
MRP-ஐ விட கூடுதல் விலையில் பொருள்கள் விற்றால் யாரிடம் புகாரளிக்க வேண்டும்?
-
by admin.service-public.in
- 120
பேருந்து நிலையங்களில் உள்ள கடைகளில் MRP விலையைவிட அதிக விலைக்கு தின்பண்டங்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை விற்கின்றனர். விலை அதிகமாக விற்பது, காலாவதியான பொருட்களை விற்பது தொடர்பாக யாரிடம் புகார் கொடுக்க வேண்டும்? புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதா? அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது பேருந்து நிலையங்களில் தின்பண்டங்கள், குளிர் பானங்கள் போன்ற உணவு பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கிய அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால் அதை நாம் எளிதாக கடந்து சென்றுவிடுகிறோம். MRP விலைக்கும் கூடுதலாக பொருட்களை விற்பது ஒரு விதிமீறல் குற்றம். இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது, எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை அறிந்துகொள்வதற்கு தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் தலைவர் T. சடகோபன்.
“பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் உள்ள கடைகளில் விற்கப்படும் பொருட்கள் அனைத்தும் அதில் குறிப்பிட்டுள்ள MRP விலைக்கு தான் விற்க வேண்டும். அது தான் விதிமுறை. அதை மீறும்பட்சத்தில் குறிப்பிட்ட அக்கடையின் உரிமையாளர்மீது நாம் புகார் தெரிவிக்கலாம். குறிப்பாக, Packed commodity என்று சொல்லப்படும் பிஸ்கெட், சிப்ஸ், குளிர்பானங்கள் ஆகிய பொருட்களின் விலை, எக்ஸ்பயரி தேதி முதலியவற்றை மாற்றி விற்பதற்கு அக்கடை உரிமையாளருக்கு எந்த உரிமையும் இல்லை. அதை மீறி அப்பொருளின் மேல் வேறு ஸ்டிக்கர் ஒட்டினாலோ, அதிக விலைக்கு விற்றாலோ அது குற்றச்செயலாகக் கருதப்படும். இதுகுறித்த புகாரை FSSAI-யிடம் (Food Safety and Standard Authority of India) அளிக்க வேண்டும். ஒரு கடையை நிறுவ FSSAI சான்றிதழ் அவசியம், அதன் பிறகே அக்கடைக்கான உரிமம் அளிக்கப்படும். இந்த விலை உயர்வு குறித்த புகார்களை அளிக்க ஹெல்ப்லைன் நம்பர் ஒன்றை உருவாக்கியுள்ளது FSSAI. 9444042322 என்ற வாட்ஸப் நம்பருக்கு கடையின் பெயர், முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இணைத்துப் புகார்களைத் தெரிவிக்கலாம்.
இல்லையெனில் ஃபுட் கமிஷனரின் முகவரிக்கு தபால் மூலமும் புகார்களை தெரிவிக்கலாம்.
தபால் அனுப்ப வேண்டிய முகவரி :
Food Commissioner,
359,Anna salai,
DMS Complex,
Teynampet,
Chennai – 6.
புகார் அளித்த நபரின் பெயர் மற்றும் முகவரி எதுவும் வெளியிடப்படாது. உணவுப் பாதுகாப்பு சட்டம் 2006-ன் படி அளிக்கப்படும் புகார்களை உணவு பாதுகாப்பு துறையினரால் பரிசோதனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். காலாவதியான தரமற்ற பொருட்கள் விற்பனை குறித்த புகாராக இருந்தால் அதனை லேபிற்கு அனுப்பி பரிசோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனையில் கொடுக்கப்பட்ட புகார் உறுதி செய்யப்பட்டால் குறிப்பிட்ட கடைமீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் சட்டப்படி வழக்கு பதிவு செய்து வார்னிங் மற்றும் பெனால்டி போடப்படும். குற்றம் தொடரும்பட்சத்தில் கடைக்கு சீல் வைக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
கடையில் வாங்கப்பட்ட உணவுப் பொருள்களின்மீது சந்தேகம் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் தனிப்பட்ட முறையில்கூட லேப் பரிசோதனை மேற்கொள்ளலாம். இதற்கான பரிசோதனை சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் செய்யப்படுகிறது. சென்னை மட்டுமின்றி கோயமுத்தூர், மதுரை, தஞ்சாவூர், சேலம், பாளையங்கோட்டை முதலிய ஐந்து இடங்களில் இதுபோன்ற மையங்கள் உள்ளன. 2020-ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்தியாவில் விற்கப்படும் உணவுப் பொருட்களில் 63% பாதுகாப்பற்றவை என்ற திடுக்கிடும் தரவுகள் வெளியாகின. இது போன்ற குற்றங்கள் தடுக்கப்பட உணவு பாதுகாப்பு துறை தங்கள் ஹெல்ப்லைன் நம்பரை (நுகர்வோர்) மக்களின் பொதுப் பார்வைக்கு கொண்டுசெல்லும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், கடைகளின் உரிமையாளர்களுக்கு தங்களின் FSSAI சான்றிதழை கடையில் தொங்கவிடப்பட வேண்டும் என்ற சட்டமும் இயற்றப்பட வேண்டும்”.
Source: https://timesofindia.indiatimes.com/india/consumer-plaint-disposal-drops-as-case-flow-surges/articleshow/62259727.cms

🔊 Listen to this பேருந்து நிலையங்களில் உள்ள கடைகளில் MRP விலையைவிட அதிக விலைக்கு தின்பண்டங்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை விற்கின்றனர். விலை அதிகமாக விற்பது, காலாவதியான பொருட்களை விற்பது தொடர்பாக யாரிடம் புகார் கொடுக்க வேண்டும்? புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதா? அந்தக் கேள்விக்கான பதில் இங்கே. வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது பேருந்து நிலையங்களில் தின்பண்டங்கள், குளிர் பானங்கள் போன்ற உணவு பொருட்களை அதிக…