”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.
பொதுவாக இந்திய அரசால் சட்டங்கள் இயற்றப்படும் போது, ஆங்கிலத்தில் தான் இயற்றப்படுகிறது.
இப்படி இயற்றப்படும் சட்டங்களை அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்வதற்கு என இந்திய அரசே அதிகார முறை மொழி பெயர்ப்புகள் சட்டம் 1973 என்ற சட்டத்தை இயற்றி உள்ளது.
அச்சட்டத்தின் பிரிவு 2(அ) – இன் படி குடியரசு தலைவரின் அதிகாரத்தை பயன்படுத்தி மாநில சட்ட (ஆட்சி மொழிப் பிரிவு )த் துறைகள் தத்தம் மாநில மொழிகளில் மொழி பெயர்ப்பை செய்து கொள்கின்றன.
இதன்படி தமிழ்நாடு அரசும் சட்டங்களைத் தமிழில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டிருந்தாலும் தற்போது வெளியிடுவதாக தெரியவில்லை. முன்பு வெளியிட்ட புத்தகங்கள் மட்டுமே, தமிழ்நாடு அரசு எழுதுப் பொருள் விற்பனை நிலையம் இலக்கம் 110, அண்ணா சாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு நேரடியாக வந்தால் மட்டுமே கிடைக்கின்றன.
இதில் மேற்சொன்ன உங்களுக்கு தேவையான ஐந்து புத்தகங்களும் கிடைப்பதில்லை. அதற்காகக் கவலைப் பட வேண்டாம். தனியார் பதிப்பகங்கள் பல சட்ட நூல்களை வெளியிடும் முயற்சியில் இறங்கி வெற்றி பெற்றுள்ளன.
இப்படி வெளியிடும் போது பல பதிப்பகங்கள் சட்டப்பிரிவை வரிசையாக சொல்லாமல் சிலவற்றை நீக்க விட்டு வெளியிட்டு இருக்கின்றன.
இதற்கு காரணம் என்ன என ஆராய்ந்தால் நீக்கப்பட்டவைகள் அனைத்தும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதாலும், சட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும், தொழில் செய்யும் வழக்கறிஞர்களுக்கும் எதிராகவும் இருக்கும் என்பதால்தான் என தெரியவரும். இவைகளை மொழி பெயர்ப்பது யார் தெரியுமா? சட்டம் பயின்ற வழக்கறிஞர்களே.
ஆனால், இவைகளில் இருந்து விதி விலக்காக சில பதிப்பகங்கள் சட்ட நூல்களை மிகவும் குறைவான விலைக்கு அதிகத் தரத்துடன் தருகின்றன. இதில்,
முதல் இடம் வகிப்பது: பாலாஜி பதிப்பகம், 103 பைகிராப்ட்ஸ் ரோடு, இராய பேட்டை, சென்னை-600014.
இரண்டாம் இடம் வகிப்பது: சீ. சீத்தாராமன் அன் கோ, 37 ராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை -14.
மூன்றாம் இடம் வகிப்பது: அக்கவுண்ட் டெஸ்ட் சென்டர், எண்-1, கான்வென்ட் லேன், காமராஜர் சாலை, அலங்கார் திரையரங்கம், மதுரை-625 009.
பாலாஜி பதிப்பகத்தில் விலை குறைவு. ஒரு சில நூலை தவிர, மற்ற நூல்கள் படிப்பதற்கு எளிமையாக புரியும். தெலுங்கு மொழியிலும் சட்ட நூல்கள் வெளியிடுகின்றனர்.
மத்திய சட்டத்தில் தமிழ்நாட்டின் திருத்தம் என்ன என்பதை கூட சேர்க்கின்றனர். ஆனால், புதிதாக வரும் அல்லது நீக்கப்படும் சட்டத்திருத்தங்களை சுட்டிக் காட்டுவதில்லை.
மற்ற இரண்டு பதிப்பகத்திலும் புதிதாக வந்த திருத்தங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். படித்து புரிந்து கொள்ள சற்று சிரமமாக இருக்கும். விலை கொஞ்சம் அதிகம்தான்.