்டு வரும் ஆட்சி உரைக்கப்படும். முடிவதற்குள் கண்டிப்பாக தீர்ப்பு இப்படி வழங்கும் தீர்ப்பு ஆளும் கட்சிக்கு சாதகமாகவும், எதிர் கட்சியினருக்கு பாதகமாக தான் இருக்கும். ஒரு வேளை எதிர்கட்சி ஆளும் கட்சியாக மாறி விட்டால் தீர்ப்பும் அப்படியே மாற்றி உரைக்கப்படும். மொத்தத்தில் இது அரசியல் வாதிகளுக்கான நீதிமன்றம் என்றால் மிகையல்ல. தமிழ்நாட்டை தவிர வேறு மாநிலங்களில் இது போன்ற நீதிமன்றம் செயல்படுவதாக தெரியவில்லை.

AIARA

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  பக்கம்- 26 27. நடுவர் மற்றும் நீதிபதிகளின்அதிகார விளக்கம்.    மாவட்ட அளவில் குற்றவியல்நடுவர்கள் மற்றும் மன்றங்கள் மாவட்டக் குற்றவியல் நீதிமன்றம் என்பது தாலுக்கா அளவில் உள்ள நீதிமன்றங்களை குறிக்கும் இந்த நீதிமன்றங்களின் பெயர் பல இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் என குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த நீதிமன்றத்தில் தமக்கு அதிகார வரம்புள்ள குற்றவியல்…

AIARA

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  பக்கம்- 26 27. நடுவர் மற்றும் நீதிபதிகளின்அதிகார விளக்கம்.    மாவட்ட அளவில் குற்றவியல்நடுவர்கள் மற்றும் மன்றங்கள் மாவட்டக் குற்றவியல் நீதிமன்றம் என்பது தாலுக்கா அளவில் உள்ள நீதிமன்றங்களை குறிக்கும் இந்த நீதிமன்றங்களின் பெயர் பல இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் என குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த நீதிமன்றத்தில் தமக்கு அதிகார வரம்புள்ள குற்றவியல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *