Will | Can we write a WILL without an advocate presence? வக்கீல் இல்லாமல் உயில் எழுத முடியுமா?

உயில் எழுதுவது எப்படி..?

ஒருநபர் தனக்கு பாத்தியப்பட்ட சொத்தை பொறுத்து தனது இறப்பிற்கு பிறகு தனது சொத்து யாருக்கு கொடுக்கப்பட வேண்டும், எவ்வாறு பயன்பட வேண்டும் என சட்டப்பூர்வமாக விளம்புகை செய்வது தான் “விருப்புறுதி ஆவணம்” அல்லது “உயில்” என்று கூறப்படுகிறது. இது இந்திய வாரிசுரிமை சட்டம் 1925-ன் கீழ் பிரிவு 2(h)வரையறை செய்யப்பட்டுள்ளது.

ஒரு விருப்புறுதி ஆவணத்தை, அதை எழுதிய நபர், அவரது இறப்புக்கு முன்பாக எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றி எழுதிக்கொள்ள அவருக்கு உரிமை உண்டு. மனிதன் இறப்பதற்கு முன்பு கடைசியாக எழுதி வைத்த விருப்புறுதி ஆவணம் தான் அவருடைய சுதந்திரமான, இறுதியான (Free and Last Testament) விருப்புறுதி ஆவணம். மேலும் விருப்புறுதி ஆவணத்தை கட்டாயப்படுத்தியோ, துன்புறுத்தியோ, மோசடியாகவோ, செல்வாக்கை தகாத முறையில் பயன்படுத்தியோ எழுதி வாங்கினால் அது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல. இந்திய வாரிசுரிமை சட்டம் 1925ன் பிரிவு 57 கீழ் ஒரு உயில் எழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய தரைப்படை, கப்பற்படை மற்றும் விமானப்படையில் பணிபுரிபவர்கள் படையெடுப்பு அல்லது போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் சமயங்களில் வாய்மொழியாக அல்லது எழுத்துப்பூர்வமாக தனது விருப்பத்தை அவருடன் கூட இருக்கும் இரண்டு நபர்களுக்கு முன்பாக தெரிவித்தால் அது சட்டப்படி செல்லுபடியாகும். எழுத்துப்பூர்வமாக எழுதப்பட்டிருந்தால் சாட்சிகளின் கையொப்பம் தேவையில்லை. மேற்படி விருப்புறுதி ஆவணமானது சிறப்புரிமை விருப்புறுதி ஆவணம் (Privileged Will) என பிரிவு 65 இந்திய வாரிசுரிமை சட்டம் 1925-ன் படி வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி சிறப்புரிமை விருப்புறுதி ஆவணம் அதை எழுதியவர் அல்லது வாய்மொழியாக கூறியவர் ஒரு மாத காலத்திற்கு பிறகு உயிருடன் இருந்தால் அது தானாகவே ரத்து ஆகிவிடும். சிறப்புரிமை விருப்புறுதி ஆவணத்தை தவிர்த்து மற்ற விருப்புறுதி ஆவணங்கள் சிறப்புரிமை அற்ற விருப்புறுதி ஆவணங்கள் (Unprivileged Will) என இந்திய வாரிசுரிமை சட்டம் 1925 பிரிவு 63ன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925 பிரிவு 63 ன்படி விருப்புறுதி ஆவணம் எழுதும் போது அதில் இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களோ சாட்சி கையொப்பம் இட வேண்டும். சாட்சிகள் ஒரே சமயத்தில் குழுமி இருந்து சாட்சி கையெழுத்து இட வேண்டிய அவசியமில்லை. மேலே சொன்னவாறு கையெழுத்து இட்டால் போதும்.
அவ்வாறு விருப்புறுதி ஆவணம் சாட்சி கையொப்பம் இல்லாமல் இருந்தால் அது செல்லாது.

நிரூபணம்(Proof)
இந்திய வாரிசுரிமை சட்டப்படி ஒரு விருப்புறுதி ஆவணத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சாட்சிகள் கையொப்பம் கட்டாயம் செய்யப்பட்டிருக்க வேண்டும். சாட்சிகளின் கையொப்பம் கட்டாயம் தேவை என சட்டம் கூறும் ஆவணங்களான விருப்புறுதி ஆவணம், அடைமான பத்திரம், கொடை(அ) செட்டில்மெண்ட் ஆவணங்களை நிரூபணம் செய்வதற்கு மேற்படி சாட்சி கையொப்பம் இட்டவர்களில் ஒருவரை (attestor) ஐ அழைத்து விசாரணை செய்தால்தான் மேற்படி விருப்புறுதி ஆவணம் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படும் என இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 67 ல் கூறப்பட்டுள்ளது.

ஒரு வழக்கில் விருப்புறுதி ஆவணத்தின் செல்லுபடி ஆகும் தன்மை குறித்து பிரச்சனை ஏற்படும்போது மேற்படி வழக்கில் பிரதிவாதிகள் விருப்புறுதி ஆவணத்தை ஒத்துக்கொண்டாலும் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 68ன் விதிவிலக்கின் கீழ் ஏதேனும் ஒரு சாட்சி கையொப்பமிட்டவரை விசாரிக்க வேண்டும். சாட்சி கையொப்பமிட்டவர்கள் இறந்து விட்டால் அவரது கையெழுத்தை தெரிந்த நபர்கள் சாட்சியம் அளிக்கலாம்.
எனவே விருப்புறுதி ஆவணத்தை எழுதும்போது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விசயங்கள் விருப்புறுதி ஆவணத்தை எழுதுபவரை விட வயதில் இளையவர்களை அழைத்து சாட்சி கையொப்பமிட சொல்ல வேண்டும்.

குறிப்பாக விருப்புறுதி ஆவணத்தில் எழுதுபவரின் குடும்ப வழக்கறிஞர் மற்றும் குடும்ப மருத்துவர் சாட்சி கையெழுத்திட்டால் மேற்படி விருப்புறுதி நிரூபணம் செய்வதற்கு எந்தவித சட்ட சிக்கலும் இருக்காது.
ஏனெனில் விருப்புறுதி ஆவணம் எழுதியவர் நல்ல உடல்நிலையிலும் மனநிலையில் இருந்தார் என்பது அவரது குடும்ப மருத்துவருக்கு நன்கு தெரியும்.
மேலும் விருப்புறுதி ஆவணம் அதை எழுதியவரின் அறிவுரையின்படி எழுதப்பட்டது என சொல்வதற்கு அவரது குடும்ப வழக்கறிஞரை தவிர வேறு நல்ல சாட்சி இருக்காது.

ஒருவர் விருப்புறுதி ஆவணம் எழுதும் காலத்தில் மேற்படி ஆவணத்தில் சொல்லப்பட்ட சொத்துக்கள் தமக்கு எவ்வாறு பாத்தியப்பட்டது என்பதை பற்றியும் தனது வாரிசுதாரர்கள் யார், யார் என்பதையும், ஒரு வாரிசுக்கு மட்டும் சொத்தும் கொடுக்கும்போது மற்றவர்களுக்கு கொடுக்காத காரணத்தையும், வாரிசுதாரர்கள் தவிர வேறு தரப்பினருக்கு சொத்து கொடுக்கும்போது எதற்காக மூன்றாம் தரப்பினருக்கு சொத்து கொடுக்கப்பட்டது என்பதை தெளிவாக சொல்லியிருந்தால், அந்த விருப்புறுதி ஆவணம் செல்லுபடியாகும் தன்மையை நிரூபணம் செய்ய ஏதுவாக இருக்கும்.

ஒரு விருப்புறுதி ஆவணம் அதை எழுதியவரால் தான் எழுதப்பட்டது என்றும், அது சட்டப்படி செல்லுபடியாகக் கூடியது என்றும், அது மற்ற வாரிசுதாரர்களை கட்டுப்படுத்தக்கூடியது என்றும், சந்தேகத்திற்கு இடமின்றி எழுதப்பட்டுள்ளது என்றும் சாட்சிகளால் கையொப்பமிடப்பட்டிருக்கிறது என்று நிரூபிக்க வேண்டியது கடமை அதனுடைய நிரூபணம் செய்பவரே (Propounder) சாரும்.

விருப்புறுதி ஆவணத்தை யாரேனும் கைப்பட எழுதியிருந்தாலோ, தட்டச்சு செய்திருந்தாலோ, கணிணிியில் தட்டச்சு செய்திருந்தாலோ அவர்கள் தங்கள் பெயர், விலாசத்தை குறிப்பிட்டு கையெழுத்து செய்ய வேண்டும். அவ்வாறு எழுதுபவர் (Scribe) என அழைக்கப்படுவார்.
விருப்புறுதி ஆவணத்தை நிரூபணம் செய்வதற்கு எழுதியவர் (Scribe), பதிவு செய்தவர் (Sub Registrar) ஆகியோர்களின் சாட்சியம் தேவையில்லை.
விருப்புறுதி ஆவணம் சம்மந்தப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் விருப்புறுதி ஆவணம் எழுதியவரின் மனநிலை தெரிந்து, அவரது விருப்பம் என்னவென்று புரிந்து தீர்ப்பினை வழங்கிட வேண்டும் என்றும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், மாண்புமிகு உச்சநீதிமன்றம், புதுடெல்லி பல்வேறு முன்னோடியான தீர்ப்புகளை Arm Chair Theory கோட்பாட்டின்படி வழங்கியுள்ளது.

பதிவு (Registration)
ஒரு விருப்புறுதி ஆவணம் அது எழுதிய உடனேயே எந்தவித உரிமையும் அதனுடைய பயனாளிக்கு (beneficiary) கொடுக்காது. மேற்படி விருப்புறுதி ஆவணம் எழுதியவர் இறந்த பிறகே அதை அமல்படுத்த முடியும். எனவே இந்திய பதிவு சட்டம் 1908 பிரிவு 18(e)ன் கீழ் ஒரு விருப்புறுதி ஆவணம் சட்டப்படி பதிவு செய்து கொள்ள வேண்டிய ஆவணம் அல்ல.
எனவே விருப்புறுதி ஆவணத்தை பதிவு செய்து கொண்டோ அல்லது பதிவு செய்து கொள்ளாமலோ எழுதிக்கொள்ளலாம். விருப்புறுதி ஆவணம் எழுதுவதற்கு முத்திரை தாள்கள் தேவையில்லை. அதற்கு பதிவு கட்டணம் ரூ.600/- மட்டுமே.

ஒரு விருப்புறுதி ஆவணத்தை எழுதும் போது அது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என மேற்படி ஆவணத்தை எழுதுபவர் கருதினால், அதை எழுதுபவர் விருப்புறுதி ஆவணத்தை எழுதி, சாட்சி கையொப்பம் பெற்று மூடிய உறையில் முத்திரையிட்டு சம்மந்தப்பட்ட பதிவு அலுவலகத்தில் அவரோ அல்லது அவரது அதிகாரம் பெற்ற நபர்களோ, வைப்பீடு செய்து (deposit) அதனை பதிவு செய்து கொள்ளலாம்.
அந்த உயில் சம்மந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள புத்தகத்தில் பதிவு செய்து வைக்கப்படும். விருப்புறுதி ஆவணம் எழுதியவர் இறந்த பிறகு அவரது வாரிசுதாரர்களோ அல்லது அவரது அதிகாரம் பெற்ற முகவரோ மனு செய்யும் பட்சத்தில் முத்திரையிட்ட உறையை பிரித்து அதிலுள்ள விருப்புறுதி ஆவணத்தை சம்மந்தப்பட்ட சார்பதிவாளர் புத்தகம் IIIல் பதிவு செய்து கொடுத்துவிடலாம். இதுகுறித்து இந்திய பதிவு சட்டம் 1908 பிரிவு 42 மற்றும் பிரிவு 45 கூறுகிறது.

ஒரு விருப்புறுதி ஆவணத்தை நிறைவேற்றம் செய்பவரோ (executor) அல்லது பயனாளிகளோ விருப்புறுதி ஆவணத்தை எழுதியவர் அதை பதிவு செய்யாமல் இறந்துவிட்டால் அவரது இறப்புக்கு பின் மேற்படி விருப்புறுதி ஆவணத்தை பதிவு செய்து கொள்ள முடியும் என இந்திய பதிவு சட்டம் 1908 பிரிவு 40ல் கூறப்பட்டுள்ளது.

விருப்புறுதி ஆவணத்தின் வகைகள்:
விருப்புறுதி ஆவணத்தை எழுதிக்கொடுப்பவர் கைப்பட அந்த ஆவணத்தை எழுதினால் அது ஆக்கியோன் எழுதிய விருப்புறுதி ஆவணம் (Holograph Will) என அழைக்கப்படுகிறது.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் அவர்களுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை பொறுத்து அல்லது கூட்டுரிமை சொத்தினை பொறுத்து விருப்புறுதி ஆவணம் எழுதினால் அது கூட்டு விருப்புறுதி ஆவணம் (Joint Will) என அழைக்கப்படும்.
மேற்படி கூட்டு விருப்புறுதி ஆவணத்தை (Joint Will) எழுதியவர்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை பொறுத்து அந்த விருப்புறுதி ஆவணம் செல்லும். மற்றவரை பொறுத்து அவர் தன் ஆயுட்காலத்தில் தனக்கு பாத்தியப்பட்ட சொத்தினை தன் இஷ்டப்படி மாற்றி எழுதிக்கொள்ள உரிமையுண்டு.
இரண்டு நபர்கள் சேர்ந்து விருப்புறுதி ஆவணம் எழுதும்போது, அந்த ஆவணத்தில் 1ம் நபர் தனக்கு பாத்தியப்பட்ட சொத்தினை தனது ஆயுளுக்கு பின் 2ம் நபர் அடைந்துக்கொள்ளும்படியும், 2ம் நபர் தனக்கு பாத்தியப்பட்ட சொத்தினை தன் இஷ்டப்படி மாற்றி எழுதிக்கொள்ள உரிமையுண்டு.

இரண்டு நபர்கள் சேர்ந்து விருப்புறுதி ஆவணம் எழுதும்போது, அந்த ஆவணத்தில் 1ம் நபர் தனக்கு பாத்தியப்பட்ட சொத்தினை தனது ஆயுளுக்கு பின் 2ம் நபர் அடைந்து கொள்ளும்படியும், 2ம் நபர் தனக்கு பாத்தியப்பட்ட சொத்தினை தனது ஆயுளுக்கு பின் 1ம் நபர் அடைந்து கொள்ளும்படியும் கூறியிருந்தால் அது பரஸ்பர விருப்புறுதி ஆவணம் (Mutual Will) ஆகும்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள அசையாத சொத்துக்களை பொறுத்து விருப்புறுதி ஆவணம் எழுதப்பட்டிருந்தால் அந்த விருப்புறுதி ஆவணம் எழுதப்பட்டிருந்தால் அந்த விருப்புறுதி ஆவணம் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தால் உண்மையென நிரூபணம் செய்யப்பட்ட பின்னரே சட்டப்படி (Probate) செயல்படுத்த முடியும்

AIARA

🔊 Listen to this உயில் எழுதுவது எப்படி..? ஒருநபர் தனக்கு பாத்தியப்பட்ட சொத்தை பொறுத்து தனது இறப்பிற்கு பிறகு தனது சொத்து யாருக்கு கொடுக்கப்பட வேண்டும், எவ்வாறு பயன்பட வேண்டும் என சட்டப்பூர்வமாக விளம்புகை செய்வது தான் “விருப்புறுதி ஆவணம்” அல்லது “உயில்” என்று கூறப்படுகிறது. இது இந்திய வாரிசுரிமை சட்டம் 1925-ன் கீழ் பிரிவு 2(h)வரையறை செய்யப்பட்டுள்ளது. ஒரு விருப்புறுதி ஆவணத்தை, அதை எழுதிய நபர், அவரது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *