GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் கிராம நிர்வாக அலுவலகம் (VAO) பராமரிக்கும் 24 வகையான பதிவேடுகள்

கிராம நிர்வாக அலுவலகம் (VAO) பராமரிக்கும் 24 வகையான பதிவேடுகள்

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)


கிராம நிர்வாக அலுவலகம் (VAO), பராமரிக்கும் 24 வகையான பதிவேடுகள்.

கிராம கணக்குகள், தமிழ்நாடு அரசின் வருவாய் துறையின் கீழ் உள்ள, வருவாய் கிராமங்கள் தொடர்பான 24 வகையான கிராம கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன.

தாலுக்கா “அ” பதிவேடுடன், கிராம “அ” பதிவேட்டினை, ஒப்பிட்டு சரிபார்க்கும் முறை ஜமாபந்தி முறை எனப்படும். பசலி ஆண்டில் (ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை) நடைபெறும் ஜமாபந்தி அன்று, கிராம நிர்வாக அலுவலகர் பராமரித்த 24 வகையான கிராமக்கணக்குகளை, சரக வருவாய் ஆய்வாளர், மண்டல துணை வட்டாச்சியர் மற்றும் வட்டாச்சியர் போன்றோர் சரிப்பார்ப்பு செய்வர்.

கிராம “அ” பதிவேடு என்றால் என்ன?

இப்பதிவேடு, நிலையான அடிப்படையான பதிவேடு ஆகும். கிராமத்தை பற்றிய சர்வே நம்பர் வாரியான விவரங்கள் இப்பதிவேட்டில் பராமரிக்கப்படுகிறது. அதாவது கிராமத்தினை பற்றிய மொத்த பதிவு ஆகும். “அ” பதிவேடு ஆங்கிலத்தில் “A” Register ஆகும்.

கிராம கணக்கு எண் 1:

இது கிராமத்தின் மாதாவாரி சாகுபடி கணக்கு ஆகும். ஒவ்வொரு மாதமும் VAO பயிராய்வு செய்து, எந்தெந்தப் புலங்களில் பயிர்கள், எந்த மாதத்தில் சாகுபடி செய்யப்படுகிறதோ, அதன் விவரங்களை பராமரிக்கும் பதிவேடு ஆகும்.

கிராம கணக்கு எண் 1-A:

இது சாகுபடி செய்யப்பட்ட வெவ்வேறு பயிர்களின் பரப்பையும், விளைச்சல் மதிப்பையும் பற்றிய சுருக்கமான விவரப்பட்டியல் ஆகும்.

கிராம கணக்கு எண் 2 (அடங்கல்):

ஒரு கிராமத்தில் உள்ள நிலத்தைப்பற்றிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய பதிவேடு ஆகும். இக்கணக்கு நீர்ப்பாசன ஆதாரங்கள் வாரியாக, நில பாகுபாடு வாரியாக, புல வாரியாக, மூன்று பகுதிகளாக பிரித்து, பசலி தோறும் எழுதப்பட வேண்டிய மிக முக்கியமான பதிவேடாகும்.

கிராம கணக்கு எண் 2C:

கிராமத்தில் உள்ள அரசு நிலங்கள், மற்றும் தனியாருக்கு நீண்டகால குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள் ஆகியவற்றில் உள்ள பலன் தரும் மரங்களை காட்டும் பதிவேடாகும்.

அரசு தோப்புகள், பொது உபயோகத்திற்கு விடப்பட்ட தனியார் தோப்புகள், அரசால் வரி விதிக்கப்பட்டு ஆங்காங்கே சிதறி கிடக்கும் மரங்கள், ஊராட்சி அல்லது பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்பைடைக்கப்பட்ட புறம்போக்கில் உள்ள மரங்கள், என இக்கணக்கு நான்கு பிரிவுகளை கொண்டிருக்கும்.

கிராம கணக்கு எண் 2D:

பாசன திட்டங்களின் கீழ் பாசன வசதி செய்யப்பட்ட நிலப்பரப்பினை காட்டும் பதிவேடு ஆகும். இக்கணக்கு அடங்கலில் உள்ள பதிவுகளைக் கொண்டு தயாரிக்கபட வேண்டும்.

இக்கணக்கு இருபிரிவுகளாக எழுதப்பட வேண்டும். முதல் பிரிவு, ஆற்றுப்பாசனம் மற்றும் ஏரி பாசனங்களைக் கொண்டது.

கிராம கணக்கு எண் 2F (தரிசு நிலங்கள் பதிவேடு):

ஒவ்வொரு பசலி ஆண்டிலும் சாகுபடி செய்ய கூடிய நிலங்கள், சாகுபடி செய்யாத விடப்படும் நிலங்கள், மற்றும் வேறு வகையாக உபயோகிக்கப்படும் நிலங்களின், பரப்பினை காட்டும் வருடாந்திர கணக்கு ஆகும்.

கிராம கணக்கு எண் 3 (பட்டா மாறுதல்):

நிலங்களில் பதிவுகள் குறித்து ஏற்படும் மாறுதல்களை காட்டும் வருடாந்திர பதிவேடு ஆகும். இது பட்டா மாறுதல் கணக்காகும். நிலங்களின் உரிமையை விட்டுவிடுதல், நில ஒப்படை, பட்டா பெயர் மாற்றம் மற்றும் இதர மாறுதல்கள் போன்ற நான்கு பிரிவுகளாக எழுதப்பட வேண்டும்.

கிராம கணக்கு எண் 3A :

கணக்கு எண் 3ன் மொத்தத்திற்கான சுருக்கத்தினை காட்டும் வருடாந்திர பதிவேடு ஆகும்.

கிராம கணக்கு எண் 4 (அரசிறைக்கழிவு):

இது அரசிறைக் கழிவுக்கான நிலையான கணக்கு ஆகும்.

கிராம கணக்கு எண் 5:

இது நிலவரி வஜா கணக்கு என்று சொல்லப்படும். நிலவரி தள்ளுபடிகளை காட்டும் வருடாந்திர பதிவேடாகும். பருவநிலை சரியில்லாமல் எப்போதாவது ஏற்படும் தரிசு பயிர் இழப்பு, இவற்றிற்கு கொடுக்கும் தள்ளுபடிகளுடன் நிலையான தள்ளுபடிகளையும் இதில் சேர்க்க வேண்டும்.

கிராம கணக்கு எண் 6 ( தண்ணீர் தீர்வைப் பட்டி):

சாகுபடி பரப்பைக் கொண்டு தண்ணீர் தீர்வை கணக்கிடும் பதிவேடாகும்.

கிராம கணக்கு எண் 7:

ஒவ்வொரு கிராமத்திற்கும் ஆக்ரமணம், நீண்டகால மற்றும் குறிகிய கால குத்தகைகள் முதலான அரசுக்கு வரவேண்டிய பல்வேறு வருவாய் இனங்கள் குறித்து எழுதப்படும் வருடாந்திர பதிவேடாகும்.

கிராம கணக்கு எண் 8A மற்றும் 8B:

அரசு ஆதாரங்களிலிருந்து நீர்ப்பாசனம் பெறப்பட்ட அனைத்து நிலங்களிலிருந்தும் கிடைக்கக் கூடிய, மொத்த வருவாயினைக் காட்டும் வருடாந்திர கணக்காகும்.

கிராம கணக்கு எண் 9A:

1963 ம் ஆண்டு, தமிழ்நாடு கூடுதல் தீர்வை மற்றும் கூடுதல் தண்ணீர் தீர்வை சட்டத்தின் கீழ், விதிக்கப்படும் வருவாயினைக் காண்பிக்கும் வருடாந்திரப் பதிவேடாகும்.

கிராம கணக்கு எண் 10 பிரிவு ஐ (சிட்டா பதிவேடு):

கிராம நிலங்களின் பட்டாதாரர் வாரியாக உள்ள நஞ்சை, புஞ்சை, மானவாரி நிலங்களையும், அதற்கான தீர்வினையும் காட்டும் பதிவேடு ஆகும். இப்பதிவேடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுதப்பட வேண்டும். இப்பதிவேட்டில் மொத்த பக்கங்களும் வட்டாச்சியர் அலுவலக சான்றும் முத்திரையும் இருக்க வேண்டும்.

கிராம கணக்கு எண் 10 பிரிவு II:

இந்தப் பதிவேட்டில் பட்டா வாரியான விஸ்தீரணம், தீர்வை தள்ளுபடிகள், நிகரத் தீர்வை, பசலி ஜாஸ்தி, தீர்வை ஜாஸ்தி, புன்செய், நன்செய் தீர்வை, கழிவுகள், நிகரத் தீர்வை, உள்ளூர் மேல்வரிகள் ஆகியவற்றைக் கணக்கிட வேண்டும்.

கிராம கணக்கு எண் 10A:

இக்கணக்கு சாதாரணமாக “வாரிசுப்பட்டி” என குறிப்பிடப்படும். இறந்து போன பட்டாதாரர்களின் பெயரினையும், மேற்படி பட்டா நிலங்கள் வாரிசு முறையில் மாற்றப்பட வேண்டிய நபர்களின் பெயரினையும், காண்பிக்கும் மாதந்திர கணக்காகும்.

கிராம கணக்கு எண் 10C :

பட்டா மாறுதல் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, வட்ட அலுவலகத்திலிருந்து வரப்பெறும் மனுக்கள், வாரிசு பட்டிகள், அனுபோக பட்டிகள் ஆகியவற்றை காண்பிக்கும் வருடாந்திர கணக்காகும்.

கிராம கணக்கு எண் 11:

இது ஒவ்வொரு பட்டாதாரருக்கு அளிக்கப்படும் பட்டா படிவமாகும். இது கிராம கணக்கு எண்.10(1) சிட்டாவின் தூய நகலே ஆகும்.

கிராம கணக்கு எண் 12:

இக்கணக்கு கிராமம் முழுமைக்கும் ஒரு பசலி ஆண்டிற்குரிய மொத்த நிலவரி கேட்புத் தொகையைக் காட்டும் வருடாந்திர பதிவேடாகும்.

கிராம கணக்கு எண் 13:

கிராமத்தின் தினசரி வசூலை காண்பிக்கும் சிட்டாவாகும். இது “ரோஜ்வாரி” எனவும் அழைக்கப்படுகிறது.

கிராம கணக்கு எண் 14:

ஒவ்வொரு பட்டாதாரர்களிடம் இருந்து, வசூல் செய்யப்பட்ட தொகையினை கிராம கணக்கு எண் 13 -லிருந்து வசூலிக்கப்பட்ட தினத்தன்று எடுத்து எழுதப்பட வேண்டும்.

கிராம கணக்கு எண் 14C:

ஒவ்வொரு பசலி ஆண்டிலும், பட்டா வாரியாக வசூலிக்கப்படும் அதிக வசூல் விவரங்களை காண்பிக்கும் பதிவேடு ஆகும்.

கிராம கணக்கு எண் 15:

கிராமத்தில் பட்டாதாரர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட தொகைகள் வங்கியில் செலுத்துவதற்குப் பராமரிக்கப்படும் சுருக்கமான பட்டியலாகும்.

கிராம கணக்கு எண் 16:

பசலி வாரியாக, ஒவ்வொரு மாத கடைசியிலும், ஒவ்வொரு பட்டாதாரரைப் பொறுத்து, அவருக்கான கேட்பு, வசூல், அதிக வசூல், நிலுவைத் தொகையினை காண்பிக்கும் கணக்காகும்.

கிராம கணக்கு எண் 17:

ஒவ்வொரு பட்டாதாரரும் செலுத்த வேண்டிய அபராத தொகை குறித்த கேட்பு, வசூல், பாக்கி ஆகியவற்றின் விவரங்களை காண்பிக்கும் பதிவேடு ஆகும்.

கிராம கணக்கு எண் 18:

பட்டாதாரரிடமிருந்து நிலவரி உள்ளிட்ட பல்வகை வருவாய் இனங்களுக்காக கேட்புத் தொகை வசூல் செய்யும் போது, அவரிடமிருந்து தொகை பெற்றுக் கொண்டமைக்கு, கிராம நிர்வாக அலுவலரால் அவருக்கு அளிக்கப்படும் பற்றுச் சீட்டாகும். அச்சிடப்பட்ட எண்ணுடன் கூடிய பற்றுச்சீட்டுப் புத்தகமாகும்.

கிராம கணக்கு எண் 19:

பிறப்பு பதிவேடு, இறந்து பிறத்தலுக்கான பதிவேடு, இறப்பு பதிவேடு போன்ற பதிவேடுகள், ஜனவரி 1 முதல் டிசம்பர் முடிவு வரை ஆண்டுதோறும் பராமரிக்கும் பதிவேடு ஆகும்.

கிராம கணக்கு எண் 19 பிரிவு III:

அக்கிராமத்தில் உள்ள கால்நடைகள் இயற்கை மரணம், அல்லாது வியாதியாலோ, விஷக்கடி, கொடிய விலங்குகள் அடித்து கொல்லுதல் போன்ற காரணங்களினால் ஏற்படும் கால்நடை மரணங்களை பற்றிய தகவல்களை இப்பதிவேட்டில் பதிய வேண்டும்.

கிராம கணக்கு எண் 19D :

அம்மை குத்தப்பட்டு, பாதுகாப்பு பெற்றிடாத குழந்தைகளை பற்றிய விவரங்களை காட்டும் பதிவேடு ஆகும்.

கிராம கணக்கு எண் 20:

இது மழை கணக்கு எனப்படும். கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை பெய்யும் மழையின் அளவை பராமரிக்கும் பதிவேடு ஆகும்.

கிராம கணக்கு எண் 21:

கிராமத்தில் இருக்கும் கால்நடைகளின் எண்ணிக்கை மற்றும் விவசாய கருவிகளின் எண்ணிக்கையை காட்டும் பதிவேடு ஆகும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் கால்நடைகள் பற்றிய கணக்கெடுப்பாகும்.

கிராம கணக்கு எண் 23:

இக்கணக்கு பட்டாதாரர்கள் செலுத்தும் அடிப்படை நில வரியினை பற்றிய பதிவேடாகும்.

கிராம கணக்கு எண் 24:

கனிமங்களை பற்றிய வருட பதிவேடாகும். ஜனவரி 1 முதல் டிசம்பர் முடிவு வரை, அக்கிராமத்தில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்யும் பதிவேடு ஆகும்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ஒருவரைப் பற்றி வலைத்தளத்தில் பதிவிட்டால் அவர்களை கைது செய்ய கூடாது உச்ச நீதிமன்றம் தீர்ப்புஒருவரைப் பற்றி வலைத்தளத்தில் பதிவிட்டால் அவர்களை கைது செய்ய கூடாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சமூக வலைதளங்களில் ஒருவரைப் பற்றியோ அல்லது சமூக நடவடிக்கை பற்றியோ அல்லது அரசியல் கட்சிகளை நடவடிக்கை பற்றியோ

அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்ககாத நிலையில்?அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்ககாத நிலையில்?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 4 அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அல்லது அரசு அரசுத் துறையினரின் நடவடிக்கையில் திருப்தி இல்லாத

காவல்துறையால் ஒருவர் பாதிக்கப்படும்போது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இழப்பீடு பெறுவது எப்படி?காவல்துறையால் ஒருவர் பாதிக்கப்படும்போது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இழப்பீடு பெறுவது எப்படி?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.