மோட்டார் வாகன விபத்தில் காயமுற்றவர்களுக்காகவும், இறந்தவர்களுக்காகவும், இழப்புரிமை கேட்டு நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்வதில், தற்போதைய மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் படி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட, ஆறு மாத காலத்திற்குள் மனு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அது சரியா இல்லையா என்பது பற்றி ஒரு விளக்கத்தை சென்னை உயர் நீதிமன்றம் தந்திருக்கிறது. தற்போதைய மோட்டார் வாகன திருத்த சட்டத்தின்படி, 01.04.2022 தேதிக்கு பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதிலிருந்து, ஆறு மாத காலத்திற்குள் மனு தாக்கல் செய்யலாம் என்றும், அதற்கு பிறகு மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் உள்ளது .
அது மாதிரியான ஒரு மனுவை மலரவன் என்கிறவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போது, அந்த மனு ஆறு மாத காலத்திற்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது என்றும், அதனால் அதை கோப்புக்கு எடுக்க முடியாது என்றும், நீதிமன்றம் திருப்பிக் கொடுத்திருக்கிறது. அதை எதிர்த்து மேற்படி மலரவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்து, தன்னுடைய மனுவை கோப்புக்கு எடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
அந்த மனுவில், சென்னை உயர்நீதிமன்றம் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை தீவிரமாக ஆராய்ந்து, மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட காலத்திற்கு, ஆறு மாத காலத்திற்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்கிற நிபந்தனை இருந்தாலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட செயல் இழப்புரிமை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவாகவே அது கருதப்படலாம் என்றும், அதனால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து, ஆறு மாத காலத்திற்குள் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்கிற நிபந்தனை கருத்தில் எடுக்கப்பட வேண்டியதில்லை என்றும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு சென்றவுடன், அதுவே இழப்புரிமை கோரும் மனுவாக கருதப்பட வேண்டும் என்றும், அதற்கு பிறகு மனுதாரரால் தாக்கல் செய்யப்படும் மனு ஏற்கனவே காவல்துறை கொடுத்த இழப்புரிமை கோரும் மனுவின் நினைவூட்டுதல் மனு என்ற கணக்கில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதனால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட ஆறு மாத காலத்திற்குள் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்கிற நிபந்தனை பொருந்தாது என்றும், விபத்து ஏற்பட்ட ஆறு மாத காலத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்கிற நிபந்தனையை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்றும், அவ்வாறு விபத்து ஏற்பட்ட ஆறு மாத காலத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாவிட்டால், மனு தாக்கல் செய்ய முடியாது என்கிற நிலையை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறது .
ஆகவே மோட்டார் வாகன விபத்து ஏற்பட்ட உடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருந்தால், அதிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்கிற நிபந்தனையை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவ்வாறு ஆறு மாத காலம் தாண்டி மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும் அந்த மனுக்களை கோப்புக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.
2023(5)CTC 47.