நீதிப் பேராணை என்றால் என்ன?
இந்திய அரசியலமைப்பிலுள்ள, நீதிப் பேராணைகளின் வகைகள் எத்தனை?
1976 ஆம் ஆண்டு, 42 வது அரசமைப்பு சட்டத் திருத்தத்திற்குப் பின்பு, நேரடியாக நீதிப் பேராணை (Writ) கேட்டு விண்ணப்பம் செய்யலாம். அரசு மீதும், அரசுத் துறையின் மீதும், நீதிப் பேராணை கேட்டு வழக்கிட முடியும். மேலும் ரயில்வே, வாரியம், பல்கலைக்கழகம், பஞ்சாயத்து, நகராட்சி, மின்சார வாரியம், ஆயுள் காப்பீட்டுக் கழகம், போன்ற அரசு சார்ந்தவற்றின் மீதும் வழக்கிட முடியும். இந்த நீதிப் பேராணைகள் கீழ்க்காணும் ஐந்து வகையாக உள்ளது.
- ஆள் கொணர்விக்கும் நீதிப் பேராணை.
- கட்டளை நீதிப் பேராணை.
- தடை உறுத்து நீதிப் பேராணை.
- நெறிமுறை உறுத்தும் நீதிப் பேராணை.
- அதிகாரத்தைக் கோரும் நீதிப் பேராணை.
ஆள் கொணர்விக்கும் நீதிப் பேராணை, இந்த நீதிப் பேராணை கேட்டு வழக்கிடுவது, ஒரு நபரின் விடுதலை கேட்டு விண்ணப்பிப்பதே அல்லாமல் முறையின்றி சிறை வைத்த நபரினை தண்டனைக்கு உணர்த்தும் நோக்கத்துடன் அல்ல.
நிபந்தனை.
ஒரு நபர் முறையின்றி சிறை வைக்கப்பட்டால், அவரின் விடுதலை கேட்டு நீதிப் பேராணை பெற வழக்கு தொடரலாம். சட்டப்படியாக அன்றி, ஒரு நபர் சிறை வைக்கப்படுதல் கூடாது. எனவே இந்த நீதிப் பேராணை ஒரு நபரின் விடுதலைக்குத் துணை புரியும்.
யார் விண்ணப்பிப்பது
நீதிக்குப் புறம்பாக சிறை வைக்கப்பட்ட நபர் விடுதலை கேட்டு நீதிப் பேராணை மூலம் விண்ணப்பிக்கலாம். அவரால் விண்ணப்பித்துக் கொள்ள முடியாத நிலையில் அவரின் மனைவி, கணவர், அப்பா, அம்மா அல்லது நெருங்கிய உறவினர்கள் விண்ணப்பிக்கலாம்.
நடைமுறை.
நீதிப் பேராணை கேட்டு விண்ணப்பம் செய்து கொள்ளும் நபர், எத்தகைய நடைமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும். நபர் ஒருவர் சிறை வைக்கப்பட்டிருந்தால், சூழ்நிலை பொருண்மைகள் ஆகியவற்றை விளக்கித் தன்னிலை இயம்பும் ஆணை உறுதிப்பத்திரம் முதலியவற்றுடன் உயர்நீதிமன்றத்தை அணுகி நீதிப் பேராணை பெறலாம். இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபரை இதன் கீழ் விடுதலை செய்ய இயலாது.
கட்டளை நீதிப் பேராணை.
அரசு மற்றும் அரசு அதிகாரிகள் சில செயல்களைச் செய்யத் தவறும் போது, அக்குறிப்பிட்ட செயலைச் செய்யும்படி கட்டளையிடுமாறு நீதிமன்றத்தை வேண்டிப் பெறுவது, கட்டளை நீதிப் பேராணை ஆகும்.
நிபந்தனைகள்.
எத்தகைய நிபந்தனைகளின் மீது இத்தகைய கட்டளைகள் நீதிமன்றம் பிறப்பிக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பம் செய்பவருக்குச் சட்டப்படியான உரிமை இருக்க வேண்டும்.
எந்த அரசு அதிகாரத்தை ஒரு செயலைச் செய்யும்படி கோரிக்கை விடுக்கிறாரோ அதற்கு அந்தச் செயலைச் செய்ய வேண்டிய கடமை இருக்க வேண்டும்.
இத்தகைய கடமை செய்ய வழியாகவோ அல்லது அரசமைப்புச் சட்டம் வழியாகவோ அல்லது இயற்றா சட்டத்தின் வழியாகவோ இருக்க வேண்டும்.
இந்தக் கடமை பொது முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும்.
கட்டளை செலுத்த முடியாதது, இந்தியக் குடியரசுத் தலைவர், ஆளுநர், சட்டப்பேரவை மற்றும் அமைச்சக அதிகாரிகள் மீது செலுத்த முடியாது. மேலும் தனி நபர் மற்றும் நிறுவனங்கள் மீதும் செலுத்த முடியாது.
தடை உறுத்து நீதிப் பேராணை.
நீதிமன்ற அதிகாரம் மற்றும் நீதிமன்ற அதிகாரம் போன்று அதிகாரம் பெற்ற நிலைகள் ஆகியவைகள் தங்கள் அதிகாரத்தை மீறிச் செயல்படும் போது அதனைத் தடுத்து நிறுத்த இந்த நீதிப் பேராணைகள் பிறப்பிக்கப்படுகின்றன.
கீழ்நிலை நீதிமன்றம் ஒன்றுக்கு அதிகாரம் வழங்கப்படாத ஒரு வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு இருக்கும் போது உயர் நீதிமன்றமோ உச்ச நீதிமன்றமோ, இத்தகைய வரம்பெல்லையை உபயோகித்து தடை உறுத்துக் கட்டளையைப் பிறப்பிக்கும்.
முக்கிய நிலைகள்.
தடை உறுத்துக் கட்டளையைப் பிறப்பிக்கத் தேவையான முக்கிய நிலைகள்.
நீதிமன்றம் அதிகாரம் இன்றியோ, கொடுக்கப்பட்ட அதிகாரத்தை மீறியோ செயல்பட வேண்டும்.
இயற்கை நீதியை மீறிச் செயல்படும் போது நீதிப் பேராணை பிறப்பிக்கப்படலாம்.
நீதிப் பேராணை கேட்கும் நபரின் அடிப்படை உரிமை பாதிக்கப்படும் போதும் நீதிப் பேராணை கேட்டு விண்ணப்பிக்கலாம்.
நீதிப் பேராணையின் எல்லை.
நீதிமன்றங்கள் தங்கள் அதிகார வரம்பினை அனுமானித்து வழக்கினை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அப்போது அதனைத் தடை செய்ய நீதிப் பேராணை பிறப்பிக்கப்படும்.
நீதிமன்றங்கள் முன்போ நீதிமன்றங்கள் போன்று செயல்படும் நிலைகள் முன்போ வழக்கு விசாரணை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
அத்தகைய நீதிமன்றங்கள், அவ்வழக்கினை நடத்தி பாதி அதிகாரம் பெற்றும், பாதி அதிகாரம் பெறாத நிலையிலும் இருப்பினும் கூட நீதிப் பேராணை பிறப்பிக்கப்படலாம்.
தடை உறுத்துக் கட்டளை பெற முடியாதது
மாற்று நிவாரணம் இருக்கும் போது தடையுறுத்து நீதிப் பேராணை கேட்டுப் பெற முடியாது.
நெறிமுறை உறுத்தும் நீதிப் பேராணை.
நெறிமுறை உறுத்தும் நீதிப் பேராணையின் நோக்கம், கீழ்நிலை நீதிமன்றங்கள், தான் பிறப்பித்த ஆணை சரியானதுதானா?
என்பதைச் சரிபார்த்துக் கொள்ளும் பொருட்டு, உயர்நீதிமன்றம் சரிபார்த்து சான்றனுப்பு என்று பேராணை பிறப்பிக்கும்.
அப்போது கீழ்நிலை நீதிமன்றம் புலனாய்வு செய்து, தான் பிறப்பித்த ஆணை சட்டப்படி சரியானதுதானா என்பதனை சான்று மற்றும் ஆவணங்களை மீண்டும் பார்வையிட்டு ஆணை பிறப்பிக்கும். எனவே கீழ்நிலை நீதிமன்றங்களுக்கு அதன் எல்லைகளை அறிவுறுத்த இத்தகைய நீதிமன்றப் பேராணைகள் பிறப்பிக்கப்படுகின்றன.
நிபந்தனைகள்.
ஆர் எதிர் மின்சார வாரிய ஆணையாளர் (R Vs Electricity Commissioner)
இடையிலான வழக்கில் (1924 I.K.B.171) நீதிமுறை விசாரணை மேற்கொள்ளும் குழு, மேல்நிலை நீதிமன்றங்களின் ஆய்வுக்கு உட்பட்டே ஆணை பிறப்பிக்க வேண்டும். ஏனெனில் அவைகள் தங்கள் அதிகார எல்லையையும் மீறி செயல்பட்டு விடுகின்றன என்று தெரிவித்து, கீழ்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் இப்பேராணை பிறப்பிக்கப்படலாம்.
நீதி செலுத்தும் குழு, சட்டப்படி அதிகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.
குடிமக்களினுரிமை குறித்து அந்தக் குழு விசாரணை ஏற்றுக் கொண்டு இருக்க வேண்டும்.
அக்குழு நீதிமுறையில் விசாரணை செய்ய சட்டப்படி கடமைப்பட்டிருக்க வேண்டும்.
அக்குழு விசாரணை சமயம் அதனுடைய அதிகாரத்தினையும் மிஞ்சி செயல்பட வேண்டும்.
அடிப்படை காரணங்கள்.
நெறிமுறை உறுத்தும் நீதிப் பேராணை கேட்க கீழ்வரும் காரணங்கள் தேவைப்படலாம்.
அதிகாரம் வரம்பு மீறிச் செயல்படுதல்.
அதிகாரம் இன்றியே செயல்படுதல்.
அதிகாரம் பயன்படுத்தத் தவறி விடுதல்
அதிகாரத்தைக் கோரும் நீதிப் பேராணை
ஒருவர் அதிகாரமின்றி பொதுநல அலுவலகம் ஒன்றிற்கு அதிகாரியாக அமர்ந்தால் அவர் மீது இத்தகைய வழக்கு தொடுக்கப்படலாம். அந்த அதிகாரியை எந்த அதிகாரத்தின்படி அந்த அரசு அலுவலகத்தில் அதிகாரியாக இருக்க முடியும் என்று கேள்விகள் கேட்கலாம்.
நிபந்தனைகள்.
அதிகாரம் கேட்டு நீதிப் பேராணை கோரும் போது கீழ்க்காணும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
ஒரு நபர் ஆக்கிரமித்துக் கொண்ட பதவி பொதுநலச் சேவைக்கு என உள்ள பொது அலுவலகமாக இருக்க வேண்டும்.
அலுவலகம் நிலைமுறை சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். அத்தகைய அதிகாரம் செலுத்தும் நபர் தனித்துறைத் தலைவராக இருக்க வேண்டும்.
இந்த அலுவலகம் சட்டப்படியோ, அரசியலமைப்புச் சட்டப்படியோ ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரத்தைக் கோரும் நீதிப் பேராணை கேட்கும் போது அந்த அலுவலக அதிகாரி, தன்னுடைய நிலையினை தற்காத்துக் கொள்ளப் போராட வேண்டும்.
இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள் :-
இந்திய உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் சட்டங்களை நீதிப் புனராய்வு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளன.
ஒரு சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது அல்லது புறம்பானது என்று தீர்ப்பு வழங்கத்தக்க அதிகாரத்திற்கே, நீதிப் புனராய்வு என்று பெயர்.
அரசியலமைப்பின் காவலனாக நீதித்துறை விளங்குகிறது.
இந்திய குடிமக்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் நீதித்துறை இதன் மூலம் பாதுகாக்கிறது.இந்தியக் குடியரசுத் தலைவர் நாட்டின் அவசரக் காலங்களில், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்.
மற்ற சூழ்நிலைகளில், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டால், பாதிக்கப் பட்டவர் பின்வரும் நீதிப் பேராணைகள் வழியாக, நீதியை உச்சநீதி மன்றத்திலோ(அரசியலமைப்பு உட்பிரிவு(சரத்து)-32 வழியாக), உயர்நீதி மன்றத்திலோ (உட்பிரிவு-226 வழியாக)பெற முடியும்.
இதற்கு ஐந்து வகையான நீதிப் பேராணைகள் தீர்வு உள்ளன.
அவை :-
1.ஆட்கொணர் நீதிப்பேராணை,2.கட்டளை நீதிப்பேராணை,3.தடை நீதிப்பேராணை,4.உரிமைவினா நீதிப் பேராணை,5.தடைமாற்று நீதிப்பேராணை என அழைக்கப்படுகின்றன.
ஆட்கொணர் நீதிப்பேராணை (Writ of Habeas Corpus)
தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால், அவருக்கு நீதி வழங்கும் நீதிமன்றம் காவலில் வைத்த அதிகாரிக்கோ அல்லது அரசாங்கத் திற்கோ ஆணை வழங்கி, காவலில் வைக்கப்பட்ட வரை நீதிமன்றத்தின்முன் கொண்டுவரச் செய்வதாகும். காவலில் வைக்கப்பட்டது சரியென நியாயப்படுத்த வேண்டியது காவல் துறையின் கடமை, இல்லையேல் அவரை விடுதலை செய்ய வேண்டும்.
வேறுபாடு :-
நீதிமன்ற அழைப்பாணை இட்டும் நீதிமன்றம் காவல்துறையினரை, குறிப்பிட்ட நபரை அழைத்து வர ஆணையிடலாம். அவ்வாறு அழைக்கப்படும் நபர் சட்டக் கடமைமீறலைச் செய்தவர் ஆவார். ஆனால், இந்த நீதிப் பேராணை, சட்ட உரிமைக்காக வழங்கப்படுகிறது.
கட்டளை நீதிப்பேராணை (Writ of Mandamus)
ஒரு குறிப்பிட்ட செயலை உடனடியாக செய்யக்கோரி நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பதாகும். இவ்வாணை பிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிட்ட அலுவலர் அச்செயலை உடனடியாகச் செய்ய வேண்டியவராகிறார்.
தடை நீதிப்பேராணை (Writ of Prohibition)
நீதிமன்றம் ஓர் அதிகாரிக்கு ஆணை பிறப்பித்து, அவரது எல்லைக்குட்படாத ஒரு செயலைச் செய்யாதிருக்குமாறு ஆணை பிறப்பிப்பதாகும்.
உரிமைவினா நீதிப் பேராணை (Writ of Quo warranto)
பாதிக்கப்பட்ட ஒரு நபரின் நியாயமான கோரிக் கையின் அடிப்படையில், அரசாங்கத்தின் அலுவலர் ஒருவரை அவர் எந்த அடிப்படையில் குறிப்பிட்ட பதவியை வகிக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தக் கோரும் நீதிமன்றத்தின் உத்தரவாகும்.
தடைமாற்று நீதிப்பேராணை (Writ of Cestiorari)
நீதிமன்றம் தனது கீழ்பட்ட ஒரு அதிகாரிக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ ஆணை பிறப்பித்து, குறிப்பிட்ட நீதிமன்றச் செயல்முறைகளையும் ஆவணங்களையும் தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ மாற்றச் செய்து நியாயமான பரிசீலனைக்கு அனுப்பச் செய்வதாகும்.