Lalita Kumari vs Govt. of U.P., (2014) 2 SCC1
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள, காஜியாபாத் (Ghaziabad) என்ற நகரைச் சேர்ந்தவர் லலிதகுமாரி என்ற பெண்மணி. இவர் தன்னுடைய மகள் கடத்தப்பட்டது சம்பந்தமாக அங்குள்ள காவல்துறையில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்ய காவல்துறையினர் மறுத்துவிட்டனர். இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். மேலும், அதனுடன் காவல்துறை சீர்திருத்தங்களில் மற்றும் வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவு செய்வது தொடர்பாக, சரியான வழி காட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுக்க வேண்டும் என்று சில மனுக்களும் சேர்த்து அவரால் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றத்தின் , 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, முரண்பாடான தீர்ப்புகளை வழங்கியதைத் தொடர்ந்து, இந்த வழக்கானது தலைமை நீதிபதி பி.சதாசிவம் அவர்கள் தலைமையில், நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், ரஞ்சன் பி.தேசாய், ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பாப்டே ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வரலாற்று சிறப்பு மிக்க அதிரடி தீர்ப்பை 13.11.2013 அன்று வழங்கியது.
தீர்ப்பு விவரம்
➤ ஒரு குற்றம் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகாரில், குற்றம் நடந்திருப்பதை காவல்துறையினர் வெளிப்படையாக உணர்ந்து கொண்டாலே, உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.
➤ அவ்வாறு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யத் தவறுகின்ற காவல்துறை அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
➤ இதைப் போன்ற புகார்களில், வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு காவல்துறையினர் பூர்வாங்க விசாரணை நடத்த தேவை இல்லை.
➤ மற்ற புகார்களின் தொடர்பாக, காவல்துறையினர் பூர்வாங்க விசாரணை நடத்தி அதன்பின்னர் வழக்குப்பதிவு செய்யலாம். ஆனால், இந்த விசாரணை நடத்த அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளாமல் 7 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
➤ இதைப் போன்ற புகார்களில், ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறையினர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
➤ திருமண பந்த பிரச்சினை, ஊழல், நிதி முறைகேடு போன்ற புகார்களில், முதல் கட்ட விசாரணைக்கு காவல்துறையினர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர்.
கடுமையான குற்றங்கள் சம்பந்தமான புகார்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது சம்பந்தமான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நமக்கு வழங்கியுள்ள இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
எனவே இனி காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுக்கும் நேரத்தில் மனுதாரர் இந்த வழக்கின் தீர்ப்பை எடுத்துக் கூறி காவல்துறையினருக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
என்றென்றும் மக்கள் பணியில்
இரா. கணேசன்
பாதிக்கப்பட்டோர் கழகம்,
அருப்புக்கோட்டை
9443920595