பதிவு செய்யப்பட்ட வீடியோ, (Video Recording & Audios Recording) Under 65 (B) Indians Evidence Act ஆடியோ இவை சாட்சி ஆவணங்களாக நீதிமன்றம் ஏற்று கொள்ளூமா அல்லது இல்லையா?
நிலைபாடு பற்றி சில தீர்ப்பில் இருந்து இந்த வழக்கில் வாதி, பிரதிவாதி தன்னோடு பேசும் போது எங்களது சொத்துரிமையை ஒத்துக் கொண்டார். அதனை நான் பதிவு செய்து வைத்துள்ளேன். அந்த பதிவு எனது வழக்கை நிரூபிக்க உதவும். எனவே பிரதிவாதி பேசிய பேச்சை பதிவு செய்துள்ள சிடியையும், மெமரி கார்டையும் எனது தரப்பு சான்றாவணமாக குறியீடு செய்ய வேண்டும் என்று கோரி ஒரு இடைக்கால மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதற்கு பதில் மனு தாக்கல் செய்த பிரதிவாதி, வாதி குறியீடு செய்யக் கோரும் ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்றும், வாதி தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட நிரூபண பிரமாண வாக்குமூலத்தில் ஆடியோவை பற்றி எதுவும் சொல்லவில்லை என்றும் அந்த மின்னணு ஆவணங்களை குறியீடு செய்வதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்றும் வாதி உரிமை ஆவணங்களை வைத்தே தனது வழக்கை நிரூபிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மனுவை விசாரித்த விசாரணை நீதிமன்றம், வாதிக்கு சொத்தில் உரிமை உள்ளது என பிரதிவாதி ஒப்புக் கொண்டிருந்தாலும் இந்த வழக்கிற்கு அந்த உரையாடல் எந்த வகையிலும் வாதிக்கு சாதகமாக இருக்காது என்றும் வழக்கு தரப்பினர்கள் அவரவர்கள் தரப்பு வழக்கை தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்று கூறி வாதி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து வாதி இந்த சீராய்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். வாதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரதிவாதி சொத்துரிமையை ஒத்துக் கொண்டு பேசிய பேச்சுக்கள் அடங்கிய குறுந்தகடு மற்றும் மெமரி கார்டு ஆகியவை இந்திய சாட்சிய சட்டம் பிரிவுகள் 62 மற்றும் 63 ன்படி முதல்வகை மற்றும் இரண்டாம் வகை சாட்சியங்களாக கருதப்படுவதால் அவற்றை சான்றாவணமாக குறியீடு செய்வதற்கு விசாரணை நீதிமன்றம் அனுமதி அளித்திருக்க வேண்டும் என்றார். மேலும் வாதியால் தாக்கல் செய்யப்பட்ட மின்னணு ஆவணங்களை குறித்து நீதிமன்றத்திற்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டிருந்தால் அவற்றை தகவல் தொழில் நுட்பச் சட்டம் பிரிவு 79(A) ன் கீழ் நிபுணர்களுக்கு அனுப்பி வைத்து அவற்றை ஆய்வு செய்து ஓர் அறிக்கையை நீதிமன்றம் பெறலாம் என்றார். மேலும் பிரதிவாதி சொல்லும் ஆட்சேபனைகளை பதிவு செய்து கொண்டு, அந்த ஆவணங்களை நீதிமன்றம் குறியீடு செய்ய அனுமதி அளித்து, அதன்பின்னர் அந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததற்கு பின்னர் அந்த ஆவணங்களின் உண்மைத் தன்மை மற்றும் அதனை ஏற்றுக் கொள்வது குறித்து விசாரணை நீதிமன்றம் பரிசீலித்திருக்க வேண்டும் என்றார். மேலும் அவர் மின்னணு ஆவணங்களை நீதிமன்றத்தில் சான்றாவணமாக குறியீடு செய்யலாம் என்று கீழ்க்கண்ட வழக்குகளில் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளதாக கூறினார்.
இராம்சிங் மற்றும் பலர் Vs கர்னல் இராம்சிங் ( AIR-1986-SC-3)
குருசாமி மற்றும் பலர் Vs சந்தானம்
(2005-5-CTC-102),(2005-4-MLJ-343)
இசக்கியம்மாள் என்கிற சித்ரா Vs வீரபத்ரா என்ற குமார்
(2012-4-CTC-743)
உதயகுமார் Vs G. கிஷோர் குமார்
(2014-5-CTC-118)
அன்வர் P. V. Vs பஷீர் மற்றும் பலர்
(AIR-2015-SC-180),(2014-10-SCC-473)
R. S. இராஜ கண்ணப்பன் Vs K. R. பெரிய கருப்பன் மற்றும் பலர்
(2016-1-CTC-149),(2015-8-MLJ-409)
சென்னை உயர்நீதிமன்றத்தால் CRP. NO – 2657/2007 என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு
மேற்படி வாதத்தை கேட்ட நீதிபதி, ஓர் ஆவணத்தை சான்றாவணமாக குறியீடு செய்வதற்கு மறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அந்த ஆவணம் மெய்பிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு (Subject to proof and Relevancy) குறியீடு செய்யப்படலாம் என்பது நன்கு வரையறுக்கப்பட்ட சட்ட நிலைப்பாடாகும் என்றும் அந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததற்கு பின்னர் இரு தரப்பினர்களாலும் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை அடிப்படையாக கொண்டு, அந்த ஆவணத்தின் உண்மைத் தன்மை மற்றும் அந்த ஆவணத்திற்கும், வழக்கிற்கும் உள்ள சம்மந்தம் போன்றவற்றை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவ்வாறு ஒரு பரிசீலனையை நீதிமன்றம் மேற்கொண்டதற்கு பின்னர் அந்த ஆவணத்தை ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ செய்யலாம். அதன்பிறகு தான் வழக்கில் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் ஒரு வழக்கு எந்த நிலையில் இருந்தாலும் ஓர் ஆவணத்தை நீதிமன்றம் நிராகரிப்பதற்கு உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 13 விதி 3 அதிகாரம் அளிக்கிறது என்றும் அவ்வாறு ஒரு ஆவணத்தை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்கும் போது, அதற்கான காரணத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.மின்னணு ஆவணங்களை சான்றாவணமாக குறியீடு செய்வதற்கு நீதிமன்றம் அனுமதிக்கலாம் என்றாலும் அந்த மின்னணு ஆவணங்களின் உண்மைத் தன்மையை இந்திய சாட்சிய சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு நிரூபிக்க வேண்டும் என்றார். மேலும் உச்சநீதிமன்றம் ” இராம்சிங் மற்றும் பலர் Vs கர்னல் இராம்சிங் (AIR-1986-SC-3)” என்ற வழக்கில், உரையாடியவரின் குரலை உரையாடியவர் ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது அந்த உரையாடலுக்குரியவரின் குரலை வேறு யாராவது அடையாளம் காட்ட வேண்டும். பதிவு செய்யப்பட்ட குரல் யாருடையது என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட குரலை அந்த குரலுக்குரியவர் மறுத்துரைக்கும் போது, அந்த குரல் அந்த உரையாடலை நிகழ்த்தியவரின் குரல்தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் துல்லியத்தினை அந்த வாக்குமூலத்தை பதிவு செய்தவர் நேரடி அல்லது சூழ்நிலை சாட்சியங்களை கொண்டு நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தில் மாற்றம் செய்யவோ ஏதேனும் ஒரு பகுதியை அழித்து விடவோ வாய்ப்பில்லை என்றால் மட்டுமே அந்த ஆவணத்தை ஏற்றுக்கொள்ள இயலும். அவ்வாறு இல்லையென்றால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்திய சாட்சிய சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அந்த வாக்குமூலம் வழக்கிற்கு சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட ஒலிநாடா கவனமாக முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த உரையாடல் தெளிவாக கேட்கும் வகையில் இருக்க வேண்டும். அந்த உரையாடலின் போது அதற்கு இடையூறு செய்யும் வகையில் வேறு எந்தவிதமான சப்தங்களும் அதில் இருக்கக்கூடாது. ஒலிக்கருவி மூலம் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை ஏற்றுக் கொள்ளும் போது நீதிமன்றம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள் துல்லியமாக, கோர்வையாக இல்லையென்றால் அதனை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளதாக கூறினார்.
எனவே ஒரு உரிமையியல் வழக்கில் ஆடியோ குறுந்தகடு மற்றும் மெமரி கார்டு போன்ற மின்னணு ஆவணங்களை சான்றாவணமாக குறியீடு செய்ய தடையில்லை என்றும் அதன் உண்மை தன்மையை நிபுணர்கள் குழு மூலம் சோதிக்க பிரதிவாதி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யலாம் என்றும் வழக்கில் தீர்ப்பு கூறும்போது நீதிமன்றம் மேற்படி மின்னணு ஆவணங்களை ஏற்றுக் கொள்ளவா வேண்டாமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்து தீர்ப்பு வழங்க வேண்டும் என நீதியரசர் திரு. வேலுமணி தீர்ப்பு வழங்கினார்.
CRP. NO – 1415/2017, DT – 27.4.2017
Murugesan Vs Arumugam and Others
2017-4-MLJ-594
இப்படிக்கு தேசிய சட்ட நீதி இயக்கம் 6379434453