குற்ற வழக்கில் ஒரு பிணையை (Bail) நீதிமன்றம் என்னென்ன காரணங்களுக்காக ரத்து செய்யமுடியும் :
ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டுமெனில் கீழ்க்கண்ட ஏதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட காரணங்களின் அடிப்படையில் மனுதாக்கல் செய்து கோரலாம்.
இவை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின்படி உள்ள காரணங்களாகும் இவை முழுமையானவை அல்ல இவை தவிர மற்றெந்த நியாயமான ஏற்கத்தக்க காரணங்களின் அடிப்படையிலும் பிணையை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.
- பிணையில் விடுவிக்கப்படும் நபர் பிணையில் இருக்கும் போது எவ்வகையான குற்றத்திற்காக வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறாரோ அதே வகையான குற்றச்செயலில் ஈடுபடும்போது அவர் பிணையில் தொடர்ந்து இருக்கும் தகுதியை இழந்தவராகிறார்.
- புலன் விசாரணையின்போது கிடைக்கும் புதிய தகவலின் அடிப்படையில் அந்நபர் கூடுதல் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவராகத் தெரிய வருமாயின், அந்நபரின் பிணை திரும்பப் பெறப்படலாம்.
- பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர், புலன் விசாரணைக்கு எவ்விதத்திலும் இடையூறு ஏற்படுத்துவாரானால்
அந்நபரின் பிணை திரும்பப் பெறத்தக்கதாகிறது. - வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை எவ்வகையிலாவது மிரட்டுவதன் மூலம் சாட்சியத்தைக் கலைக்க முற்படுவாரானால், அச்சூழலில் அவர் பிணையில் இருக்கும் தகுதியை இழக்கிறார்.
- பிணையில் உள்ள நபர் தலைமறைவாக முயன்றாலோ, தப்பித்துச் செல்ல முயன்றாலோ, வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல முயன்றாலோ & வேறு வகையில் நீதிமன்றப் பார்வையிலிருந்து மறைந்துகொள்வாராயின் அந்நபரின் பிணை ரத்து செய்யப்படலாம்.
- புலன் விசாரணை அதிகாரி மீதோ அல்லது வழக்கு சாட்சிகளின் மீதோ வன்முறை புரிதலும் பிணை திரும்பப் பெறலாகும்.
- நீதிமன்றம் பிணை வழங்கும்போது, பிழையான அணுகுமுறையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டிருந்தால் அப்பிணை ரத்து செய்யப்படலாம்.
- குற்றச்சாட்டின் தன்மை மாறுபடும் பட்சத்திலும், வேறு விதமான வழக்குச் சூழ்நிலை மாற்றங்களும்கூட பிணை ரத்து செய்யக் காரணமாக அமையலாம்.
- நீதிமன்ற நிபந்தனைப்படி பிணையிலுள்ள நபர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினாலும் பிணை ரத்து செய்யப் படத்தக்கதே.
- பிணையாளர்கள் (Sureties) குற்றம் சாட்டப்பட்ட நபர் பிணையில் வெளியே வர பத்திரம் முலம் நீதிமன்றத்திற்கு உறுதி வழங்கியவர்கள் தாங்கள் வழங்கிய பிணைப் பத்திரத்தை திரும்ப பெறக் கோரி நீதிமன்றத்தில் மனு செய்தாலும் பிணை ரத்து செய்யப்படலாம்.
- பிணைப் பத்திரம் தவறுதலாகவோ & மோசடியாகவோ அல்லது வேறு வகையிலோ நிர்ணயிக்கப்பட்டதைவிட குறைபாடாக இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் பிணை ரத்து செய்யப்படலாம்.
- பிணையப்பத்திரம் வேறு எவ்வகையிலாவது செல்லுபடியாகும் தன்மையை இழக்கும் போதும் பிணை ரத்து செய்யக் கூடியதாகிறது.