வழக்கறிஞர் அல்லாத நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்காடிகள் சார்பாக ஆஜராகி வழக்கை நடத்த முடியுமா? என்ற கேள்வி பல தரப்பிலும் ஓடிட்டே தான் இருக்கிறது.
ஒரு மருத்துவர் அல்லாத மருத்துவ உதவியாளர் சிகிச்சை அளிக்க முடியுமா? என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
முடியும் என்று ஒப்புக் கொண்டால், அதனால் ஏற்படும் விளைவுகளையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேதான் வழக்கறிஞர் அல்லாத வேறொருவர் வழக்காடிகளுக்காக வழக்கில் ஆஜராகும் போது ஏற்படும் விளைவுகள் ஆகும்.
முதலில் வழக்கறிஞர்கள் என்பர் யார்? என்பதற்கு வழக்கறிஞர்கள் சட்டம் 1961 ல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் என்பவர் எந்தவொரு மாநில பார் கவுன்சிலும் பதிவு செய்து கொண்டவர் ஆவார். இவ்வாறு பதிவு செய்து கொண்ட வழக்கறிஞர் இந்தியாவிலுள்ள எந்த நீதிமன்றத்திலும் வழக்காடிகள் சார்பில் ஆஜராகி வழக்கை நடத்தலாம். ஆனால் இந்திய பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொள்ளாத எவரும் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது.
உரிமையியல் நடைமுறைச் சட்டம் 1908 – வகுமுறை 3 ஆனது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பற்றி விவரிக்கிறது.
வகுமுறை 3 விதி 1 ஆனது நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவது பற்றியும், அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் ஆஜராவது பற்றியும் விவரிக்கிறது. அதன்படி நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தரப்பினர்கள் தானே நேரடியாக ஆஜராகலாம் அல்லது அவரது முகவர் அல்லது வழக்கறிஞர் மூலமாகவும் ஆஜராகலாம் என்கிறது. இங்கே கவனிக்க வேண்டியது முகவர் அல்லது வழக்கறிஞர் என்றே கூறப்பட்டுள்ளது.
மேலே கண்ட சட்ட விதியின் படி அங்கீகரிக்கப்பட்ட முகவர் ஒருவர் வழக்காடி சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராக முடியும் என்பது தெளிவாகிறது. இருப்பினும் இது சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது.
வழக்கறிஞர்கள் சட்டம் 1961 ன் பிரிவு 32 ஆனது குறிப்பட்ட வழக்குகளில் ஆஜராக அனுமதிக்கும் நீதிமன்றங்களின் அதிகாரங்கள் குறித்து விவரிக்கிறது. அதாவது எந்தவொரு நீதிமன்றமும், தீர்ப்பாயமும் குறிப்பிட்ட வழக்குகளில்
வழக்கறிஞர்கள் சட்டத்தின் கீழ் வழக்கறிஞராக பதிவு செய்து கொள்ளாத நபர்களையும் அனுமதிக்கலாம் என்கிறது.
எனவே வழக்கறிஞர்கள் சட்டத்தின் கீழ் வழக்கறிஞராக பதிவு செய்து கொள்ளாத நபரும் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்காடலாம். ஆனால் இதுவும் நீதிமன்றத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது.
உச்சநீதிமன்றம் விதிகள் 2013 ன் விதி IV 1(a) ஆனது, வழக்கறிஞர்கள் சட்டம் 1961 ன்படி பதிவு செய்து கொண்ட வழக்கறிஞர்கள் எந்தவொரு நீதிமன்றத்திலும் ஆஜராகலாம் என்கிறது.
இதுகுறித்து முக்கிய தீர்ப்புகளும் உள்ளது.
உச்சநீதிமன்றம் “Harishankar Rastogi Vs Girdhari Sharma And Another” என்ற வழக்கில் 13.3.1978 தேதியில் வழக்கறிஞர் அல்லாத நபர் வழக்காடி சார்பில் ஆஜராக வேண்டுமானால் முதலில் நீதிமன்றத்தின் முன் அனுமதியை பெற வேண்டும், ஆனால் அனுமதி வழங்குவதென்பது நீதிமன்றத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதேபோல் உச்சநீதிமன்றம் Goa Antibiotics & Pharmaceuticals Limited Vs R. K. Chawla And Another என்ற வழக்கில் 4.07.2011 ல் வழக்கறிஞர் அல்லாத நபர் நீதிமன்றத்தில் வழக்காடி சார்பில் ஆஜராவது வழக்கறிஞர்கள் சட்டத்திற்கு எதிரானது. அதனை அனுமதிக்க முடியாது. ஆனாலும் நீதிமன்றத்தின் விருப்பத்திற்கு உட்பட்டு வழக்கறிஞர் அல்லாத நபரையும் வழக்காடி ஒருவர் தன் சார்பில் வழக்கை நடத்த நியமிக்கலாம். ஆனால் முன் அனுமதி கட்டாயம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆக வழக்காடி எவரும் தனது வழக்கை நடத்த வழக்கறிஞர் அல்லாத நபரை நியமிக்கலாம். ஆனால் அதற்கு நீதிமன்றத்தின் முன் அனுமதியை பெற வேண்டும். அதேசமயம் அவரை நியமிப்பது நீதிமன்றத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது என்பதையும் நினைவில் கொள்ளவும்.
குறிப்பு –
ஏன் வழக்கறிஞர் அல்லாத நபரை நியமிக்க வேண்டும். இருவருக்குமான உறவு, சட்ட அறிவு, நீதிமன்ற நடைமுறைகள் பற்றிய தெளிவு ஆகியவற்றை பரிசீலித்தே நீதிமன்றம் அனுமதி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ப. தனேஷ் பாலமுருகன்
அட்வகேட்
திருவைகுண்டம்
தூத்துக்குடி மாவட்டம்
செல் – 8870009240