1.குழந்தையை சட்டப்படி தத்து எடுப்பது எப்படி?
முந்தைய காலங்களில் அரசர்கள், ஜமீன்தார்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் தங்களுடைய சொத்துகளை பார்த்துக் கொள்ளவும், ஆண்டு அனுபவிக்கவும், வாரிசு இல்லாத சூழ்நிலையில் ஒரு மகனையோ, மகளையோ தன் குழந்தையாக தத்தெடுத்துக் கொள்வார்கள்.
இவ்வாறு தத்தெடுத்தலுக்கு இப்போது அரசே, சட்டப்பூர்வமான வடிவம் கொடுத்திருக்கிறது.
💥 தத்து எடுத்தலை இரண்டு வழிமுறைகளில் மேற்கொள்ளலாம்.
(1) தத்து எடுக்க விரும்பும் பெற்றோர்கள், தத்து கொடுக்க விரும்பும் பெற்றோரிடம் இருந்து தத்தெடுப்பது. இந்தமுறை மிகவும் எளிதானது.
இந்து, பவுத்தம், சீக்கியம், ஜெயின் மதங்களைச் சேர்ந்தவர்கள் ‘இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரித்தல் சட்டம்-1956’ (Hindu adoptions and maintenance act, 1956) மூலமாகவும், முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சார்ந்தவர்கள் ‘கார்டியன்ஸ் அன்டு வார்ட்ஸ் ஆக்ட்-1890’ (Guardians and Wards Act, 1890) மூலமாகவும் குழந்தைகளை தத்தெடுக்கலாம்.
💥 இதற்கான வழிமுறைகள் எளிதானவையாகும்.
தத்து எடுக்கும் மற்றும் கொடுக்கும் பெற்றோர்கள், இதன்மூலம் தத்தெடுப்பதற்கான பத்திரம் (Adoption Deed) ஒன்றினை பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், பதிவு செய்வதற்குமுன் இதன் சம்பிரதாயங்களை முடிப்பது அவசியம்.
சம்பிரதாய முறைப்படி எவ்வாறு திருமணங்கள் செய்யப்பட்டு பதிவு செய்யப்படுகிறதோ, அதேபோல தத்தெடுப்பதும் பதிவு செய்யப்படுகிறது. Adoption Deed பதிவு செய்யப்படுவதே தத்து எடுப்பதற்கான சாட்சி ஆகும்.
(2) தத்து எடுப்பதற்கான மற்றொருவழி சற்று அரிய வழிமுறை ஆகும். ஏனெனில், தற்போதைய காலகட்டத்தில் யாரும் தன் குழந்தைகளை தத்து கொடுப்பதற்கு முனைவதில்லை.
தத்து எடுக்கப்படும் குழந்தைகளை சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு உட்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காகவும், குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வுக்காகவும் இந்த சட்ட வழிமுறைகள் சற்றே கவனத்துடன் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
💥 இந்த வழிமுறையானது பின்வரும் சட்டங்களைப் பின்பற்றிச் செயல்படுகிறது.
- Guidelines Governing Adoption of Children 2015
- Juvenile Justice (Care and Protection of Children) Act, 2000
- Hague Convention on the Protection of Children and Co-operation in Respect of Inter-country Adoption Act, 1993.
💥 குழந்தையை தத்து எடுக்க தகுதிகள் என்ன…?
தத்து எடுக்க விரும்பும் பெற்றோர்கள் நல்ல மனநிலையுடனும், உடல்நிலையிடனும், பொருளாதார நிலையிடனும் இருக்க வேண்டும்.
திருமணம் ஆனவர்களும், திருமணம் ஆகாதவர்களும் தத்தெடுக்க முடியும்.
தனி பெண்மணி குழந்தையை (பெண்பால் / ஆண்பால்) தத்தெடுக்க முடியும்.
தனி ஆண்மகன், பெண் குழந்தையை தத்தெடுக்க முடியாது.
திருமணமான தம்பதியர் குறைந்தது இரண்டு ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகே தத்தெடுக்க முடியும்.
💥 வயது விதிமுறைகள் என்ன…?
4 வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியரின் கூட்டு வயது 90க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதுவே தனி பெற்றோராக இருக்கும்பட்சத்தில் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
4 முதல் 6 வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்க விரும்பும் கணவன், மனைவி ஆகிய இருவரின் கூட்டு வயது 100க்கு மிகாமல் இருக்க வேண்டும். தனி பெற்றோராக இருந்தால் 50 வயது வரை இருக்கலாம்.
8 முதல் 18 வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியரின் கூட்டு வயது வரம்பு 110க்கு மிகாமல் இருக்க வேண்டும். தனி பெற்றோராக இருந்தால் 55 வயது வரை இருக்கலாம்.
குழந்தை மற்றும் தத்து எடுக்க விரும்பும் பெற்றோரில் யாரேனும் ஒருவரது வயது இடைவெளி 25 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
4 குழந்தைகளுக்கு மேல் ஒருவர் / தம்பதியினர் தத்தெடுக்க முடியாது.
இந்தியா மற்றும் வெளிநாட்டவர் இந்தமுறை மூலம் முறையான அனுமதியுடன் தத்தெடுக்கலாம்.
💥 செயல்முறைகள் என்ன…?
- தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
- ‘காரா’ (CARA- Central Adoption Resource Authority) வலைதளத்தில் (cara.nic.in) அதற்கான விண்ணப்பம் கிடைக்கும். இணையத்தின் மூலம் பதிவு செய்யலாம்.
- விண்ணப்பம் பதிவு செய்த நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்க வேண்டும்.
- அரசாங்கத்தால் இதற்கான அனுமதி வழங்கப்பட்ட அனாதை இல்லம், ஆதரவற்ற அமைப்புகள், தன்னார்வ விடுதிகள் (என்ஜிஓ) மூலம் பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளின் புகைப்படங்கள் வலைதளத்தில் காண்பிக்கப்படும்.
- தாங்கள் விரும்பும் குழந்தையை தேர்வு செய்ய முடியும்.
- இதற்காக அமைக்கப்பட்ட குழு, தத்தெடுக்கப்பட்ட பெற்றோரின் மருத்துவ, உடல்நிலை, மனநிலை, பொருளாதார நிலை, வாழ்க்கைச்சூழல் ஆகிய அம்சங்களை ஆராய்ந்து அறிக்கையை அளிக்கும்.
- தகுதியான பெற்றோர் குழந்தையை தத்து எடுத்தவுடன் அரசு சாரா இயக்கம் அல்லது இல்லம் குழந்தையை தத்து கொடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டும். இவ்வாறு குழந்தையைத் தத்தெடுக்கலாம்.
இதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை ஆகலாம். தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வாழ்க்கைமுறை அவர்களின் 18 வயது வரை கண்காணிக்கப்படும்.
இடையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், குழந்தையை திரும்பப்பெற்றுக்கொள்ளும் அதிகாரம் அரசுக்கு உண்டு.
- மதமும் தத்தெடுப்பும் சட்டமும்.
இந்து தத்தெடுப்பைப் பொறுத்தவரை, இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம்1956, இயற்றப்படும் முன் தொகுக்கப்படாத பழைய சட்டமே இருந்தது.
இது இந்துக்களுக்கானது.ஆனால், இந்த சட்டம் வந்த பின் இந்துக்களுக்கான தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பில் வேறு சில மாற்றங்கள் வந்தன.யார் தத்தெடுக்கலாம், தத்து கொடுக்கலாம் என்பது குறித்த வரைமுறைகள் மாறின.
இச்சட்டம் வருவதற்கு முன்பு ஆண்கள் மட்டுமே தத்தெடுக்கலாம். அதுவும் ஆண் குழந்தையை மட்டுமே தத்தெடுக்கலாம். கணவன் தத்தெடுத்து குழந்தையை மனைவியே வளர்த்தாலும், அதற்கு மனைவியின் அனுமதி தேவையில்லை.
ஆனால் இவையெல்லாம் இந்த சட்டத்திற்குப் பின் மாறுதல் கண்டன.சட்டப்பூர்வ தத்தெடுப்பிற்கு, ஒரு சட்டப்பூர்வ ஒப்பந்தத்திற்குத் தேவையானவைகளே அதிகம் தேவையாக இருக்கிறது.
புத்தித் தெளிவோடு இருக்கின்ற உரிமை வயது வந்த எந்த ஒரு இந்து ஆண் ஒரு மகனையோ, மகளையோ தத்தெடுக்கலாம். மனைவி இருந்தால் அவள் ஒப்புதலோடு மட்டுமே தத்தெடுக்க முடியும்.
தத்தெடுப்பது பெண் எனில், இதே, பழைய சட்டத்தில் ஒரு மனைவி தன் கணவனுக்காக தத்தெடுக்கலாம், ஆனால் புதிய சட்டத்தின்படி தனக்காகவும் தத்தெடுத்துக் கொள்ளலாம்.அதே போல தத்துக் கொடுக்க, கொடுக்கப்படும் குழந்தையின் தாய், தந்தை தவிர காப்பாளராக இருந்தால் மட்டுமே தத்துக் கொடுக்க இயலும்.
குழந்தையின் தந்தை, தன் மனைவியின் ஒப்புதலோடு மட்டுமே தத்துக் கொடுக்கலாம் அதே போல, மனைவி தன் கணவனின் ஒப்புதலோடு மட்டுமே தத்துக் கொடுக்கலாம்.
அல்லது, துணை, உலகப்பற்றைத் துறந்திருந்தாலோ, பித்துநிலையினன்/ள் என நீதிமன்றம் அறிவித்திருந்தாலோ, அனுமதி இன்றி தத்துக் கொடுக்கலாம்.
தத்தெடுக்கும் சடங்கு தேவையில்லை.ஒரு இந்து தத்தெடுக்கப்பட வேண்டும் எனில், அவர் ஏற்கனவே தத்தெடுக்கப்பட்டிருக்கக்கூடாது, திருமணம் ஆகி இருக்கக்கூடாது, 15 வயது பூர்த்தியாகி இருக்கக்கூடாது.
தத்து எடுக்கும், தத்து எடுக்கப்படும் குழந்தை இருவரில், தந்தை – மகள், தாய்-மகனுக்கிடையே 21 வயது வித்தியாசம் இருக்க வேண்டும்.ஆனால், தத்தெடுக்கப்பட்ட நபர் தான் பிறந்த வீட்டில், எந்த உறவுகளை மணந்து கொள்ள முடியாதோ அதே நபர்களை தத்துப் போன பின்பும் மணக்க இயலாது. தத்துக்கு முன் அந்த நபருக்கு வந்த சொத்துக்கள் அனைத்தும் தத்துக்குப் பின்பும் அந்த நபருக்கே சொந்தம்.
அந்த சொத்தோடு கூடவே கடமைகள் ஏதுக் கூறப்பட்டிருப்பினும் அந்தக் கடமைகளையும் அவர் செய்து முடித்தேயாக வேண்டும்.ஆக, குழந்தை தத்தெடுப்பு என்பது இச்சட்டத்திற்குப் பிறகு இந்துக்களைப் பொறுத்தவரை மதச் சடங்கு என்பதை விட, அது ஒரு ஒப்பந்தமாகவே இருக்கிறது.இந்து மதத்தில் தத்தெடுப்பு என்பது ‘கொள்ளி போடவும் சொத்தைப் பேணவும் மகனால் மட்டுமே முடியும்.
மகனால் கொள்ளி போடப்படுவதே சரியானது எனும் நம்பிக்கையின் பால் ஏற்பட்ட ஒன்று. எனவே, கொள்ளி போட ஆண் பிள்ளை இல்லாதவர்கள் ஆண்பிள்ளையைத் தத்தெடுப்பது என ஆரம்பிக்கப்பட்டடு பின்னாளில் இதற்கென சட்டம் வந்ததும் கொஞ்சம் மாற்றம் கண்டது.
அதே போல, தனித்து விடப்பட்ட குழந்தைகளை, அதன் காப்பாளரின் மூலம் தத்தெடுப்பது பிரியத்தில் செய்யப்படுவதேயன்றி, மதக் கடமையில்லை.ஆனால், இஸ்லாத்தில் தத்தெடுப்பதற்கு இது போன்ற மத நம்பிக்கைக் காரணங்கள் இல்லாததாலும், அந்த மதமே தாய், தந்தை, பிள்ளைகள் தவிரவும் உள்ள ஏனைய உறவினர்களையும், ஏழைகளையும் காப்பாற்றுதல் என்பது ஒவ்வொரு இஸ்லாமியனுக்குமான மதக் கடமையாக சொல்லப்பட்டிருப்பதால் அங்கே தத்தெடுப்பது என்பது இந்து மதத்தைப் போலில்லை.
ஒவ்வொரு இஸ்லாமியரும், தடுக்கப்பட்ட உறவு(திருமணத்திற்கு) முறையில் உள்ள ஏனைய உறவினர்களைப் பராமரிக்க வேண்டும் என அந்த மதச் சட்டம் கூறுகிறது. ஆனால், அந்த உறவினர் இறந்து போனால் அவர்களிடமிருந்து இறங்குரிமையில் கிடைக்கவுள்ள சொத்தின் பங்கிற்கு/விகிதத்திற்கு பராமரித்தால் போதுமானது.வசதியுள்ள ஒவ்வொரு இஸ்லாமியனும், உறவல்லாத மற்ற ஏழைகளை தனது வருமானத்திலிருந்து இரண்டரை சதவீதத் தொகையில் பராமரிக்கக்கடமைப் பட்டவனாகிறான்.
இங்கே சமூகக்கடமையை, மதம் வலியுறுத்துகிறது.ஆனால், இஸ்லாம், கிறித்தவ, பார்ஸி இனத்தார்களின் தனிச் சட்டம் தத்தெடுப்பை அங்கீகரிக்கவில்லை. ஆனால், தத்தெடுக்க வேண்டும் எனில் அவர்கள் Guardian and Wards Act 1890 ன் கீழ்தான் அதைச் செய்ய வேண்டும் அல்லது Juvenile Justice Act of 2000 கீழ் தான் தத்தெடுக்க முடியும்.எனினும் இஸ்லாத்தை பொறுத்தவரையில், அது இந்துக்களின் தத்தெடுப்பு போன்றது அல்ல. தந்தை எவர் எனத் தெரியாத குழந்தைகளை நீதிமன்ற உத்தரவு பெற்ற பின் பராமரிக்கலாம் அவ்வளவே.
Ms. Shabnam Hashmi வழக்கில், All India Muslim Personal Law Board ஒருவரின் குழந்தை ஒரு போதும் அடுத்தவரின் குழந்தை ஆகாது பராமரிப்பு வேண்டுமானால் அடுத்தவர் செய்யலாம் என வாதிட்டது.
ஆனால், இந்த வழக்கின் பின் தான், எந்த மதத்தவரும், Juvenile Justice Act of 2000 ன் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம் எனும் நிலை வந்தது. [அதே போல ஐக்கிய நாடுகள் சபை kafala எனும் sponsorship system ஐ ஏற்கிறது. (இது முழு தத்தெடுப்பு அல்ல.) ]மொஹம்மத் அலஹாபாத் கான் எதிர் மொஹம்மத் இஸ்மாயில் கான் எனும் வழக்கில் தத்தெடுப்பு இஸ்லாத்தில் ஏற்கப்படவில்லை.
அதற்கு ஒப்பான எதுவும் இஸ்லாத்தில் கிடையாது எனச் சொல்லப்பட்டது.
கிறித்தவ சட்டமும் தத்தெடுப்பைப் பற்றிப் பேசவில்லை. கிறித்தவர் தத்தெடுக்க வேண்டும் எனில், Guardian and Wards Act 1890ன் கீழ் தான் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவு பெற்றபின், குழந்தையைப் பராமரிக்கலாம்.
இஸ்லாமிய, கிறித்தவ, பார்ஸி இனங்களில் இது மாதிரியான பராமரிப்பு என்பது குழந்தை மேஜர் ஆகும் வரை மட்டுமே. அதன் பின் அந்தக் குழந்தை அதிலிருந்து விடுபட்டுவிடலாம்.
(Foster care)இந்திய கிறித்தவர்கள் இந்திய இந்துக்களிலிருந்து மதம் மாறியவர்கள். எனவே, சில பழக்கங்கள், நம்பிக்கைகள் இந்துக்களுடையதாக இருக்கின்றன. கேரள கத்தோலிக்க கிறித்தவர்களிடையே ஒரு தத்தெடுப்பு பழக்கம் இருந்திருக்கிறது.
அதாவது, பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள ஒருவர், தன் மகள்களை மணமுடித்துக் கொடுக்கையில், தன் கடைசி மகளின் கணவனை தன் வாரிசாக ஏற்கும் பழக்கம் இருந்திருக்கிறது.
இந்த கடைசி மருமகன் தன் மாமனாரின் வீட்டிலேயே வாழ்ந்துவருவார். குடும்பப் பெயராகத் தன் மாமனாரின் குடும்பப் பெயரையே ஏற்கிறார் இந்த வித்தியாசமான பழக்கம் கேரளாவின் பல இடங்களில் முன்பு இருந்திருக்கிறது.
கேரள சிரியன் கிறித்தவர்களில் முன்பு வேறொரு பழக்கமும் இருந்திருக்கிறது. குழந்தை இல்லாதவர்கள் சர்ச் பிஷப்பிடம் எவரை தத்தெடுக்க விரும்புகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு, அத சர்ச் ஏற்றால், பிஷப் அதற்கான சர்டிஃபிகேட்டை அளிப்பதன் மூலம் தத்தெடுப்பு நடந்திருக்கிறது.
ஆனால் பொதுவாக கிறித்தவ, பார்ஸி தனிச் சட்டம், தத்தெடுப்பை அங்கீகரிக்கவில்லை. ஆனால் விரும்புபவர்கள் Guardian and Wards Act 1890ன் கீழ் அல்லது Juvenile Justice Act of 2000 அதைச் செய்து கொள்ளலாம் என சட்டம் அங்கிகரிக்கிறது.
ஆக தத்தெடுப்பைப் பொறுத்தவரை, இந்து மதத்தில் இருக்கும் நம்பிக்கை, பிரியம், காரணமாகவும் தன் விருப்பத்தின் பேரில் செய்யப்படுகிறது. மதம் அதற்கு இடமளிக்கிறது. சட்டமும் அதை அங்கீகரிக்கிறது.
இஸ்லாமிய, கிறித்தவ, பார்ஸிகளுக்கான தனிச்சட்டங்களில் தத்தெடுப்பு அங்கிகாரம் இல்லை. ஆனாலும், தத்தெடுப்பு குறித்த இந்திய சட்டத்தின் கீழ் நீதிமன்ற அங்கீகாரம் பெற்று, ஒரு குழந்தைப் பராமரிப்பைச் செய்யலாம் ஆனால் அது குழந்தை மேஜர் ஆகும்வரையே எல்லாருக்கும் பொதுவான ஒரு தத்தெடுப்புச் சட்டத்தை உருவாக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஒவ்வொரு மதத்தின் பார்வையும் தத்தெடுப்பு எனும் விஷயத்தில் வெவ்வேறு மாதிரி இருக்கிறது என்பதை நாம் இங்கு உணரலாம்.