- உயில் சாசனம் என்றால் முதலில் என்ன?
- உயில் சாசனத்தை கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டுமா?
- உயில் யாருக்கு யார் எழுத முடியும்?
- எப்படி பாத்தியப்பட்ட சொத்துக்களை உயில் எழுத முடியும்?
- உயில் சாசனம் எப்போது நடைமுறைக்கு வரும்.. அதாவது எப்படி நடைமுறைப்படுத்துவது?
- உயில் சாசனத்தில் சாட்சி கையெழுத்து போடுபவர்களின் முக்கியத்துவம் மற்றும் கடமைகள் என்னென்ன ?
இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான முறையில் விளக்கம்.
உயில் சாசனம் என்றால் என்ன?
உயில் சாசனம் என்பது, ஒருவர் உயிரோடு இருக்கும்போது அவருக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை, அவரது மறைவிற்கு பின்னர் அது யாருக்கு போய் சேர வேண்டும், அதாவது, யார் உரிமை கொண்டாட முடியும் என்பதை பற்றிய தெளிவான ஆவணம். இதுவும் ஒரு வகையான மற்ற கிரைய பத்திரம் போன்றது தான். ஆனால் உயில் சாசனம் எழுதிய நபர் உயிரோடு இருக்கும் வரை அந்த உயில் நடைமுறைக்கு வராது. அதாவது உயில் சாசனத்தை எழுதியவர் அவருடைய காலத்தில் யாருடைய அனுமதியும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் இந்த உயில் சாசனத்தை மாற்றியும் அமைக்கலாம், அல்லது ரத்தும் (Cancel) செய்யலாம். இதற்கு யாரும் தடை மனு பெற முடியாது.
உயில் சாசனம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டுமா?
உயில் சாசனத்தை பதிவு செய்தால் நல்லது. ஏனென்றால் பதிவு செய்யப்பட்ட உயில் சாசனத்தை நடைமுறைப்படுத்துவது என்பது எளிது. அதாவது உயில் சாசனத்தை நடைமுறை படுத்துவதற்கு, எழுதி வைத்தவரின் இறப்புச் சான்றிதழ் மட்டுமே போதுமானது வாரிசு சான்றிதழ் தேவையில்லை. ஆனால் உயில் சாசனம் பதிவு செய்யப்படவில்லை என்றால், அவருடைய வாரிசுகள் அனைவரின் ஒப்புதலுக்கு பின்னர் நீதிமன்றத்தின் வாயிலாக ஆணை பெற்ற பிறகே நடைமுறைப்படுத்த முடியும். இதில் சாட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.
உயில் யார் யாருக்கு எழுத முடியும்?
உயில் என்பது யாருக்கு வேண்டுமானாலும் எழுதலாம். அதாவது ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்கள், தாய், தந்தை, சகோதர சகோதரிகள், குழந்தைகள், இப்படி யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதலாம். அதாவது தாத்தா பேரண்களுக்கும் உயில் எழுதி கொடுக்கலாம் அதே நேரத்தில் பேரன்களும் தாத்தாவிற்கு உயில் எழுதி கொடுக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் உயில் எழுதி கொடுக்கலாம்.
இது தவிர அரசாங்கம் , கோவில்கள், ஆசிரமங்கள் ,Trust மற்றும் பொது நிறுவனங்கள் போன்ற அமைப்புகளுக்கும் உயில் எழுதி வைக்கலாம்..
உயில் சாசனம் தமிழ்நாட்டில் உள்ள எந்த சார்பதிவு அலுவலகத்தில் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்.. சொத்து சம்பந்தப்பட்ட சார்பதிவு அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும் என கட்டாயம் இல்லை.. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஒரே உயில் சாசனத்தின் மூலமும் உயில் செய்து கொடுக்கலாம்… ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்கள் வெவ்வேறு வருவாய் கிராமங்கள் இருந்தாலும் அது பல சார் பதிவு அலுவலகத்திற்கு கட்டுப்பட்டு இருந்தாலும் அத்தனை சொத்துக்களையும் ஒரே சார்பதிவு அலுவலகத்தில் உயில் சாசனம் செய்ய முடியும்…
எப்படி பாத்தியப்பட்ட சொத்துக்களை உயில் எழுத கூடாது????
ஒருவேளை அச்சொத்துக்கள் தவறுதலாக உயில் எழுதப்பட்டாலும் பிற்காலத்தில் அது செல்லாது..
பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒருவருக்கு கிடைத்த பங்குகள் அனைத்தையும் அவருடைய வாரிசுகளின் அனுமதி இல்லாமல் அதாவது தன்னிச்சையாக அவர் மட்டுமே உயில் எழுத முடியாது..
பூர்வ சொத்துக்கள் என்றால் என்ன????
தாத்தா சுயமாக கிரையம் பெற்ற சொத்துக்கள் அவருடைய வாரிசுகளுக்கும் சுய சம்பாத்திய சொத்துக்களாக தான் கருதப்படும்… எனவே அதை அவருடைய வாரிசுகளும் அவர்களுடைய வாரிசுகளுக்கும் கொடுக்கலாம் அல்லது வாரிசுகளின் அனுமதியின்றி மற்றவர்களுக்கும் விற்பனை செய்யலாம்…
அதில் எவ்வித சிக்கல்களும் இல்லை.. அதன் பிறகு அது மூன்றாம் தலைமுறை சொத்துக்களாக மாறிவிடும் அதாவது பூர்வீக (பிஜுராஜித) சொத்துகளாக கருதப்படும்.. அதற்கு பின்னர் வாரிசுகளின் வாரிசுகள் அனுமதி இன்றி அந்த சொத்தை விற்க முடியாது..
அதாவது ஒரு ஊரில் ராமசாமி என்று ஒருவர் இருக்கிறார் அவருக்கு ராஜா என்ற ஒரு ஆண் வாரிசும் சுதா என்ற ஒரு பெண் வாரிசும் உள்ளனர்.. ராமசாமி சுயமாக 3 ஏக்கர் நிலங்கள் வாங்குகிறார்..
அதை தனது வாரிசுகளான ராஜாவிற்கு 2 ஏக்கரும் சுதாவிற்கு 1 ஏக்கரும் பிரித்து கொடுக்கிறார்.. அந்த ராஜாவிற்கு குமார் என்ற ஆண் வாரிசும் சாந்தி என்ற பெண் வாரிசும் உள்ளனர்.. அந்த ராஜா தனக்கு பாத்தியப்பட்ட (அதாவது தகப்பனார் ராமசாமி வழியில் வந்த) 2 ஏக்கர் நிலத்தை தனது வாரிசுகளில் யாரேனும் ஒருவருக்கோ அல்லது மற்ற நபருக்கோ தாராளமாக கொடுக்கலாம்.. மற்ற வாரிசுகளின் அனுமதி தேவையில்லை… எனவே அவர் தனது ஆண் வாரிசான குமாருக்கு கொடுத்து விடுகிறார்… இதற்கு பிறகு இது பூர்வீக சொத்தாக மாறிவிடும்.. குமாருக்கு மணி என்ற ஆண் வாரிசும் லதா என்ற பெண் வாரிசும் உள்ளனர்.. இவர்கள் மேஜர் ஆகும் வரை குமாருக்கு மட்டுமே இந்த சொத்தை விற்கும் அதிகாரம் உண்டு.. ஆனால் மேஜர் ஆன பிறகு இந்த இரண்டு வாரிசுகளின் அனுமதி இன்றி இந்த சொத்தை குமாரால் எதுவும் செய்ய முடியாது.. அதாவது மூன்றில் ஒரு பங்கை மட்டும் குமார் (அவருடைய பங்கை மட்டும்) என்ன வேண்டுமானாலும் செய்யலாம்….
பூர்வீக சொத்துக்களை தவிர மீதமுள்ள அனைத்து வகையான கிரைய சொத்துக்களையும் உயில் சாசனம் எழுத முடியும்… (கிரைய சொத்துக்கள் என்றால் என்ன சுய சம்பாத்திய கிரையம் / தான செட்டில்மெண்ட் / பாகப்பிரிவினை / பரிவர்த்தனை மற்றும் ஏற்கனவே உயில் சாசனம் மூலம் கிடைத்த சொத்துக்களையும் உயில் சாசனம் செய்து வைக்கலாம்).. அதாவது உயில் சாசனம் மூலம் கிடைத்த சொத்தை மீண்டும் மற்றவர்களுக்கு உயில் சாசனம் செய்து வைக்கலாம்.
பவர் பெற்ற சொத்தை நேரடியாக உயில் சாசனம் செய்ய முடியாது.. ஆனால் பவர் வாங்கிய நபரிடமிருந்து கிரயைம் பெற்ற சொத்துக்களை உயில் சாசனம் செய்ய முடியும்.
உயில் சாசனம் எப்போது நடைமுறைக்கு வரும்.. அதாவது எப்படி நடைமுறைப்படுத்துவது
உயில் சாசனம் எழுதியவரின் மறைவிற்கு பிறகே அது நடைமுறைக்கு வரும்.. மேலும் அது பதிவு செய்யப்பட்ட உயில் சாசனமாக இருந்தால் மட்டும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு அவரது இறப்புச் சான்றிதழ்கள் மட்டுமே போதுமானது … வாரிசு சான்றிதழ்கள் தேவை இல்லை… பதிவு செய்யப்படாத உயில் சாசனமாக இருந்தால் வாரிசுகளின் ஒப்புதலை பெற்று நீதிமன்றத்தின் மூலம் ஆணை பெற வேண்டும். தவறும் பட்சத்தில் அதை நடைமுறைப்படுத்த முடியாது…
மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று உங்களுக்கு உயில் சாசனத்தின் மூலம் கிடைத்த சொத்து மாநகராட்சி எல்லைக்குள் இருந்தால் கண்டிப்பாக Probate ப்ரோபேட் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அந்த உயிலை நடைமுறைப்படுத்த முடியாது… அதாவது உயில் சாசனத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அதற்கான ஆணையை பெற வேண்டும்… அப்போது அவர்கள் வாரிசுதாரர்களுக்கு நோட்டீஸ் கொடுப்பார்கள்.. அதை பற்றி தாங்கள் கவலைப்பட தேவையில்லை.. உங்கள் உயில் சாசனத்தில் சாட்சி கையொப்பமிட்டவர்களில் யாரேனும் ஒருவர் வந்து நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டு கொடுத்தால் அந்த உயில் உங்களுக்கு செல்லுபடி ஆகிவிடும்…
மற்ற இடங்களில் இருக்கும் சொத்துக்களுக்கு Probate கட்டாயம் இல்லை..
உயில் சாசனத்தில் சாட்சி கையெழுத்து போடுபவர்களின் முக்கியத்துவம் மற்றும் கடமைகள் என்னென்ன
உயில் சாசனத்தை தவிர மற்ற கிரைய சொத்துக்களுக்கு சாட்சி போடுபவர்கள் வெறும் பெயருக்குத் தான் சாட்சி ஆனால் உயில் சாசனத்தில் அப்படி இல்லை அதில் சாட்சி கையெழுத்து போடுபவர்கள் மிக முக்கியமான பணிகளை மேற்கொள்பவர்கள் அதாவது பின்னாளில் வழக்கு என ஒன்று வரும்போது நீதிமன்றத்தில் ஆஜராகி உயில் சாசனத்தில் இருப்பவருக்கு ஆதரவாக சாட்சி சொல்ல வேண்டும் தவறும் பட்சத்தில் அந்த குறிப்பிட்ட நபருக்கு உயில் சாசனம் செல்லாது…. எனவே உயில் சாசனம் பெறுபவர்கள் பிற்காலத்தில் அந்த உயில் சாசனத்தை நடைமுறை படுத்தும் போது தங்களுக்கு ஆதரவாக இருக்கும் நபர்களிடம் சாட்சி பெறுங்கள்…
தற்போது உயில் சாசனத்தை நடைமுறைப்படுத்த தேவைப்படும் ஆவணங்கள்
- உயில் சாசனத்தில் இடம் பெற்றிருக்கும் சொத்து பத்திரத்தின் நகல்
- உயில் சாசனம் எழுதி வைத்தவரின் இறப்பு சான்றிதழ்
- உயில் சாசனத்தின் சான்றளிக்கப்பட்ட நகல் Certified Copy of Will Documents– உயில் சாசனம் எழுதி வைத்த நபரின் இறப்பு தேதிக்கு பின்னர் தான் சார்பதிவாளர் அலுவலகத்தில் பெற முடியும்..
- உயில் சாசனம் பெற்றவரின் ஆதார் அட்டை நகல்
தற்போது உயில் எழுத நினைப்பவர்கள் தங்கள் பெயரில் கட்டாயம் பட்டா இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்…
குறிப்பு
உயில் சாசனம் செய்பவர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சாராம்சங்களையும் ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பார்த்து தெளிவு பெற்ற பிறகே உயில் சாசனம் செய்யுங்கள்.. தவறும் பட்சத்தில் பின்னாளில் பிரச்சனைகள் ஏதாவது வந்து வழக்கு என ஒன்று வந்துவிட்டால் பத்திரங்கள் மட்டுமே உயில் சாசனம் பெற்றவரை காப்பாற்ற முடியுமே தவிர வேறு எந்த ஒரு தனி மனிதராலும் சட்டரீதியாக உதவி செய்ய முடியாது என்பதைத் தெரிந்து கொண்டு கவனமாக செயல்படுங்கள்..