அவதூறு அல்லது மானநஷ்ட வழக்கு. DEFAMATION SUIT.
நம் நாட்டில் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்ய, உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழி செய்யப்பட்டுள்ளது. எந்த முகாந்திரமும் இல்லாமல், தகுந்த காரணமோ, ஆதாரமோ இல்லாமல், ஒரு தனிநபர் பற்றி வாய்மொழியாகவோ, பிறர் படிக்கக்கூடிய வகையிலோ, செய்கை மொழியின் மூலமாகவோ, நாம் செய்யும் செயல், மற்றவரின் பார்வையில் படக்கூடிய வகையிலோ, தவறான செய்திகளையோ, அவதூறான விஷயங்களை பரப்புவதோ, வெளியிடுவதோ, இவ்வாறாக பரப்பக்கூடிய அவதூறு, அந்த நபரின் பெயருக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய ஒரு செயலாக இருப்பின், சமுதாயத்தில் அவர் மானம் பறிபோகக் கூடிய நிலை இருக்கும் என்று தெரிந்தே செய்யும் செயல், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 499ன் கீழ் தண்டனைக்குரிய குற்றம்.
பொதுவாக, இவ்வாறு அடுத்தவரின் மானம் பறிபோகக்கூடிய செயல்களைச் செய்யும் நபர்களின் மீது, மானநஷ்ட வழக்கு தொடரும் நிலையில், எதிர் தரப்பு, ‘பொதுநலம் கருதியே உண்மையை வெளியிட்டோம்’ என்றோ, அரசுப் பணியாளர் Public Servant செய்யும் பணியில், அவருடைய நிலையை வெளியிட்டதாகவோ, நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை வெளியிட்டதோ, சட்டப்படி ஒருவர் மீது உரிமையுள்ள ஒருவர், அவரைப்பற்றி வெளியிடும் ஒரு தகவலோ, தன்னை தற்காத்துக் கொள்வதற்காக நல்லெண்ணத்தில் வெளியிட்ட ஒரு செய்தியாகவோ, இது போன்றவற்றை எதிர்வாதமாகவோ, தற்காப்பு வாதமாகவோ எடுத்துரைப்பார்கள்.
இத்தனை எதிர்வாதம் அல்லது தற்காப்பு வாதம் இருந்தாலும், ஒருவேளை வழக்கில் முகாந்திரம் இருந்து குற்றம் நிரூபிக்கப்பட்டால், 2 ஆண்டுகள் அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்க, இந்திய தண்டனை சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவதூறு பரப்பும் நபர்களுக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர, உரிமையியல் நீதி மன்றத்தையும் நாட நமது சட்டம் அனுமதிக்கிறது. பொதுவாக அவதூறு பரப்பும் செயல், சமுதாயத்தில் ஒரு நபரின் போற்றுதலுக்குரிய இடத்தை தகர்க்கும் வகையில், அதனால் அந்த நபரின் தொழிலுக்கோ, வியாபாரத்துக்கோ பங்கம் விளைவிக்கக்கூடியதாக இருக்கும். இந்த சமுதாயம் அந்த தனிநபரை வெறுத்து ஒதுக்கக்கூடிய, ஒரு நிலைக்கு தள்ளும் எண்ணத்திலேயே இவ்வாறு செய்யப்படுகிறது.
உரிமையியல் சட்டப்படி, இந்த அவதூறு வழக்கானது எழுத்திலான அவதூறு, Libel மற்றும் வாய்மொழியான வசைதூற்றல், Slander என்று இரு வகைப்படும். எழுத்திலான அவதூறு என்பது, எழுத்து வடிவமாகவோ, அச்சு வடிவமாகவோ, உருவ வடிவமாகவோ, நிரந்தரமாக இருக்கக்கூடிய ஒரு நிலையில் வெளியிடக்கூடியது. இது ஒருவர் பார்வைக்கு வெளிப்படையாக தெரியும்படி தெரிவிக்கக்கூடியது. வாய்மொழி வசைதூற்றல் என்பது ஒருவரைப் பற்றி வாய்மொழியாக அவதூறு கூறுவது, அல்லது பழித்துப் பேசுவது. இவ்வாறான செய்கை அந்த நபரின் மனதை புண்படுத்துவதுடன், அந்த செய்தியை செவிவழி கேட்கக்கூடிய நபர்களின் முன்னிலையில், அவர்கள் தன்மானத்தை இழக்கக்கூடிய நிலை ஏற்படும்.
பொதுவாக இவ்வாறான அவதூறு வழக்குகள், பத்திரிகையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள், அல்லது தொலைக்காட்சி நிறுவனர்கள், ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யக்கூடிய ஒரு வழக்காகவே, இன்றைய நிலையில் இருந்து வருகிறது. வழக்கு தாக்கல் செய்யக்கூடியவர்களாக இருப்பவர்கள், பெரும்பாலும் தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள், சமுதாயத்தில் முக்கிய புள்ளிகளாக திகழக்கூடிய அரசியல்வாதிகள், சினிமா நடிகர், நடிகைகள் போன்றவர்களாகவே இருக்கிறார்கள். இவ்வாறான வழக்குகளில், பத்திரிகை சுதந்திரம், அல்லது வெளியீட்டாளர்களின் சுதந்திரம், அல்லது நம் அரசியல் சாசனம் குறிப்பிடக்கூடிய கருத்துச் சுதந்திரம், Freedom of expression என்று கூறி அதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள எண்ணுபவருக்கு, தங்கள் செயல், சட்டத்தின் முன் தவறாக இருப்பின் தோல்வியே மிஞ்சும்.
R.Rajagopal Vs State of Tamil Nadu வழக்கின் தீர்ப்பில், ஒரு செய்தி வெளியிடுவதற்கு முன்பாக, அது அவதூறான செய்தியாக தங்களுக்கு எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக எண்ணி, அதனை வெளியிடுவதற்கு முன்பாகவே தடை செய்யக்கூடிய அதிகாரம் அரசாங்கத்துக்கோ, அரசு அலுவலர்களுக்கோ இல்லை என்று உச்ச நீதிமன்றம் எடுத்து இயம்புகிறது. ஊடகங்களால் பெரிதும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஆருஷி-ஹேமராஜ் கொலை வழக்கில், ஆருஷியின் தந்தை டாக்டர் தல்வார், எந்தவிதமான தடயவியல் சான்று Forensic evidence இல்லாமல், தன் மீது இரட்டை கொலை குற்றத்தை சுமத்தியிருப்பதற்காக, மானநஷ்ட வழக்கினை உ பி காவல் துறையினர் மீது, தாக்கல் செய்தது அனைவரும் அறிந்ததே.
நியூயார்க்கில் உள்ள காந்தி ஹெரிடேஜ் அமைப்புக்கு எதிராக, இந்திய தேசிய காங்கிரஸ், மற்றும் அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சோனியா காந்தி, மற்றும் ராகுல் காந்தியின் அமெரிக்க வருகையின் போது, அவதூறு விளைவித்ததாகக் கூறி, மானநஷ்ட வழக்கு தொடர்ந்தது அனைவரும் அறிந்த ஒரு செய்தியே. பொதுவாக பெண்களுக்கு எதிரான, கொடுமையான பாலியல் வன்புணர்ச்சி, கூட்டு வன்புணர்ச்சி போன்ற பாலியல் குற்றங்கள் நடைபெறும் போதோ, விபசாரத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் போதோ – இது போன்ற நிலைகளில் அந்தப் பெண்ணின் அடையாளங்களையோ, அவரைப் பற்றிய செய்திகளையோ, புகைப்படங்களையோ வெளியிடுவது சட்டப்படி ஏற்புடையதல்ல.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இருப்பினும், ஒரு பெண்ணின் தன்மானத்துக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய, ஒரு செய்தியினை எந்த நிலையிலும், அந்தச் சட்டத்தின் கீழ் பெறுவதற்கோ, வெளியிடுவதற்கோ சட்டம் தடை செய்கிறது. இவ்வாறான சட்டப் பாதுகாப்பு, சமுதாயத்தில் ஒரு பெண்ணின் நிலையை, மானத்தை காப்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக சமுதாயத்தில் வாழக்கூடிய அனைவரும், ஒத்த மனதுடையவர்களாக, அடுத்தவரின் மனதை புண்படுத்தும் எண்ணம் இல்லாதவராக, அவசியமில்லாத செய்திகளையோ அல்லது அவதூறுகளையோ பரப்பக்கூடிய எண்ணம் இல்லாதவராக இருக்கக்கூடிய நிலை என்பது, கற்பனையில்தான் நடக்கும் போன்ற நிலையே.
இன்றைய போட்டி பொறாமை நிறைந்த உலகில், ‘காய்த்த மரம்தான் கல்லடி படும்’ என்ற முதுமொழிக்கேற்ப, சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில், பொறுப்பான பதவியில், பெரும்பாலான மக்கள் அறியக்கூடிய நிலையில், இருக்கக் கூடிய ஒரு நபராக, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு அரசியல் தலைவராகவோ, சினிமா நட்சத்திரமாகவோ, விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவராகவோ, இருப்பவர்களைப் பற்றி உண்மைக்கு புறம்பான அவதூறு செய்திகளை பரப்புபவர்களுக்கு, சட்டப்படி தண்டனை வழங்குவது அவசியமே. எனினும், பொதுநலம் கருதியோ, சமுதாய நலன் கருதியோ, உண்மையான செய்தியையோ, உண்மைக்கு ஒட்டிய செய்தியையோ வெளியிடுவதை எந்தவிதத்திலும் அவதூறு பரப்புவதாக ஏற்றுக் கொள்ள இயலாது.
ஒரு தனிநபரின் சுதந்திரத்தில் தலையிடுவது என்பது, அநாகரிகமான செயல் என்று அறிந்திருப்பவர்கள், இவ்வாறான கேவலமான செயல்களில் ஈடுபடமாட்டார்கள். பொதுவாக இச்செயல்களில் ஈடுபடுபவர்கள், சட்டம் தன்னை காப்பாற்றிவிடும் என்ற அறிதலின் பேரிலேயே துர்செயல்களில் இறங்குகிறார்கள். அவதூறு பரப்புவதற்கு சட்டம் கடுமையான தண்டனை கொடுக்கும் என்ற நிலை வரும்போதுதான், இத்தகைய செயல்கள் குறைய வாய்ப்புண்டு. ஒருவரின் தன்மானம் காப்போம், தனி மனித உரிமையை போற்றுவோம்.