சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும்! பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடிதம் !!!
தென்னிந்திய மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு மீண்டும் உயிர் – அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 130-ஐ சுட்டிக்காட்டி வலியுறுத்தல்!
சென்னையில் இந்திய உச்சநீதிமன்றத்தின் (Supreme Court of India) கிளையை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டின் நீண்டகாலக் கோரிக்கையான உச்சநீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைப்பதன் அவசியம் குறித்து அக்கடிதத்தில் பல்வேறு அரசியலமைப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களை அவர் எடுத்துரைத்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 130 !!!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 130-வது பிரிவின்படி, உச்சநீதிமன்றம் டெல்லியில் அல்லது இந்தியத் தலைமை நீதிபதி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் தீர்மானிக்கும் பிற இடங்களிலும் அமரலாம் என்பதை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1980 முதல் தொடரும் கோரிக்கை !!!
சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை 1980-ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு அரசால் முன்வைக்கப்பட்டது. தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த வழக்காடிகள் உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்காக டெல்லிக்குச் செல்ல வேண்டியிருப்பதால் ஏற்படும் பயணச் செலவு, கால விரயம் மற்றும் பொருளாதாரச் சுமைகளையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், 2004, 2006, 2008 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் வழங்கிய பரிந்துரைகளையும், நிரந்தர மண்டல அமர்வுகளின் அவசியத்தை வலியுறுத்திய சட்ட ஆணைய அறிக்கைகளையும் குறிப்பிட்டுள்ளார்.
2016 உச்சநீதிமன்ற வழக்கு
உச்சநீதிமன்றக் கிளைகள் அமைப்பது தொடர்பாக W.P. (Civil) No.36/2016 (V. Vasanthakumar Vs. H.C. Bhatia & Ors.) வழக்கில் 13.07.2016 அன்று எழுப்பப்பட்ட சட்டப்பூர்வக் கேள்விகள் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டதையும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 07.08.2007 அன்று நடைபெற்ற உச்சநீதிமன்ற முழு அமர்வுக் கூட்டத்தில், மண்டல அமர்வுகளை அமைப்பது தொடர்பாக முந்தைய நிலைப்பாட்டில் மாற்றம் செய்யத் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டாட்சித் தத்துவத்திற்கான முக்கியத்துவம் !!!
சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைப்பது இந்தியாவின் உண்மையான கூட்டாட்சித் தன்மையை வெளிப்படுத்துவதுடன், தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் உச்சநீதிமன்றத்தை எளிதாக அணுகுவதற்கும் வழிவகுக்கும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், உச்சநீதிமன்றக் கிளையின் நிர்வாகக் கட்டுப்பாடு இந்தியத் தலைமை நீதிபதியிடமே இருக்கும் என்பதால் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைப்பது தொடர்பான நீண்டகாலக் கோரிக்கையை மீண்டும் பரிசீலித்து, உச்சநீதிமன்றத்துடன் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சாதகமான முடிவைப் பெற்றுத்தர வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
