சட்டம் சரியாக இருப்பதாக கூறிக்கொள்ளும் மேதைகள் சட்டப்படி செயல்படாத நீதிமன்றத்தை எந்த கேள்வியும் கேட்பதில்லை? ஏன்? நீதிக்குத் தண்டனை வழங்க நீதிமன்றங்கள் எதற்கு? என எங்கள் பாதிக்கப்பட்டோர் கழகம் உச்சநீதிமன்றத்திடமும், உயர் நீதிமன்றத்திடமும் கேள்வி எழுப்புகிறது!
இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் 211 பொய்யான புகார் கொடுத்தவர்க்கு தண்டனை என சொல்லுகிறது.
இ. த. ச.1860 இன் சட்டப்பிரிவு 167,197,331 ஆகியவை தவறான வழக்கு பதிவு செய்தால் வழக்கு பதிவு செய்த காவல் துறைக்கு தண்டனை என சொல்லுகிறது?
ஆனால் விசாரணை நீதிமன்றமோ எதிரி மீது சுமத்தப்பட்ட குற்றத்தை அரசு/ காவல் துறையால் நிரூபிக்கப்படவில்லை என்பதால் சந்தேகத்தின் பலனை எதிரிக்கு வழங்கி எதிரியை விடுதலை செய்கிறேன் என்று மட்டும் தீர்ப்பளிக்கிறது? அப்படியானால் குற்றம் சுமத்தப்பட்ட பொதுமக்களை நீதித்துறை நம்பவில்லை என்று தானே அர்த்தம்? ஆண்டு கணக்கில் விசாரணை செய்து முடித்த பின்பும் விசாரணை நீதிமன்றத்தால் குற்றம் நடந்தது அல்லது நடக்கவில்லை என்பதை தீர்மானிக்க முடியாத ஒரு சூழ்நிலையை தானே தீர்ப்புரையில் கூறுகிறது? இது சட்டப்படியாக நீதிமன்றம் இயங்குவதற்கான சூழ்நிலையா என்பதை யாரும் ஆராய்வதில்லை? மேலும் இதுபோல எதிரி விடுதலை செய்யப்பட்ட பின் மேற்கண்ட பொய் புகார் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை நாட வேண்டிய ஒரு அசாதாரண சூழ்நிலை உள்ளது. இதில் எங்கே நடுநிலை உள்ளது?
அரசு தரப்பு தவறு செய்துள்ளது என்பது ஒரு வழக்கில் உறுதியான பின்பு அந்த பொய் வழக்கினால் பாதிக்கப்பட்டவன் பாமர மனிதன் இந்த பாமர மனிதனை ஏமாற்றுவதற்காக தானே இது குறித்து குற்ற விசாரணை முறை சட்டம் 340 வது பிரிவு படி விசாரணை நீதிமன்றத்திலேயே இதுகுறித்து பரிகாரம் பெறலாம் என கூறுவது? இதற்கு பெயர் நடுநிலையா?
மேலும் இதை விட ஒரு கொடுமையான ஒரு விஷயம் காவல்துறையை தொடுக்கும் குற்ற வழக்குகளில் சந்தேகத்தின் பலனை எதிரிக்கு வழங்கி விடுதலை செய்கிறேன் என்ற வாசகம் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பிலே இடம் பெறக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் Crl. R. C. No. 684/2014 இ. கலிவரதன் Vs கடலூர் மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய காவல்துறை கண்காணிப்பாளர் என்ற வழக்கில் நீதிபதி மாண்புமிகு எஸ். நாகமுத்து சிறப்பான தீர்ப்பு வழங்கியிருந்தும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு விசாரணை நீதிமன்றங்களும் இந்த தீர்ப்பை பின்பற்றுவதே இல்லை. இதற்கு காரணம் என்ன என நாங்கள் ஆலோசித்த போது பொய் வழக்கு என தீர்ப்பளித்தால் பாதிக்கப்பட்ட நபர் பொய் வழக்கு தொடுத்த காவல்துறையிடம் நஷ்ட ஈடு பெறுவதற்கு தகுதியானவராக ஆகிவிடுகிறார். இதன் காரணத்தாலேயே விசாரணை நீதிமன்றங்கள் சந்தேகத்தின் பலனை எதிரிக்கு வழங்கி விடுதலை செய்கிறேன் என்றே இன்றளவிலும் விசாரணை நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கி வருவதாக தெரிய வருகிறது! மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற குற்ற வழக்குகளில் தீர்ப்புகள் சந்தேகத்தின் பலனை எதிரிக்கு வழங்கி விடுதலை செய்கிறேன் என்றே உள்ளது! சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத விசாரணை நீதிமன்றங்களுக்கு யார் தண்டனை வழங்குவது?
ஒரு வழக்கை அரசு கொண்டு வந்தாலும் தனியார் கொண்டு வந்தாலும் யாராவது ஒருவருக்கு தண்டனை வழங்குவது தானே நீதிமன்றத்தின் கடமையாக / செயலாக இருக்க முடியும்? அதுதான் நடுநிலையாக இருக்க முடியும்? இது குறித்து யாராவது கேள்வி எழுப்பி இருக்கிறார்களா? உச்ச நீதிமன்றத்தில் இருக்கின்ற நீதிபதிகளுக்கு இது தெரியவில்லையா? சட்டப்படி செயல்பட வேண்டிய நீதிமன்றங்களை இதுபோல குழப்பத்தில் ஆழ்த்தி கீழமை நீதிமன்றங்களில் இதுகுறித்து விவாதிக்க முடியாதவாறு செய்திருப்பது உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகிய வல்லமையான தலைமைத்துவ நீதித்துறையின் தவறாகவே நான் கருதுகிறேன் ஏனெனில் கீழமை நீதிமன்றத்தை நெறிப்படுத்த உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவற்றால் மட்டுமே சாத்தியமாகும். ஏனெனில் சட்டப்படி செயல்பட வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாக உள்ளது.
மேலும் இந்திய தண்டனை சட்டம் 193 பொய்யாக சாட்சியமளித்தால் ஏழு ஆண்டுகள் தண்டனை என்று கூறுகிறது? ஆனால் நீதிமன்றத்திலே சென்று பொய்யாக சாட்சியமளித்தவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடியாது எனக் கூறுகிறது? நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிப்பது குற்ற விசாரணை முறை சட்டம் 1973 இன் 340 வது பிரிவுபடி குற்றம் என மிக தெளிவாக கூறுகிறது ஆனால் ஒரு பொய் வழக்கு தொடுத்து விசாரணை என்கின்ற பெயரில் அந்த மாண்பமை நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்கின்ற சங்கதிகளில் அதே வழக்கிலே தீர்ப்பு கூறுவதற்கு விசாரணை நீதிமன்றங்களுக்கு ஏன் அதிகாரம் வழங்கப்படவில்லை? ஒரு பொய்யான தவறான ஆவணத்தை புனைவது என்பது இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் 167 மற்றும் 330 இன் படிக்கு மிகக் கடுமையாக தண்டிக்க கூடிய குற்றம் என கூறுகிறது. நீதிமன்றத்திற்கு நேரில் வந்து நடக்காத ஒரு குற்றச் சம்பவத்திற்கு சாட்சியம் அளிப்பது நீதிமன்றத்திற்கு வருகை தந்து பொய் சாட்சியமளிப்பது என்பது இ. த. ச.1860 இன் 193 இன் படி மிகக் கடுமையான 7 ஆண்டுகள் தண்டிக்க கூடிய குற்றம் என்றும் கூறுகிறது. ஆனால் பொய் சாட்சியம் அளித்தவர் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடியாது. அந்த குற்றம் நடந்த நீதிமன்றத்தில் தான் புகார் அளிக்க முடியும் என வகுத்து விசாரணை நீதிமன்றத்தை கட்டுப்படுத்தி இருப்பது இதில் எங்கே நடுநிலை இருக்கிறது? இது குறித்து இங்கே இருக்கும் சட்ட ஆர்வலர்கள் கொஞ்சம் விவாதியுங்கள்……..
என்றென்றும் மக்கள் பணியில்
இரா. கணேசன்
பாதிக்கப்பட்டோர் கழகம்
அருப்புக்கோட்டை
9443920595
பொய்ப்புகார் கொடுத்த எதிரிக்கு சாதகமாக காவல்துறை தொடுத்த வழக்கால் குற்றம் புரியாத நிரபராதிக்கு பல்வேறு இழப்புகள் ஏற்ப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றம் அதை கருத்தில் கொள்ளாமல் வெறுமனே குற்றம் நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்கிறேன் என்பது சரியல்ல. பாதிக்கப்பட்டவறுக்கு இழப்பீடும் பொய்வழக்கு போட்டவனுக்கு தண்டனையும் தரவேண்டும். இதை யாரிடம் சொல்வது. வழி கூறுங்கள். நான் பாதிப்படைந்தவன்.