திருநெல்வேலி; திருநெல்வேலியில், ஐ.டி.பி.ஐ., வங்கியில், ‘ஏசி’ வேலை செய்யாததால் வாடிக்கையாளருக்கு, 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருநெல்வேலியைச் சேர்ந்த வக்கீல் பிரம்மநாயகம், வண்ணார்பேட்டை, ஐ.டி.பி.ஐ., வங்கி கிளையில் பணம் செலுத்த, 2019 ஜூன் 21, ஜூலை, 12 ஆகிய நாட்களில் சென்றார். இரு நாட்களிலும் வங்கியில், ‘ஏசி’ செயல்படவில்லை.ஊழியர்களுக்கு மின்விசிறி இயங்கியது. வாடிக்கையாளர்கள் பகுதியில், மின்விசிறி கூட இல்லாமல் சிரமப்பட்டனர். இது குறித்து, பிரம்மநாயகம், வங்கி அதிகாரிகளிடம் கேட்டும், முறையான பதிலளிக்கவில்லை.
இதையடுத்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரின் மன உளைச்சலுக்கு, 15 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் என, 20 ஆயிரம் ரூபாய் வழங்க, நுகர்வோர் நீதிமன்ற தலைவர் தேவதாஸ் உத்தரவிட்டார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2602787