வக்காலத்து என்றால் என்ன?
உரிமையியல் வழக்குகளில் ஒரு வக்காலத்தை அளிப்பதன் மூலம் ஒரு வழக்கறிஞர் நியமிக்கப்படுகிறார். வக்காலத்தை ஒரு வழக்கறிஞருக்கு அளிப்பது என்பது அவருக்கு அதிகாரத்தை வழங்குவது போன்ற ஒரு செயலாகும்.
கட்சிக்காரர் முதல்வராகவும் வழக்கறிஞர் அவருடைய முகவராகவும் செயல்படுகிறார். அவர்களுக்கிடையே முதல்வர், முகவர் என்ற நெறிமுறை உருவாகிறது. முகவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு ஒரு முகவர் செயல்படக்கூடாது என்பது முகவருக்கான அடிப்படை நெறி முறையாகும். ஆனால் அந்த நெறிமுறை வழக்கறிஞர்களுக்கு பொருந்தாது.
வழக்கறிஞர்களுக்கென்று சில சிறப்பு இயல்புகளும், சிறப்பு தகுதிகளும் உள்ளது. ( பார்க்க :- இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளைகள் 22(1),39-A மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 303, 304) அந்த சிறப்பு தகுதியானது வழக்கறிஞர்களின் தனித்தன்மை, அச்சமில்லாமல் செயல்படுவதை பாதுகாப்பதற்காக அளிக்கப்பட்டுள்ளது.
ஒருவழக்னக நடத்துவதும் அதற்கான எதிர்ப்பு வாதத்தை முன் வைப்பதும் ஒரு வழக்கறிஞரின் அடிப்படை கடமையாகும். அவருக்குள்ள தொழில் ரீதியான கடமை அல்லது ஆளுமையை அவருடைய கட்சிக்காரர் உட்பட எந்தவொரு நபருக்காகவும் அவற்றை அடகு வைத்துவிட முடியாது. ஒரு வழக்கறிஞர் தன்னுடைய தொழில் ரீதியிலான கடமையை மேற்கொள்ளும் போது அதுகுறித்து கட்சிக்காரர், எதிரி, அரசு தரப்பு, நிர்வாகம் அல்லது சட்டம் இயற்றுபவர்கள் என யாராலும் கருத்து தெரிவிக்கவோ, அதிகாரம் செலுத்தவோ முடியாது. ஒரு வழக்கறிஞர் தொழில் ரீதியான கடமையை மேற்கொள்ளும் போது அவரை யாரும் தடுக்க முடியாது.
ஒரு வழக்கை நடத்துவது என்பது அந்த வழக்கறிஞரின் தொழில் சார்ந்த திறமையை பொறுத்தது.
ஒரு குற்றவியல் வழக்கில் ஒரு வழக்கறிஞர் சற்று சறுக்கினால் அவருடைய கட்சிக்காரர் சிறையில் இருக்க வேண்டியது வரும். அதேபோல் ஒரு உரிமையியல் வழக்கில் ஒரு வழக்கறிஞர் சற்று சறுக்கினால் கட்சிக்காரரின் மதிப்பு வாய்ந்த சொத்து, பணம், கவுரவம் ஆகியவற்றை இழக்க நேரிடுவதோடு தெருவில் நிற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுவிடும். ஒட்டுமொத்த குற்றச்சாட்டும் வழக்கறிஞரின் மீது சுமத்தப்படும்.
ஒரு வழக்கு சங்கதிகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் தன்னுடைய தொழில்முறைக் கடமையை ஆற்றும் விதமாக முடிவுகளை எடுக்க வேண்டியதாக இருக்கும். அவர் ஒரு விண்ணப்பத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கிற நிலைப்பாட்டினை எடுக்கலாம். சில நேரங்களில் அந்த வழக்கு விசாரணையில் காலதாமதம் ஏற்படுத்தவேண்டும் என எண்ணத்தில் மறு தரப்பினர் செயல்படுவதை தவிர்க்கும் விதமாக ஒரு விண்ணப்பத்தை அனுமதிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்கிற மேற்குறிப்பை செய்யலாம்.
வழக்கறிஞர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் அவருடைய கட்சிக்காரரின் நலத்தை அடிப்படையாக கொண்டே அமைந்திருக்கும். எனவே அத்தகைய ஒரு முடிவை எடுத்ததற்காக வழக்கறிஞரை குறை சொல்லக்கூடாது. ஒரு வழக்கறிஞருக்கு கட்சிக்காரர் ஊதியம் அளிக்கிறார் என்பதற்காக அவரை எஜமானராக கருத முடியாது.
ஒரு வழக்கறிஞர் யாருக்கும் ஊழியராக செயல்படக்கூடியவர் அல்ல. அவருடைய மனசாட்சி, சட்டம் மற்றும் கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுளுக்கும் கீழ்படிந்து நடக்கக்கூடிய நபராவார். அவர் பணிபுரிந்து வரும் மூத்த வழக்கறிஞரும் அவருக்கு எஜமானராக இருக்க முடியாது. அவர் ஒரு குருவாகத்தான் இருக்க முடியும்.
ஒரு வக்காலத்தை படித்து பார்த்தால் ஒரு வழக்கறிஞருக்கு அந்த வக்காலத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும். ஒரு வழக்கை நடத்துகிற போது அவருடைய தொழில் சார்ந்த கடமையின் அடிப்படையில் அவர் உடனுக்குடன் சில முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. ஒவ்வொரு வழக்கறிஞரும் நீதிமன்றத்தின் அலுவலராக கருதப்படுகிறார்கள். அது அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு தகுதியாகும். நீதி நிர்வாகத்தின் தனித்தன்மையை காப்பாற்றுவதில் வழக்கறிஞர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஒரு வழக்கறிஞர் யாரையும் சாரந்திருக்காமல் சுதந்திரமாக செயல்பட கூடியவராக இருக்க வேண்டும்.
தொழில்முறைக் கடமையை மேற்கொள்வதாக கூறிக்கொண்டு ஒரு வழக்கறிஞர் அவருடைய தொழிலில் தவறாக நடந்து கொள்வது, ஏமாற்றுவது, உடந்தையாக இருப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அதுபோன்ற தவறை செய்யும் வழக்கறிஞர்களுக்கு சட்டம் உதவி செய்யாது.
எனவே ஒரு வழக்கறிஞர் தனது தொழில்முறைக் கடமையை செய்யும் பொழுது ஒரு மனுவை அனுமதிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறினால் அது தவறு கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.