சிவில் பிரச்னையில் கிரிமினல் வழக்கு பதியக்கூடாது : போலீசுக்கு ஐகோர்ட் அறிவுரை criminal case should not be prosecuted in the civil dispute.
நீதி மன்ற உத்தரவு நகல்:- http://bit.ly/2WeIxZY .
சிவில் பிரச்னையில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று, போலீசுக்கு அறிவுறுத்தியுள்ள உயர் நீதிமன்றம், விவசாயி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பவன்குமார் உள்ளிட்ட 7 பேர் மீது, தனது நிலத்தை அபகரித்ததாக புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில், பவன்குமார் உள்ளிட்ட 7 பேர் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பவன்குமார் மற்றும் 6 பேர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ஆர் விவேகானந்தன் ஆஜராகி, பழனிச்சாமியின் புகாரில் கூறியுள்ள நிலம், மனுதாரர் பவன்குமாருக்கு சொந்தமானது. இது தொடர்பான வழக்கில் பவன்குமாருக்கு ஆதரவாக தீர்ப்புகள் வந்துள்ளன. இது முற்றிலும் சிவில் பிரச்னை என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “சிவில் பிரச்னைகளில் குற்ற வழக்குகள் பதிவு செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கில் மனுதாரர் பவன்குமாருக்கு நிலம் சொந்தம் என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. அவர் பெயரில் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரச்னை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், முற்றிலும் சிவில் வழக்கான இந்த வழக்கில், குற்ற வழக்கு பதிவு செய்யக் கூடாது. எனவே, மனுதாரர்கள் மீது கோவை போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.