மறுஆய்வு (Review) என்றால் என்ன? எந்த சூழ்நிலையில் மறுஆய்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்? மறுஆய்வு மனுவை மேல்முறையீட்டை பரிசீலிப்பது போல் நீதிமன்றம் பரிசீலிக்க இயலுமா? எந்த சூழ்நிலையில் மறுஆய்வு மனுவை நீதிமன்றம் ஏற்க முடியும்?
சிபிசி பிரிவு 114 மறுஆய்வு பற்றியும் சிபிசி ஆர்டர் 47 மறுஆய்வு குறித்த நடைமுறைகளையும் விவரிக்கிறது.
மறுஆய்வு என்பது குறைந்த அளவு நோக்கத்திற்காக பயன்படக்கூடிய ஒன்றாகும். மறுஆய்வு செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்படும் ஒரு மனுவை ஒரு மேல்முறையீடாக கருத முடியாது. மறுஆய்வில் விரிவான வாதத்தை மீண்டும் முன்வைக்கவோ, புதிய சங்கதிகள் குறித்து ஒரு வாதத்தை முன்வைக்கவோ இயலாது.
ஒரு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவில் வெளிப்படையான தவறுகள் இருந்தால் மட்டுமே (Apparent Error on the Face of the Order) அந்த உத்தரவை மறுஆய்வு செய்ய முடியும்.
இதுகுறித்து உச்சநீதிமன்றம் ” Lilly Thomos and Others Vs Union of India and Others” (2000 – 6 – SCC – 224) என்ற வழக்கில் கீழ்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மறுஆய்வு என்கிற வார்த்தைக்கு மீண்டும் ஒரு விஷயத்தை பரிசீலித்து, அந்த விஷயத்தை சரிசெய்வது அல்லது மேம்படுத்துவது என்று அகராதியில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மறுஆய்வு என்பது சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை.
அதேபோல் உச்சநீதிமன்றம் “பட்டேல் நர்ஷி தாக்கர்ஷி Vs பிரதிமான் சிங்ஜி அர்ஜுன் சிங்ஜி” (1971 – 3 – SCC – 844). என்ற வழக்கில், மறுஆய்வு செய்வதற்கான அதிகாரத்தை உள்ளார்ந்த அதிகாரமாக ( Inherent Power) கருத முடியாது. மறுஆய்வு அதிகாரம் ஒரு மேல்முறையீட்டு அதிகாரம் போன்றது கிடையாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபரிபாலனத்தில் விதிகள் அல்லது நடைமுறைகள் அல்லது சட்டத்தின் நுட்பமான தன்மை போன்றவற்றை நீதி வழங்குவதற்கு தடையாக இருக்க முடியாது. நீதியின் முன் சட்டம் தலை வணங்க வேண்டும். ஏற்கனவே நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில் ஒரு தவறு உள்ளது என்று மறுஆய்வு மனுவை தாக்கல் செய்யும் போது அந்த தவறு நீதிக்கு முரண்பட்டதாக இருக்கும்போது அந்த தவறை நீதிமன்றம் சரிசெய்யலாம்.
சென்னை உயர்நீதிமன்றம் ” M. Jeyakavitha Vs the authorized officer cindicate bank and Others” (2014 – 2 – TLNJ – CIVIL – 245) என்ற வழக்கில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் வெளிப்படையான ஒரு தவறு ஏற்பட்டிருந்தால் சிபிசி ஆர்டர் 47 ரூல் 1 ன் கீழ் வழங்கப்பட்டுள்ள மறுஆய்வு அதிகாரத்தை நீதிமன்றம் பயன்படுத்தலாம். ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு பின்னர் அந்த உத்தரவில் வெளிப்படையான தவறு ஏற்பட்டிருந்தால் மட்டுமே அந்த உத்தரவில் மாறுதல் செய்ய முடியும். ஒரு தீர்ப்பு தவறாக வழங்கப்பட்டிருக்கிறது என்பதை காரணமாக கொண்டு மறுஆய்வு அதிகாரத்தை பயன்படுத்த முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒரு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை, அதே நீதிமன்றம் ஒரு மேல்முறையீட்டை பரிசீலிப்பது போல், மறுஆய்வு மனுவில் ஒரு பரிசீலனையை மேற்கொள்ள முடியாது.
அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் ” ஆலடி சீத்தாராம் Vs P. L. பைனான்ஸ் & இன்வெஸ்ட்மென்ட் லிட் மற்றும் பலர்” (2017 – 4 – TLNJ – CIVIL – 25) என்ற வழக்கில், ஒரு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் வெளிப்படையான தவறுகள் ஏதாவது இருந்தால் மட்டுமே மறுஆய்வு செய்ய முடியும். அப்படி இல்லாத நிலையில் மறுஆய்வு மனுவை ஏற்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆக ஒரு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவில் வெளிப்படையாக ஏதாவது தவறு இருந்தால் மட்டுமே மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய முடியும். மற்றபடி மறுஆய்வு செய்ய முடியாது.
ப. தனேஷ் பாலமுருகன்
அட்வகேட்
ஸ்ரீவைகுண்டம்
தூத்துக்குடி மாவட்டம்
செல் – 8870009240