காவல் நிலையத்தில் ஒருவர் கொடுக்கும் புகார் அல்லது மனு குற்றம் சம்மந்தப்பட்டதாக இல்லாமல் அது திருமணம், குடும்பம், சொத்துரிமை அல்லது வெறுமனே சிவில் பிரச்சினை குறித்தாக இருந்தால் காவல் ஆய்வாளர் அந்த புகாரைப் பெற்று அதனை ஒரு மனுவாக கருதி சமுதாய பணிப் பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு புகார்தாரர் அல்லது மனுதாரருக்கு சிஎஸ்ஆர் வழங்க வேண்டும்.
பின்னர் அதுகுறித்து உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து எந்த ஒரு குற்றமும் நடந்துவிடாதபடி தடுக்க ஏதுவாக அந்த மனுவை விசாரிக்க வேண்டும்.
உரிமையியல் சம்மந்தப்பட்ட மனுக்களை விசாரிக்க காவல்துறையினருக்கு உரிமை இல்லை என்று கூற முடியாது. மேற்கொண்டு குற்றம் நடைபெறுவதை தடுக்க சிவில் பிரச்சினைகளை காவல்துறையினர் விசாரிக்கலாம். அதற்கான அதிகாரத்தை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 149 காவல்துறையினருக்கு வழங்கியுள்ளது.
Crpc – Sec – 149 – Police to prevent cognizable offences.
அதாவது கைது செய்தற்குரிய குற்றம் எதுவும் செய்யப்படுவதை தடுக்க காவல் அதிகாரி ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. மேலும் அவர் தனது திறமை முழுவதையும் இயன்றவரை பயன்படுத்தி குற்றம் நடைபெற இருப்பதை தடுக்கலாம்.
பொதுவாக உரிமையியல் சம்மந்தப்பட்ட மனுக்களை காவல்துறையினர் விசாரிக்கவே முடியாது /கூடாது என்ற ஒரு கருத்து பொதுமக்களிடம் உள்ளது. ஆனால் அது தவறு. உரிமையியல் சம்மந்தப்பட்ட மனுக்களை காவல்துறையினர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 149 ன் கீழ் விசாரிக்கலாம். ஆனால் அந்த விசாரணை மேற்கொண்டு ஒரு குற்றம் நடைபெறுவதை தடுப்பதற்காக இருக்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் கீழ்கண்ட வழக்குகளில் சிவில் சம்மந்தப்பட்ட மனுக்களை காவல்துறையினர் ஒரு மனுவாக கருதி விசாரிக்க வேண்டும் என்றும், கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது என்றும், உரிமையியல் சம்மந்தப்பட்ட மனுக்களை விசாரித்து முடிவில் நீதிமன்றம் மூலமாக பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
- Geetha @ Sharmila and others Vs State rep by inspector of Police, W. 26 all women police station, Ashok nagar, chennai. ( Crl. O. P. No – 5426/2009 :DT – 3.4.2009)
- M.Rathinakumar Vs The inspector of Police, S. 7 Madipakkam police station, Kilkattalai, chennai. ( 2010-4-CTC-324)
- Prakaash Transport Vs inspector of Police, CCB, Salem (2004-1-CTC-130).