பட்டா மாறுதல் மனு தள்ளுபடி: துணை வட்டாட்சியா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு.
பட்டா மாறுதல் கோரும் மனு மீது தவறான அறிக்கை அளித்த உடையாா்பாளையம் துணை வட்டாட்சியா் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியருக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ஜயங்கொண்டம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் மகாராணி (43). இவா், தனது தந்தை தானமாக வழங்கிய இரண்டு ஏக்கா் நிலத்தை பட்டா பெயா் மாற்றம் செய்து தருமாறு கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் உடையாா்பாளையம் வட்டாட்சியரிடம் விண்ணப்பம் அளித்தாா். வழக்கு நிலுவையில் உள்ளதால் வட்டாட்சியா் பட்டா வழங்கவில்லை. இதையடுத்து, மகாராணி அரியலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா்
வழக்கை விசாரணை மேற்கொண்ட ஆணையத் தலைவா் வீ.ராம்ராஜ் மற்றும் உறுப்பினா்கள் என்.பாலு, வி.லாவண்யா அடங்கிய அமா்வு, நிலத்தின் மீது வழக்கு தொடா்ந்தவா்கள், மகாராணி பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் முன்பே வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டது, சேவை கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு, பட்டா மாறுதல் கோரிய மனுவை தவறாக தள்ளுபடி செய்தது சேவைக் குறைபாடு. எனவே, உடையாா்பாளையம் வட்டாட்சியா் நான்கு வார காலத்துக்குள் முறைப்படி விசாரணை நடத்தி புகாா்தாரரின் பட்டா மாறுதல் மனுவின் மீது முடிவு காண வேண்டும். தவறினால் புகாா்தாரருக்கு ரூ 25,000 இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும், உண்மையை மறைத்து தவறான அறிக்கையை சமா்ப்பித்த மண்டல துணை வட்டாட்சியா் மீது சட்டப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரியலூா் ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்படுகிறது என உத்தரவிட்டனா்.